ஆலய மணியின் ஓசை | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

ஈஸ்டர் பெருவிழா அருகில் இருந்தது. லூர்துபுரம் கிராம மக்கள் பங்குத்தந்தையிடம் சென்று கோரிக்கை ஒன்றை வைத்தனர். ''சில நாட்களாக ஆலயமணி ஒலிக்கப்படவில்லை. ஈஸ்டர் திருவிழாவில் ஆலயமணி ஒலிக்க வேண்டும்" என்று கேட்டார்கள்.

லூர்துபுரம் இயற்கை வளம் நிறைந்த ஒரு கிறிஸ்தவ கிராமம். கிராமத்தின் மத்தியில் லூர்து அன்னைக்கு அழகான ஆலயம். ஆலயத்தின் முகப்பில் ஓங்கி உயர்ந்த கம்பீரமான கோபுரம் கோபுரத்தில் இனிய இசை தரும் ஆலயமணி. திருவாளர் லூர்துசாமி தினமும் அதிகாலையில் எழுந்து ஆலயக் கதவுகளைத் திறந்து, ஐந்து மணிக்கு மணியை அடிப்பார். மணியோசையைக் கேட்டதும் கிராமத்து மக்கள் எழுந்து தங்கள் வேலையைத் தொடங்குவார்கள். ஆலயமணியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை அவரே சரிசெய்து, தினமும் தவறாது மணி அடித்துவிடுவார். அவரது நேர்மையான பணியைப் பாராட்டி மாதம் ரூ.500/- கொடுக்கப்பட்டது. பணத்துக்காக அவர் பணி செய்யவில்லை. ஆனால் மாதாவுடைய மகிமைக்காக இந்தப் பணியை மகிழ்ச்சியுடன் செய்து வந்தார்.

அந்தக் கிராமத்தில் படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் பலர் வேலையின்றி இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கூட்டம் போட்டனர். அதில் 'படித்தவர்கள் மட்டும்தான் கோயில் மணி அடிக்க வேண்டும்' என்று முடிவு செய்தார்கள். லூர்துசாமி படிக்காதவர். அவரது வேலை போய்விட்டது. வேலை போனதற்காக லூர்துசாமி கவலைப்படவில்லை.


ஆனால் மாதாவின் மகிமைக்காக மணியடிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

லூர்துசாமி கடின உழைப்பாளி. எந்த வேலையையும் நேர்மையோடும் மகிழ்ச்சியோடும் செய்கிறவர். ஒரு சிறிய காய்கறிக் கடையை வீட்டிற்கு அருகில் வைத்தார். நல்ல வியாபாரம். பெரிய கடையாக மாறியது. சில மாதங்களில் அருகில் இருக்கும் நகருக்குச் சென்றார். கடைவியாபாரத்தை அங்கும் தொடங்கினார். பத்துக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்தார். "செய்யும் தொழிலே தெய்வம்" என்று கருதி உழைத்தவர் லூர்துசாமி.

படித்த இளைஞர் ஒருவர் ஆலயமணியடிக்க நியமிக்கப்பட்டார். சில மாதங்கள் அதிகாலையில் தினமும் மணியின் ஓசை கேட்டது. அதன்பிறகு ஒரு மாதமாக ஆலயமணி அடிக்கப்படவில்லை. காரணம் மணி பழுதடைந்துவிட்டது. அதை சரிசெய்ய பொறியாளரைத் தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மக்கள் பங்குத்தந்தையை அணுகினர் .

பங்குத்தந்தை திருவாளர் லூர்துசாமியை கடைவியாபாரத்தை விட்டுவிட்டு வந்தவர், இரண்டு மணி நேரத்தில் மணியை அழைத்தார். சரிசெய்து முடித்தார். அன்று இரவு ஈஸ்டர் திருவிழா. நடுஇரவு திருப்பலியில் இசைக்கருவிகள் இசைக்க, 'உன்னதங்களிலே' என்ற கீதம் பாட, ஆலயமணி கம்பீரமாக ஒலித்தது. பல நாட்களுக்குப் பிறகு மணியோசையைக் கேட்ட மக்களுடைய இதயங்கள் பேரானந்தம் அடைந்தன.

நமது படிப்பு ஏட்டுச் சுரைக்காயாக இருந்துவிடக்கூடாது.
 

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image