அல்லவை நீக்கி நல்லவை காண்போம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
கடவுள் தான் படைத்த படைப்பிலே அனைத்தையும் நல்லது எனக் கண்டார். நாமும்; நல்லவற்றையே காண வேண்டும் என்று தான் விரும்புகிறார். ஆனால் நாம் எல்லாவற்றிலும் நன்மையைக் காண முயல்கிறோமா என்பதுதான் இங்கு கேள்வியாக அமைகிறது. எல்லோரையும் போல நானும் உழைக்கிறேன். ஆனால் என் வாழ்க்கை நிலை உயரவில்லை. நான் எதிர்பார்த்ததெல்லாம் கைநழுவி ஏமாற்றத்தையே தருகின்றது. நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் நம்பிய எதுவுமே நடக்கவில்லை. என்னை விட குறைவாகப் படித்தவர்கள், திறமையானவர்கள் எல்லாம் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் யார் வம்புக்கும் செல்வதில்லை. நான் உண்டு என் வேலையுண்டு என்றுதான் இருக்கின்றேன். ஆனால் எனக்கு மட்டும் ஏன் எல்லாம் தீமையாய் அமைகிறது என்று நம்மில் பலர் புலம்புவதை கேள்விப்பட்டிருப்போம். அவர்களில் ஒருவராக நாம் இருக்கிறோமா என்று யோசித்துப் பார்ப்போம். நாம் பார்க்கின்ற அனைத்து நிகழ்வுகளிலும் நன்மையைக் காண நம் இறைமகன் இயேசு ஒவ்வொரு நாளும் நம்மை அன்போடு அழைக்கின்றார். அவரின் அழைப்பை உணர்வோம். ஆனந்தம் பெறுவோம்.
நம் அனைவரின் வாழ்க்கையிலும் நிகழக்கூடிய தீமை நிரந்தரமானதல்ல, எல்லாமே கடந்து செல்லக்கூடியது, அது சொற்பமாய் சோதிக்கக் கூடியது என்று உணர்ந்தால் அந்த தீமைகள் தானாக மறையும் என்பதை புரிந்து கொள்வோம். எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதன் உண்மையைப் புரிந்து கொண்டால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்ற பரிதவிப்போ, தேவையற்ற எதிர்பார்ப்போ, ஆசையோ நம்மில் எழவே எழாது. எந்தத் தீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு என்ற நம்பிக்கை நமக்குள் பிறக்கும், மனதிலும் அமைதிப் பூ பூக்கும் என்பதை உணர்ந்து கொண்டு மன நிம்மதியோடு வாழ நம்மை பயிற்றுவிப்போம். நம் வாழ்வில் நடக்கும் தீமைகளையெல்லாம் கண்டு மனம் கலக்கமுறக் கூடாது, சோர்ந்து போகக் கூடாது. அதற்கு பதிலாக, அதனாலென்ன? என்று சின்ன அட்டையில் எழுதி நம் பார்வை படும் இடத்தில் வைத்து தீமை நேரும் போது அதனைப் பார்க்கப் பழகும் பழக்கத்தை கையாள்வோம். அப்போது துன்பம் வந்த சுவடு தெரியாமல் தானாக மறைந்துவிடும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.