கடவுளின் மாட்சி
அவர் இதைக் கேட்டு, “இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார் - யோவான் 11:4. கடவுள் செய்கிற பல காரியங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனென்றால், நம்முடைய அறிவு குறைவானது. ஆனால் அவரில் அன்பு கொண்டுள்ளவர்களுக்கு அவர் எல்லாம் நன்மையாக செய்வார்.
இலாசர் வியாதிப்பட்டு சாகும் தருவாயில் அவருடைய சகோதரிகள் இயேசுவினிடத்தில் ஆள் அனுப்பினார்கள். ஆனால் இயேசு வரவில்லை. முடிவாக இலாசரு இறந்தார். அவர் இறந்து நான்கு நாட்களுக்கு பின்புதான் இயேசு அந்த இடத்திற்கு வந்தார். மார்த்தாள் கூட ஆண்டவரே நீர் இங்கிருந்து இருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்கிறாள். இயேசு இலாசரை உயிரோடு எழுப்ப வேண்டும். அதன் மூலம் பிதா மகிமை அடைய வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார்.
நம் வீடுகளில் பெரிய துன்பங்கள், நோய்கள் வரும் போது எதிர்பாராத துயர நிகழ்வுகள் நிகழும் போது, காரணம் தெரியாமல் தவிக்கிறோம். ஏன் இப்படி நடந்தது என தவிக்கிறோம். ஆண்டவர் நம் வாழ்வில் ஒன்றை அனுமதிக்கிறார் என்றால் அது நன்மைக்கே. ஒரு போதும் கடவுள் தீமையை செய்பவர் இல்லை. எனவே அவர் செய்வது என்னவென்று இப்போது தெரியாது. பின்னரே புரியும்.
ஜெபம்: ஆண்டவரே நாங்கள் உம் பிள்ளைகள். அப்பா நீர் எங்களுக்கு செய்வது எல்லாம் எங்களுடைய நன்மைக்கு தான் என்பதை நாங்கள் உணர்ந்து உம் திட்டத்துக்கு கீழ் பணிந்து வாழ வரம் தாரும். ஆமென்.