மறைக்கல்வியின் பிறப்பிடம் : குடும்பம் | VeritasTamil
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் பெரும்பாலும் ஓரிரு ஜெபங்களை மனப்பாடம் செய்து வைத்திருப்பதை காண முடியும். சிறு வயதில் கற்றுக்கொண்ட ஜெபங்கள் "அருள் நிறைந்த மரியே" மற்றும் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபமாக இருக்கலாம். வளர்ந்த பின்பும் எப்பொழுதெல்லாம் கடவுளுடைய கிருபையின் தேவையை உணர்கின்றார்களோ அல்லது இருளின் அருகாமையில் வெளிச்சம் தேட முயற்சி செய்கின்றார்களோ, சிறுவயதில் மனப்பாடம் செய்த அவ்வகையான ஜெபங்களே ஒரு சிறிய தீக்குச்சியாய் வழியினை மிளிர செய்யும். கிறிஸ்தவம் ஒரு வழிபாட்டு முறை அல்ல மாறாக வாழ்க்கை முறை என்பதின் அர்த்தம் ஜெபத்தோடு கூடிய கிறிஸ்துவ வாழ்வியல் முறையே. அந்த வாழ்வியல் முறைக்கு அடித்தளமாய் இருப்பது மறைக்கல்வி வகுப்புகள். பெரும்பாலும் நம் குடும்பத்தில் தாத்தா பாட்டி அல்லது பெற்றோர்களே நமது முதன்மை மறைக்கல்வியாளர்கள். முத்தமே, கடவுளை உணர்ந்து கொள்ள முயலும் முயற்சியின் முதன்மை பரிமாற்றம். இயேசு கிறிஸ்துவின் அல்லது புனிதர்களின் படங்களும், சுரூபங்களும் முதன்மை மறைக்கல்வி புத்தகங்கள். கைக்குழந்தைகளிடம் "இயேசப்பாவுக்கு முத்தம் கொடு" "மாதாவுக்கு முத்தம் கொடு" என்பதில் ஆரம்பித்து, புனிதர்களின் விழா கொண்டாட்டத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதில் வரை ஆரம்பமாகிறது மறைக்கல்வி வகுப்புகள்.
இதிலே நின்று விடுவதல்ல கிறிஸ்தவம். இந்த ஆரம்பம் எல்லைகளற்ற கடவுளின் பேரன்பை உணர்ந்து கொள்ள எடுத்து வைக்கும் முதல் அடி. கிறிஸ்துவின் வாழ்வியல் முறைகளை தன் வாழ்வில் பிரதிபலிக்க அவரைப் பற்றிய அறிந்து உணர்தல் முக்கியம். அதற்காகத்தான் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புனிதர்கள், மறை வல்லுநர்கள், இறையியல் தந்தையர்கள் விசுவாசத்தின் அடிப்படை கோட்பாடுகளை காலம் சார்ந்த மொழிகளில் பதிவேற்றிக்கொண்டிருந்தனர். குறிப்பாக திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் முனைப்பில் வெளிவந்த மறைக்கல்வி நூல் ஆகச்சிறந்த கத்தோலிக்க போதனைகளின் ஒட்டுமொத்த தொகுப்பாக கருதப்படுகிறது. அதைப்போல திருமறைக்கல்வி சுருக்கம் (Compendium of the Catechism of the Catholic Church) என்னும் நூல் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் என்னும் பெரிய நூலின் சுருக்கமாகவும், அதன் உள்ளடக்கத்தை வினா-விடை வடிவில் தொகுத்துத் தருகின்ற கையேடாகவும் அமைந்துள்ளது. மக்கள் கத்தோலிக்க திருச்சபையின் போதனையை ஆழமாக அறிந்திடவும், அதைப் பயிற்றுவிப்பதில் ஆர்வம் கொண்டிடவும் இந்நூல் உதவும் என்று இந்நூலை வெளியிட்ட திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், இதுவே கத்தோலிக்க திருச்சபையின் அடிப்படை நம்பிக்கை. இந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு "உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" என்ற அவரின் கட்டளைக்கு ஏற்ப திருச்சபை என்றும் அவரின் "பாடுகளையும், இறப்பையும், உயிர்ப்பையும் மற்றும் மீண்டும் வருவார்" என்று பறைசாற்றுக் கொண்டிருக்கின்றது திருச்சபை. திருச்சபை என்றால் மக்கள் இனத்தவர்களின் கூட்டமைப்பு என்று பொருள் கொள்ளலாம். இந்த மக்கள் கூட்டமைப்பு யாரெனில் கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு அவர் மீது விசுவாசம் கொண்ட அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்கின்ற வாழ்வியல் முறை. திருத்தூதர் பணி கூறுவது போல கிறிஸ்துவின் விண்ணேற்புக்கு பின்பு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் ஒன்று கூடி ஒரே மனதோடு வாழ்ந்து வந்தார்கள், மக்கள் அனைவரிடமும் நற்பெயர் பெற்று இருந்ததாக வாசிக்கின்றோம். கிறிஸ்துவை பற்றிய பறைசாற்றுதலின் முதல் சாட்சியம் ஒரே மனித மனங்களாக வாழ ஒன்று கூடியது. இன்றைய உலகளாவிய திருச்சபையில் அனைத்து பன்முக சமூகமும், கலாச்சார குழுக்களும், மொழி வேறுபாடற்ற பண்பாட்டு தளங்களைக் கொண்ட மக்களினங்களும் மேற்கொள்கின்ற விசுவாச பயணத்தை பார்க்கின்றோம். இப்பயணம் தடையின்றி, இடர்களை வெற்றிகொள்ளும் தன்மை உடையதாக இருப்பதற்கு குடும்பம் மிகப்பெரிய பங்கினை வகுக்கிறது. குடும்பத்தில் கற்றுக் கொடுக்கப்படுகின்ற நற்செயல்களும் நற்பண்புகளும் சுகமான சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் பொருட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜெபத்தினை பற்றிய உரையில், குழந்தைகளுக்கு "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்கின்ற சிலுவை அடையாளத்தை கற்றுக் கொடுப்பதே குழந்தைகளின் ஆன்மீக வாழ்வுக்கான வாயில் என்பார். மேலும் "சிலுவை அடையாளத்தை சரியாக போடத் தெரியாத குழந்தைகளை பார்க்கையில் எனது மனம் வலிக்கிறது" என்று குழந்தைகளுக்கான ஆன்மீகக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார். நமது குடும்பத்தில் குழந்தைகளுக்கான கல்வியும் விளையாட்டும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மறைக்கல்வியும் நமது விசுவாசத்தை பற்றிய புரிதலும் அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலியில் பங்கெடுத்து கிறிஸ்துவ நெறியினில் குழந்தைகளை வளர்த்தெடுப்பது குடும்பத்தாரின் கடமை.