ஏழ்மை நமது சொத்தாகட்டும் | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

ஏழ்மை நமது சொத்தாகட்டும்
நம் ஒவ்வொருவருக்கும் எது அவசியமானதாக இருக்கிறதோ இல்லையோ, பணம் நமது அன்றாட தேவையாக, அவசியமான ஒன்றாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் பணம் வைத்திருந்தால்தான் பணக்காரர்களாக முடியும் என்று நினைக்கிறோம். அப்படி இல்லை, பணம் இல்லையென்றாலும் பணக்காரர்களாக முடியும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? மற்றவர்களை அதிகமாக அன்பு செய்வதில், அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக உதவுவதில், மற்றவர்கள் நம்மை மன்னிக்க முடியாத பட்சத்திலும்கூட அவர்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதில், பொறுமையை கடைபிடிப்பதில், தாழ்ச்சியை கடைபிடிப்பதில், பணக்காரர்களாக இருந்தபோதிலும் ஏழ்மையை வாழ்வாக்குதில் நம்மால் பணக்காரர்களாக உயர்ந்த இடத்தில் இடம்பிடிக்க முடியும். ஏழ்மையின் வெளிப்பாடு அடுத்தவரை நேசிப்பது. நமக்கென இருப்பது ஒரு வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காமல், யாரையும் துன்புறுத்தாமல் வாழ்ந்துவிட்டுச் செல்வதுதான் நமக்கு அழகு. ஏழ்மையின் மற்றொரு வெளிப்பாடகிய தாய்மைப் பண்பையும் நமதாக்குவோம். நம்மை நாம் முற்றிலும் மறந்தவர்களாய் அடுத்தவர்கள் பற்றிய நினைவாகவே இருக்க நம்மை பயிற்றுவிப்போம். மற்றொரு ஏழ்மையின் வெளிப்பாடாகிய உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்போம். எளியவாழ்வு, ஏழைகளோடு தோழமை, ஆண்டவரை மட்டுமே பற்றியிருப்பது, அவருக்காக நம்மை அர்ப்பணிப்பது போன்ற விலைமதிப்பற்ற காரியங்களை நமதாக்குவோம். நமக்காக ஏழையான கிறிஸ்துவுக்காய் நாமும் ஏழையாகத் தயாராவோம்.
புனித பிரான்சிஸ் அசிசியார் உழைத்து வாழும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசை கொண்டவர். ஜைல்சு என்னும் சீடர் உரோமைக்கு திருப்பயணம் சென்றார். கப்பலுக்காக காத்திருந்தார். உழைத்துதான் உண்ண வேண்டும் என்ற கொள்கை அவருக்கு இருந்தது. குடத்தில் வீடு வீடாக தண்ணீர் ஊற்றி சம்பாதித்தார். உரோமாபுரியில் இருந்தபோது காடுகளில் விறகு வெட்டி அதனை தலையில் சுமந்து சென்று விற்று பிழைத்துக்கொண்டார். இவர் புனித துறவி என்பதைக் கண்டு கொண்ட ஒரு பெண் அதிகப்பணம் கொடுக்க முயன்ற போது, இவர் ஒன்றுமே வாங்காமல் ஓடிவிட்டார். அந்த அளவுக்கு ஏழ்மையை கடைபிடித்து வாழ்ந்தவர்கள்தான் புனித அசிசியாரும் அவரின் சீடர்களும் என்றே சொல்லலாம். இன்று நாம் வாழும் சமூகத்தில் பணம் இருந்தால்தான் மதிப்பு என்று நினைத்து அதனை சேர்ப்பதில்தான் நமது முழுகவனம் செலவிடப்படுகிறது. நம்மில் பலர் நம்மிடம் பணம் இருக்கிறது, அதனை மற்றவர்களுக்காக செலவிடலாம் என்று நினைத்து அவர்களுக்கு உதவி செய்தாலும்கூட இன்னும் சிலர் பணம் வைத்திருந்தாலும்கூட அடுத்தவருக்காக நமது பணத்தை செலவிடுவதா என்ற எண்ணத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதவி செய்வதில் நாம் தாராளமாய் இருந்தால் நமக்கு வந்துசேருவதும் தாராளமாக இருக்கும். எனவே தாராள மனம் கொண்டு பிறருக்கு பயனுள்ள வாழ்வு வாழ்வோம்.
Daily Program
