ஜெபிக்கலாமா!

அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?

மத்தேயு 26-40.

நாம் ஏன் ஜெபிக்க வேண்டும். கடவுளே பார்த்து செய்ய மாட்டாரா என பலவிதமான கேள்விகள் நம்மிடையே எழும்புகிறது. 

இயேசுவின் வாழ்வை கவனிப்போம்.  இறைமகனாக , பரிசுத்தராக இருந்த போதும் இயேசு ஜெபித்தார். பணிவாழ்வை ஆரம்பிக்கும் முன்பு  40 நாட்கள் நோன்பிருந்து ஜெபித்தார். அது சாதாரணமான ஒரு ஜெபமல்ல. மிக ஆழமான ஒன்று.  தன் உணவை மறந்து, வசதிகளை மறந்து பாலைவன த்துக்கு  சென்று நாற்பது நாட்கள்  ஊக்கமாக ஜெபித்தார்.  பிற்பட்ட நாட்களில்   அதிகாலை வேளைகளில் இருட்டோடே எழுந்து தனிமையான இடங்களுக்கு சென்று ஜெபித்தார்.  லாசரை உயிர்ப்பிக்கும் போது என் வேண்டுதலுக்கு செவி சாய்த்ததற்கு நன்றி என்று பிதாவை புகழ்கிறார்.  அப்பம் பிடும் போதெல்லாம் இறை புகழ் கூறி ஜெபித்தார். சீடர்களுக்கு ஜெபிக்க கற்று கொடுத்தார். கெத்சேமனே தோட்டத்தில் பிதாவே இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்க கூடுமானால் நீங்கட்டும் என்று தன்னுடைய பொறுக்க முடியாத துன்ப வேளையில் பிதாவின் சித்தத்துக்காக வேண்டினார்.  சிலுவையில் பிதாவே இவர்களை மன்னியும் என்று தனக்கு தீங்கு இழைத்த மனுகுலத்திற்காக பரிந்துரை செய்தார்.  இறுதியில் எல்லாம் நிறைவேறியது.  தந்தையே என் ஆவியை உம் கையில் ஒப்பு கொடுக்கிறேன் என்று சொல்லி ஜெபித்து உலக வாழ்வை முடித்தார். 

இயேசுகிறிஸ்துவின் ஜெப வாழ்வு நமக்கு  முன்மாதிரியாக விளங்குகிறது. நமது ஜெப வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என  வாழ்ந்து காட்டியவர் இயேசு. 

அவருடைய இறை பணி வாழ்க்கையின் ஆரம்பமும், முடிவும் ஜெபமாகத்தான் இருந்தது. . . 

நமக்கும் கடவுளுக்கும் இடையே  இருக்கும் தனிப்பட்ட உறவு ஜெபத்தின் மூலமாக வெளிப்பட வேண்டும். நாம்  சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும்.  நாம் ஆண்டவரிடம் கேட்டதை பெற்று கொண்டோம் என்ற விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும் . விருப்பத்தோடு ஜெபிக்க வேண்டும் .

ஆண்டவரே உமக்கு நன்றி. ஆண்டவரே நீர் தந்தையோடு ஒன்றாய் இருந்தது போல நாங்களும் உம்மோடு நிலைத்து இருக்க அருள் தாரும். உடலோ வலிமையற்றது. எனவே எங்கள் சோர்வுகளை நீக்கி , ஆத்துமாவிலே பலம் கொண்டு இன்னும் உம்மை கிட்டி சேர,  ஜெபிக்கும் வரத்தை எங்களுக்கு தாரும். எல்லோரையும் ஆசீர்வதியும். ஆமென்.