மனிதம் மலரட்டும் … அன்பு பெருகட்டும் … | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நம் அனைவருக்கும் கடவுள் அற்புதமான வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். அந்த வாழ்க்கையை நாம் சிறப்பாக வாழ வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு நெடும் பயணம். அந்த பயணத்தில் நாம் பல நபர்களை சந்திக்க நேரிடும். பார்வையில்லாதவர்கள், கேட்க முடியாதவர்கள், ஊனமுற்றவர்கள், நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், துன்பத்தின் பிடியில் சிக்குண்டு கிடப்பவர்கள், மரணத்தறுவாயில் உள்ளவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் இப்படி ஒவ்வொருவராக அடிக்கிக் கொண்டே போகலாம். இவர்கள் எல்லோருமே வாழ்க்கைப் பயணத்தை கடந்துதான் ஆக வேண்டும் என்பது உலக நியதி. இன்பமோ - துன்பமோ, இணைப்போ - இழப்போ இதில் இயன்றவர்கள் - இயலாதவர்கள் என எல்லோருமே இவற்றைக் கடக்க வேண்டியது கட்டாயம். வாழ்க்கை என்ற பயணத்தை கடக்க நமக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மனிதர்களின் வரிசையில் நமது பெயர் இடம் பெறட்டும்.
உலகில் இன்று மனிதர்கள் உடல் நோயினாலும், உள்ள நோயினாலும் துன்புற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு சுகம் கொடுக்க விரும்பினால் மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது, அவர்களுக்கு நமது கருணையும், கரிசனையும் மிகமிக அவசியம் என்பதனை நாம் உணர வேண்டும். நச்சுப் பாம்புகளின் பற்களால் கூட உம் மக்களை வீழ்த்த முடியவில்லை. உமது இரக்கம் அவர்களுக்குத் துணை நின்று நலம் அளித்தது என்கிறது சாலமோனின் ஞான நூல். நமது உள்ளத்திலும் கருணையும், இரக்கமும் இருந்ததென்றால் நம்மாலும் பிறருக்கு சுகம் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம். அருள் சகோதரி தெரசாவை உலகம் போற்றும் நடமாடும் புனிதையாக, அகிலம் அனைத்திற்கும் அன்னை தெரசாவாக மாற்றியது எது தெரியுமா? நலிந்தவர்கள்மேல் அவர் கொண்டிருந்த கருணை. எனவேதான் அன்னை தெரசாவைக் குறித்து “கருவுற்றிருந்தால் நீர் உம் பிள்ளைகளுக்கு மட்டுமே தாயாகி இருப்பாய், ஆனால் கருணையுற்றதால் உலகிற்கே தாயானாய் என்று எழுதினார்கள். எனவே நாமும் மற்றவர்கள்மேல் இரக்கம் காட்டி நலமான வாழ்வை வளமாக வாழ்வோம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
