புதுவாழ்வு | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

வாழ்க்கை என்பது ஒரு பயணம். அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கின்ற மாற்றங்களும் திருப்பு முனைகளும்தான் அழைத்தல்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, திருப்புமுனைகளைச் சந்திக்காதவர்களுக்கு வாழ்க்கை கடினமானதாகவும், அழைத்தல் கேள்விக்குறியாகவும் அமையும். மாற்றங்களைச் சந்திப்பவர்கள் அழைத்தலை உணர்ந்து புதுவாழ்வு வாழ்கிறார்கள். மகிழ்வோடு பயணிக்கிறார்கள். ஒவ்வொரு பக்கமும் புதுமையான சுவாரசியமான கருத்துகளைத் தாங்கியுள்ள நாவலைப்போல, வாழ்வும் அநேக சுவாரசியமான மாற்றங்களைத் தாங்கியுள்ளது. அதனைச் சந்திக்கும்போது நம் அழைத்தல் உறுதிப் படுத்தப்படுகிறது. மாற்றங்களுக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. அவை அன்றாடம் நிகழ்கின்றன.

2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சுரங்கத்துக்குள் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏறக்குறைய 33 தொழிலாளர்கள் 2050 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார்கள். அவர்களின் நிலை என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. 17 நாள்களுக்குப் பிறகு ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்குப் பயன்படுத்தும் துளைபோடும் இயந்திரத்தின் மூலம் 2200 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. உள்ளே சென்ற துளைபோடும் இயந்திரத்தில் "33 தொழிலாளர்களும் உயிருடன் இருக்கிறோம்" என்று எழுதி அனுப்பினார்கள். செய்தி அறிந்தவுடன் குழாய் வழியாக உணவு, நீர், மருந்து ஆகியவை அனுப்பப்பட்டன.

அக்டோபர் 12 அன்று அவர்களுக்கென்று சிறப்பாகச் செய்யப்பட்ட "காப்சூல் மூலமாக ஒவ்வொருவராக வெளிக்கொணரப்பட்டனர். வெளியே வந்த அவர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த மிகப் பெரிய அனுபவத்தை மாற்றமாகக் கண்டனர். தங்கள் அழைத்தலைக் கண்டுணர்ந்து புதுவாழ்வுக்குள் நுழைந்தனர். மாற்றத்தால் கிடைத்த புதுவாழ்வை ரசனையோடு வாழ்ந்தனர். இத்தகைய புதிய வாழ்வை வாழத்தான் இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். அழைத்தலில் இல்லறம், துறவறம் இரண்டுமே ஒன்றுதான்.

ஆனால், மாற்றங்களைச் சந்தித்து, தன்வயப்படுத்திப் புதுவாழ்வு வாழ்வதுதான் முக்கியம். இதற்காகத் துன்பங்கள், துயரங்கள், இடர்ப்பாடுகள், இடிபாடுகள், நோய்கள், வருத்தங்கள் இவற்றை மனஉறுதியோடு சந்தித்து மாற்றம் காணுவோம்... அழைத்தலை உணர்வோம். பெற்றுக் கொண்ட அழைப்பில் உறுதியோடு இருப்போம்.

Daily Program

Livesteam thumbnail