கேடு நினைத்தால் நீ கெடுவாய்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
16 மார்ச் 2024
தவக்காலம் 4ஆம் வாரம் -சனி
எரேமியா 11: 18-20
யோவான் 7: 40-53
முதல் வாசகம் :
எரேமியா இறைவாக்கினரை ஒருவகையில் இயேசுவின் முன்னோடி என்றும் கூறலாம். அவரது 46 ஆண்டு இறைவாக்குப் பணியில் அவர் சந்தித்த சவால்கள், இன்னல்கள், இடர்பாடுகள் கொஞ்சமல்ல. சோக ராகமே அவரது சொத்தானது. இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் காலத்து யூதச் சமயத் தலைவர்கள் இயேசுவுக்கு எதிராக சதி செய்வது போல, எரேமியாவும், அவரது போதனையை எதிர்த்தவர்கள் அவருக்கு சதி செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்.
ஆயினும்கூட, "நம்பிக்கையுள்ள செம்மறி படுகொலைக்குக் கொண்டு செல்லப்பட்டது போல," எரேமியாவும் தயங்காமல் இறைப்பணியில் முன்னோக்கிச் செல்ல தயாராக இருந்தார் என்பதை வாசகம் விவரிக்கிறது. அவர் நீதியுள்ள கடவுள் மீது நம்பிக்கை வைத்தார். துன்பத்துயரக் காலங்களில் கடவுள் உடனிருப்பார் என்பதை முழுமையாக நம்பினார் என்றும் அறிகிறோம்
நற்செய்தி :
புனித யோவானின் நற்செய்தியில், சிலர் இயேசுவை இறைவாக்கினர் அல்லது மேசியா (கிறிஸ்து) என்று நம்பி அவரிடம் நெருங்கி வருவதைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். ஆனால், மறைநூல் அறிஞர்கள், இதர சமயத் தலைவர்கள், பரிசேயர் போன்றோர், தொடர்ந்து இயேசுவை எதிர்த்தனர். அவரை அழிந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டினர்.
இயேசு மெசியாவாக இருந்தால், அவர் பெத்லகேமில் இருந்து வருவார், கலிலேயாவின் ஒரு பகுதியில் இருந்து அல்ல என்று
மறை நூலில் கூறப்பட்டுள்ளபடி மெசியா பெத்லகேமில் இருந்து வருவார் என்று மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், இயேசு "நாசரேத்தின் இயேசு" என்று அழைக்கப்பட்டதாலும், அவர் அதிக காலத்தை கலிலேயாவில் செலவிட்டதாலும் அவரை ‘மெசியா' என்று ஏற்க மறுத்தனர். அதிலும், தாவீதின் மரபிலிருந்துதான் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றும் சிலர் வாதிட்டனர். ஆனால், மறை நூலில் உள்ளபடி இயேசு பெத்லகேமில்தான் பிறந்தார் என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவலர்களிடம் கேள்வி எழுப்பியதற்கு, காவலர்கள் பதில் சொல்லும் போது, இயேசுவைப் போல் இதுவரை யாரும் பேசியதில்லை என்று கூறி தங்கள் தயக்கத்தை வெளிப்படுத்தினர்.
காவலாளிகளிடம் கோபம் கொண்ட தலைமைக் குருக்கள் மற்றும் பரிசேயர் “இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர். அதற்கு, . அங்கிருந்த பரிசேயருள் இயேசுவை அறிந்திருந்த ஒருவரான நிக்கதேம் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கூறினார்.
சிந்தனைக்கு :
முதல் வாசகத்தில், எரேமியாவின் இறைவாக்கை ஏற்காதவர் அவரைத் தீர்த்துக்கட்ட முனைந்தனர். அவ்வாறே நற்செய்தியிலும், யூதர் சிலர் இயேசு கிறிஸ்துவைக் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், அவரையும் கொன்றுவிட திட்டம் தீட்டினர்.
“கலிலேயாவிலிருந்து மெசியா வருவாரா?” தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகின்றது” என்று வாதிட்ட மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்கள் மத்தியில், பரிசேயர்களுள் ஒருவராகிய நிக்கதேம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்ற வார்த்தைகளை உதிர்க்கின்றார்.
மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களும் பெரிய போதகர்களாக அல்லது திருச்சட்டம் அறிந்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனாலும், அவர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி நாடகம் ஆடினர். இயேசு எங்குப் பிறந்தார் என்று அவர்கள் ஆய்ந்துணர முற்படவில்லை. மாறாக, கலிலேயாவிலிருந்து மெசியா/ இறைவாக்கினர் வருவாரா? என்ற குறுகிய சிந்தனையோடு செயல்பட்டனர். எனவேதான், பரிசேயர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஒரு பரிசேயரான நிக்கதேம் துணிவோடு, முன்வந்து இயேசுவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் அவர் மேல் சாற்றப்படும் குற்றச்சாட்டை கண்டிக்கிறார்.
அன்றுபோல் இன்றும் நம் மத்தியிலும் பலர் தாங்கள் நினைப்பதுதான் சரி என்ற எண்ணத்தில் பிறரைப் பற்றி தவறாக, கதைக் கட்டுவதில் ஆர்வம் மிக்கவர்களாக இருக்கிறோம். இல்லாதது பொல்லாதது பேசுவதில் வல்லவர்களாக விளங்குகிறோம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (கறள் 423)
என்பது வள்ளுவரின் வாக்கு. எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின் பொருளாக உள்ளது. எதையும் ஆய்ந்தறிய வேண்டும். உண்மைக்குப் புறம்பாக பேசும்போது, நாம் பாவம் செய்கிறோம். ‘பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக’ என்று கடவுள் நமக்கு அறிவுறித்தியுள்ளார்.
புறம் பேசுதல் அழிவுக்கு வழிவகுக்கும். உறவுகளை வெகுவாகப் பாதிக்கும். பரிசேயர்கள், மறை நூல் அறிஞர்கள் இயேசுவைப் பற்றிய உண்மைகள் அறியாது எடுத்த நடவடிக்கைகளால் ஒரு பாவமும் அறியா செம்மறியாகிய இயேசு மீதான கொலைக்குற்றத்திற்கு ஆளானார்கள்.
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல், பொறுமையுள்ளவர், பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், எப்போதும் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று, புகழுடன் விளங்குவார் என்பதை நுனைவில் கொண்டு நீதி நேர்மையோடுவாழ முற்படுவோம். ஏற்கனவே, கூறியது போல, தவக்காலம் அருளின் காலம். பிறரைப் பற்றி நம்மில் நிறைந்துள்ள முன்சார்பு எண்ணகங்களை தூக்கி எறிந்துவிட்டு, திறந்த மனதோடு அனைவரையும் அரவணைப்போம்.
இறைவேண்டல் :
‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்’ என்றுரைத்த ஆண்டவரே, நான் என்னை அன்பு செய்வதைப் போல் அடுத்திருப்பவரையும் அன்பு செய்து வாழும் வரத்தைத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452