புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவ பகிர்வு ! | Veritas Tamil

கோலாலம்பூர் மறைமாவட்டத்தின் புனித இக்னேஷியஸ் தேவாலயத்தின் (St. Ignatius Church) குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் கூடுகின்றனர்.

மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya) நகரில் உள்ள புனித இக்னேஷியஸ் தேவாலயத்தின் கூட்ட அறையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வழக்கமாகக் கூடுகின்றனர். இந்த பங்கானது கோலாலம்பூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் வருகிறது.

சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆதரவு குழு, கடந்த பத்து ஆண்டுகளாக புனித இக்னேஷியஸ் தேவாலயத்தின் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதில் புற்றுநோயுடன் போராடுபவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழு, நோய், சிகிச்சை மற்றும் விசுவாசம் குறித்த உண்மைகளை வெளிப்படையாகப் பேச ஒரு தளத்தை வழங்குகிறது.

உறுப்பினர்கள் கோலாலம்பூர் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளிலிருந்து இந்த மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றனர். அறுவை சிகிச்சைகள், சிகிச்சைகள் முதல் நீண்ட கால மருந்துகள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகள் வரை புற்றுநோய் ஏற்படுத்தும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் குறித்து அவர்கள் பேசுகிறார்கள்.

"புற்றுநோயிலிருந்து மீண்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய பல சிறிய விஷயங்கள் உள்ளன," என்று 2016-ல் இந்த ஆதரவு குழுவைத் தொடங்கிய 68 வயதான பெர்சி சியூ (Percey Chiew) கூறுகிறார். "நாங்கள் எங்களுக்குள்ளேயே ஜோக் சொல்லி சிரித்துக் கொள்வோம்."

தனிப்பட்ட போராட்டங்களைப் பகிர்ந்து கொள்வது நோயைச் சமாளிக்க உதவுகிறது என்று சியூ நம்புகிறார். "நாம் எவ்வளவு அதிகமாகப் பகிர்ந்து கொள்கிறோமோ, அவ்வளவு தூரம் சுமை குறைகிறது," என்று அவர் கூறினார். "ஒருவருக்கொருவர் கிறிஸ்துவைக் காணும்போது, விரக்தி இருந்த இடத்தில் நம்பிக்கையைக் காணத் தொடங்குகிறோம்."

பெரும்பாலான உறுப்பினர்கள் புனித இக்னேஷியஸ் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பராமரிப்பாளர்கள் உட்பட ஆதரவு தேடும் எவரும் இதில் சேரலாம். உடல்நலக் குறைவு அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய ஓய்வு காரணமாகச் சில உறுப்பினர்களால் கூட்டங்களுக்கு வர முடிவதில்லை. இருப்பினும், அவர்கள் தொலைபேசி அழைப்புகள், இல்ல சந்திப்புகள், பிரார்த்தனை மற்றும் ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்பில் உள்ளனர்.

43 வயதான கரோலின் ஜோசப், சிரம்பானில் (Seremban) இருந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனம் ஓட்டி வந்து இந்த கூட்டங்களில் கலந்து கொள்கிறார். சினைப்பை புற்றுநோயால் (Ovarian Cancer) பாதிக்கப்பட்டபோது, "ஏன் எனக்கு இந்தத் துன்பம்?" என்று முதலில் கேள்வி கேட்டதாக அவர் கூறினார்.

"பின்னர், கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்பட்டாரே, அதுவும் அநீதிதானே என்று உணர்ந்தேன்," என்று அவர் கூறினார். "நான் எப்போதும் கடவுளிடம் வலிமையைக் கேட்பேன், இப்போது அவர் அந்த வலிமையை நான் எப்படிப் பயன்படுத்துகிறேன் என்று சோதிக்கிறார் என்று உணர்கிறேன்."

பல உறுப்பினர்களுக்கு, இக்குழு உணர்ச்சி மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குகிறது. 78 வயதான பிரான்சிஸ் கூ (Francis Khoo), இக்குழுவை "மிகவும் அர்த்தமுள்ளதாக" விவரிக்கிறார். "சிகிச்சை வெற்றிகரமாக அமையவும், மீண்டும் நோய் வராமல் இருக்கவும் செய்யப்படும் கூட்டுப் பிரார்த்தனை எங்களுக்கு நிம்மதியையும், கடவுள் எங்களுடன் இருக்கிறார் என்ற உறுதியையும் அளிக்கிறது," என்றார் அவர்.

தொண்டை புற்றுநோயால் தனது குரல் வளையை இழந்த பிரான்சிஸ், பேச முடியாத நிலையில் தனது மனைவியின் மூலம் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "நான் அதிகமாகப் பேசுபவன், அதனால் முதலில் விரக்தியடைந்தேன். ஆனால் தியானம் மற்றும் பிரார்த்தனை மூலம் அமைதியைக் கண்டேன்," என்றார்.

75 வயதான ஆன் பூன் (Ann Poon), மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு இப்போது இரண்டாவது முறையாகப் புற்றுநோயை எதிர்கொள்கிறார். "நான் உயிருடன் இருப்பதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.

நிணநீர் புற்றுநோயால் (Lymphoma) பாதிக்கப்பட்ட 70 வயதான கிம் ஆங் கூறுகையில், "முன்பெல்லாம் வாட்ஸ்அப்பில் வரும் 'காலை வணக்கம்' செய்திகள் எனக்கு எரிச்சலூட்டும். ஆனால் இந்த குழுவில் அதற்குப் பெரிய அர்த்தம் உண்டு. யாராவது காலை வணக்கம் சொன்னால், நாம் இன்று உயிருடன் இருக்கிறோம் என்பதே ஒரு ஆசீர்வாதம் என்பதை அது நினைவூட்டுகிறது," என்றார்.

இறுதியாக ,புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் பங்குத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று சியூ நம்புகிறார். "தேவாலயம் என்பது மக்கள் புரிந்துணர்வையும், ஆன்மீக வழிகாட்டுதலையும், தோழமையையும் காணக்கூடிய இடமாகும்," என்று அவர் கூறினார்.