இறுதிவரை உண்மையான போராட்டம் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும்,
நோயிலும் ஒருவர் இன்னொருவருக்கு
உண்மையுள்ளவர்களாய் இருப்பதே திருமணம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹீதர் மோஷர் மகிழ்ச்சியாகத் திருமணம் செய்துகொண்ட சில மணிநேரங்களிலேயே இறப்பைச் சந்தித்தார். மே மாதம் 2015ஆம் ஆண்டு நடன வகுப்பில் ஹீதரும் டேவிட்டும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினர். ஆனால், 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் ஓர் அதிர்ச்சி இவர்களுக்குக் காத்திருந்தது. ஹீதருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது அன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

அன்று இரவே ஹீதரின் வீட்டுக்குச் சென்ற டேவிட் ஹீதரிடம் தன்னைத் திருமணம் செய்யுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், ஹீதரோ தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதால் டேவிட்டின் கோரிக்கையை மறுத்துவிட்டார். ஆனால், டேவிட்டோ ஹீதரிடம், இந்நோயை அறுவைச் சிகிச்சை செய்வதன் வழியாகக் குணப்படுத்த முடியும், நாம் இருவரும் புற்றுநோயை எதிர்த்துப் போரிடலாம் என்று கூறி, தனது கோரிக்கையை ஏற்குமாறு பணித்தார். ஹீதரும் நலம் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் திருமணத்துக்கு ஒப்புதல் கூறினார்.

நாளுக்கு நாள் ஹீதர் மோசமாகிக்கொண்டே சென்றார். நாளடைவில் இந்நோய் மூளைவரை பரவியது. ஆனால், கொஞ்சம்கூட அச்சமோ, அவநம்பிக்கையோ அவரிடம் காணப்படவில்லை. ஆனால், அவரின் நிலை மிக மோசமாகவே சென்றது. உயிர் காக்கும் கருவிகள் மூலமே சில நாள்கள் வாழ முடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் நாள் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தனர். ஆனால், மருத்துவர்கள் இதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியதால், டிசம்பர் மாதம் 22ஆம் நாள் அன்று தூய பிரான்சிஸ் ஆலயத்தில் திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்தனர். அந்த நாள் வந்தது. இருவரும் திருமண ஆடைகளை அணிந்திருந்தனர். மருத்துவர்களின் உதவியோடு படுக்கையில் இருந்தபடியே ஆலயம் வந்தார் ஹீதர் மோஷர். நண்பர்களும் உறவினர்களும் இவர்களை வாழ்த்த இருவரும் திருமண மோதிரம் மாற்றிக் கொண்டனர். திருமண வாக்குறுதியைச் சொன்னதும் விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர்போல இரண்டு கைகளையும் உற்சாகமாக மேலே எழுப்பித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஹீதர். மறுநாள் ஹீதர் மறைந்தார். முதல் நாள் திருமணம் நடைபெற்ற அதே ஆலயத்தில் மறுநாள் ஹீதரின் இறுதிச் சடங்கும் நடந்தது.

திருமண அன்பு உள்ளத்து உணர்வுகளுக்கும் உடல் சார்ந்த செயல்களுக்கும் ஒரு தனிப்பட்ட மாண்பை அளிக்கும் திறன் கொண்டது.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image