கலங்கரை விளக்கு | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
கலங்கரை விளக்கு
கடற்கரையில் கம்பீரமாய் நின்று எத்தகுப் புயலையும் இயற்கைச் சீற்றங்களையும் துணிவுடன் எதிர்கொள்ளும்
துணிவு உள்ளம்!
யாருக்கு உதவுகிறோம் என்று தெரிந்து கொள்ளாமலேயே உதவி தேவைப்படும் எல்லோருக்கும் வஞ்சனையின்றி உதவிக் கரம் நீட்டும்
உத்தம உள்ளம்!
புயல் சீற்றங்களைத் தன்னால் நிறுத்த முடியாது எனினும்,
புயலில் சிக்கித் தவிப்போருக்குத் தன் ஒளிக்கீற்றை அனுப்பி நம்பிக்கை அளிக்கும் நல்ல உள்ளம்!
நடுக்கடலில் இன்னலில் உழன்று கரை சேர வழி தெரியாது கண்ணீரோடு கலங்கி நிற்கும் கடற்பயணிகளுக்குக் கரம் நீட்டிக் கரை சேர்க்கும்
கனிந்த உள்ளம்!
தண்ணீரில் தத்தளிப்போருக்குத் தன்னலமில்லாமல் தன் ஒளிக்கரம் நீட்டி ஒல்லும் வழி சொல்லும் பிறர்நல உள்ளம்!
கடலில் வழி தவறியோருக்கு ஓடி ஓடி உதவாமல் இருந்தாலும், நின்ற இடத்திலிருந்தே நன்றாய் நற்பணியாற்றும் நனிசிறந்த உள்ளம்!
கலங்கரை விளக்காய் கடவுளும் இப்பிறவிப் பெருங்கடலில் நீந்திக் கரை சேரத் துடிக்கும் நமக்காய் நாளும் உள்ளார் என நயமாய் உணர்வோம்!
வாழ்க வளமுடன் நலமுடன்!!!
எழுத்து
அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.