விண்ணக வாழ்வுக்கு மண்ணக வாழ்வு சிறக்கட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
29 பிப்ரவரி 2024
தவக்காலம் 2ஆம் வாரம் - வியாழன்
எரேமியா 17: 5-10
லூக்கா 16: 19-31
முதல் வாசகம்:
முதல் வாசகமானது, ஆண்டவர் நம் முன் வைக்கும் ஒரு முக்கிய செய்தியாகும். அது ஒரு நபர் எங்கு நம்பிக்கை வைக்கிறார் என்பதன் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு விளைவுகளை வெளிப்படுத்துகிறது.
முதலவதாக, மக்கள் மீதும் தனது சொந்த ஆற்றல் மீதும் நம்பிக்கை வைத்து இறைவனை விட்டு விலகுகிறவன் சபிக்கப்படுவான் என்பதோடு, இத்தகையவரின் வாழ்வு பாழான பாலைநிலத்தில் காணப்படும் ஒரு தரிசு புதருக்கு ஒப்பிடப்படுகிறது. அத்தகைய நபர் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க மாட்டார் என்றும், அவரில் இருந்து நல்லது எதுவும் வெளிப்படாது என்றும் கூறப்படுகிறது.
இரண்டாம் நபர், ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்திருப்பவர். ஆண்டவரின் ஆற்றலிலும் ஆசீரிலும் நம்பிக்கை வைப்பவர் பேறுபெற்றவர் என்றும், ஆண்டவரே அவரது நம்பிக்கை. இத்தகையவர் ஆற்றோரம் நடப்பட்ட மரம் போலாவர் என்று விவரிக்கிறார் எரேமியா.
இவர் எப்போதும் செழிப்பாகவும் பிறருக்குப் பலன் தருபவருமாக இருப்பார். இவர் தான் சந்திக்கும் சவால் மிக்க சூழல்களுக்கு அஞ்சமாட்டார் என்றும், இரு வித மனிதரின் நம்பிக்கை வாழ்வை வேறுபடுத்தி காட்டுகிறார் இறைவாக்கினர் எரேமியா.
நற்செய்தி
இந்நற்செய்தி லூக்கா மட்டுமே குறிப்பிடும் ‘செல்வரும் இலாசரும்’ எனும் இயேசுவின் உவமையைத் தாங்கி வருகிறது.
அமைவு:
பரிசேயரை நோக்கி இயேசு இந்த உவமையை கூறுகிறார். இந்த உவமையை இயேசு இரு காதாப்பாத்திரங்களைக் கொண்டு உருவாக்குகிறார். அவர்கள்:
1.செல்வந்தன்: தினமும் விலையுயர்ந்த ஆடை அணிந்து, விருந்து கொண்டாடி, வசதியாக வாழ்பவன்.
2.இலாசர்: பெரும் ஏழை. அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்து, செல்வந்தரின் வீட்டில் வீசி எறியப்படும் உணவுக்காக ஏங்கிக் காத்திருப்பார்.
இருவரும் இறந்தனர். இறப்பிற்குப் பிறகு, இலாசர் மட்டும் வானதூதர்களால் ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டார். செல்வந்தரோ பாதாளத்தில் (நரகத்தில்) துன்புற்றார்.
செல்வந்தனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையிலான உரையாடல்:
1.செல்வந்தன் தாங்கொன்னா வேதனையில், இரக்கத்திற்கு ஆபிரகாமிடம் இறைஞ்சுகிறான்.
2.ஆபிரகாமோ, செல்வந்தன் இலாசரைப்போல் இன்பத்தை அனுபவிக்க, ஆறுதலை அடையை வழி கிடையாது என்கிறார்.
3.அடுத்து, தான் அடையும் துன்பத்தை, கொடுமையை தன் உடன் பிறர்தோர் அடையக்கூடாது என்றுணர்ந்து, இலாசரை மண்ணுலகிற்கு அனுப்பி, அவர்களுக்கு அறிவிப்புகட்ட உதவுமாறு ஆபிரகாமிடம் விண்ணப்பிக்கிறார்.
4.அதற்கு, ஆபிரகாம், அவர்களுக்கு நல்வழிகாட்ட மோசேயின் சட்டங்களும், இறைவாக்கினரின் படிப்பினைகளும் அங்கே உண்டு, அவை போதுமானை என்று பதில் கூறுகிறார்.
5.ஆபிரகாமின் பதிலுக்கு மறுமொழியாக, துன்புறும் செல்வந்தர், இறந்தவரில் ஒருவர் உயிர்த்து மண்ணகம் சென்று போதிப்பதே சிறப்பு என்கிறார். அவர்கள் நம்பி மனந்திரும்புவார்கள் என்கிறார்.
6.ஆபிரகாமை, மோசேவுக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாயக்காத எவரும், வேறு எவருக்கும் செவிசாயக்கமாட்டார்கள் மறுக்கிறார்.
சிந்தனைக்கு :
நற்செய்தியில், ஏழை எளியோரை புறக்கணிப்பதனால் ஏற்படும் விளைவுகளையும், ஆனவம், அகம்பாவம் இவற்றால் ஆன்மவுக்கு விளையக்கூடிய தீங்கையும் சுட்டிக்காட்டடுகிறார். இயேசு தெளிவுப்படுத்தனார். முதல் வாசகத்தில் நம்மில் இருவகை மனிதர் உண்டு என்பதை எரேமியா சுட்டிக்காட்டினதையும் மனதில்கொள்ள வேண்டும்.
கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நல்லது செய்து வாழ்வோர் இறை ஆசீரைப் பெற்று இலாசரைப்போல் ஒரு நாள் வான்வீட்டில் மகிழ்ந்திருப்பர். மாறாக, வாழ்நாளில் பாவத்திற்கு மேல் பாவம் செய்தவன் தொடர்ந்து பெரும் துன்பம் அனுபவிக்க நேரும். இது உண்மை.
இங்கு, மனம் போன போக்கில் வாழ்பவர்களுக்கு எல்லாம் இன்பமயமாகத்தான் இருக்கும். இம்மை வாழ்வான இவ்வுலக வாழ்வே, உண்மை என்றும், மறுமை எனும் இறப்பிற்குப் பின் அடையும் வாழ்வு என்பது வெறும் கற்பனை என்றுதான் நம்மில் பலரும் எண்ணுகிறோம். இதனால், இம்மை வாழ்வில் மனிதநேயமற்ற, தன்னல வாழ்வை விரும்பி ஏற்கிறோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள் 50)
இக்குறளில் வள்ளுவர் இவ்வுலகில் நீதிநேர்மையோடும், மனதநேயத்தோடும் வாழ்பவன், இந்த வாழ்க்கை முடிந்த பின் கட்டாயம் வானுலகில் அங்குள்ள வானதூதர்களோடு இணைந்து, கடவுள் உடனிருப்பில் மகிழ்ந்திருப்பான் என்கிறார்.
'தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதி முழங்கியது சமுதாயத்தின் உணர்வைப் பிரதிப்பலிக்கின்றது. இது நமக்கு மிகவும் பொருந்தும்.
நோன்பு, இறைவேண்டல், அறச் செயல்கள் என்பதெல்லாம் கடமைக்கு என்றெண்ணி, நாற்பது நாள்களுக்குள் இவற்றை முடித்துக்கொண்டால், தவக்காலம் எதற்கு? தவக்காலம் இறையருளின் காலம் என்பர். நல்ல கிறிஸ்தவ இம்மை வாழ்வுக்கு நம்மை பயிற்றுவிக்கும் காலம். இன்பகரமான மறுமை வாழ்வுக்கு அடித்தளமிடும் உன்னத காலம். இன்று மனமாற்றத்திற்கு அழைக்கிறது இக்காலம்..
இறைவேண்டல்:
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்றுரைத்த ஆண்டவரே, இலாசரைப்போல் மறுமையில் நான் உம்மில் இன்புற்றிருக்க இம்மையில் என்னை நல்வழிப்படுத்தவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink