தெருவிளக்கு கோபிநாத் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

ஆசிரியர் - மாணவன் உறவு என்பது அம்மா - குழந்தை உறவைப் போன்றது.

ஆசிரியப்பணி என்பது இறைவனின் அழைப்பு. இந்த உன்னதமான அழைப்பைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஒவ்வோர் ஆசிரியரும் பேறுபெற்றவர்கள். ஏனென்றால், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியர்களே.

அந்த வகையில் ஆசிரியர் குலத்துக்கே பெருமை சேர்த்துக்கொண்டிருப்பவர் தெருவிளக்கு கோபிநாத் என்பவர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட, ராஜா குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் இவர்.

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இவர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மாணவர்கள் அணிகின்ற சீருடையை இவரும் அணிந்து புரட்சி செய்து வருகிறார்.

பாடம் எளிதாக மாணவர்களுக்குப் புரியும் வகையில் திருக்குறளைக் கற்றுக்கொடுக்கும்போது வள்ளுவரைப்போன்றும், ஓடி விளையாடு பாப்பா பாடல் சொல்லிக்கொடுக்கும்போது பாரதியாரைப் போன்றும், ஆத்திச்சூடியைக் கற்றுக்கொடுக்கும்போது அவ்வை பாட்டியைப் போன்றும் வேடம் அணிந்து பாடம் நடத்துகின்றார்.

மேலும்,ஓவியம்,பாடல், இசை, நடனம், சிலம்பம் என எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் கோபிநாத் பாரம்பரியத் தமிழ் கலைகளையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஒருபோதும் தவறியதில்லை.

அதுமட்டுமன்றி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் ‘தெருவிளக்கு இரவுப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். 2017ஆம் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் இவருக்கு 'ஆசிரியப் பணியில் புதுமைக்காக' சிறப்பு விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

ஒவ்வோர் ஆசிரியரும் பேறுபெற்றவர்கள். ஏனென்றால், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் இவர்களே. 


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image