காலம் அறிந்து செயல்படுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481)

காகம் தன்னினும் வலிமையான கோட்டானை (பெரிய ஆந்தை = கூகை) அதற்குக் கண் தெரியாத பகல் வேளையில் வென்று விடும். அதுபோலப் பகைவரைப் போரில் வெல்வதற்கு, அரசர் அதற்கேற்ற காலத்தை அறிந்து செயல்பட வேண்டும்.

இக்குறளில் வந்திருப்பது எடுத்துக்காட்டு உவமை ஆகும். கூகை என்பது பெரிய கண்களை உடையதும் இரவுப் பொழுதில் இரைதேடக் கூடியதுமான பெரிய ஆந்தையாகும்; இது கோட்டான் என்றும் அறியப்படுகிறது.

ஆந்தையின் மூளையும் உடலும் நன்றாய்ச் செயல்படும் நேரம் இரவு வேளையே. காக்கைகளுக்கு இரவு நேரத்தில் ஆந்தையால் தொந்தரவு. தூக்கத்தைக் கலைத்து விடும். இரைகளைக் கொள்ளையடித்து விடும், கூடுகளைப் பிய்த்துப் போடும், காக்கைக் குஞ்சுகளையும் காயப்படுத்தி விடும், காக்கை எதிர்த்தெழுந்தால் அதைக் கொன்று விடும். இரவு வந்து விட்டாலே அந்த ஆந்தையை நினைத்துக் காக்கைகள் அச்சங்கொள்ளும். காக்கைக் குஞ்சுகளுக்குக் காய்ச்சலும் வந்து விடும்.

பறவைகளின் அரசன் கழுகாரிடம் முறையிடலாம் என்றால் அதைப் பார்க்கவே முடிவதில்லை. என்ன செய்வது? ஆந்தையின் அகந்தைக்கு முடிவு கட்ட வேண்டும். காக்கையின் பொதுக்குழு கூட்டப்பட்டது. பரிந்துரைகள் பறந்து வந்தன.

பாட்டி காக்கா சொன்னது. 'கடவுள்ட்ட ஒப்புக்கொடுத்துட்டு இயேசுவேன்னு இருப்போம்'.

இளம் பெண் காக்கை 'அநீதியை எதிர்த்துப் போராடுவதும் பக்தியே' என்று பேராயர் புனித ஆஸ்கார் ரொமேரோ சொன்னதை நினைவுபடுத்தியது.

இளைஞன் காக்கை, அக்கருத்தை வரவேற்றுப் பேசியது. 'பலருடைய மீட்புக்காக ஒருவர் உயிரைப் பணயம் வைப்பது தாழ்வில்லை' என்று கூறி, தானே முன்வந்தது. திட்டம் வகுக்கப்பட்டது. இளைஞனின் தாயும் தந்தையும் அவைத் தலைவரும் வாழ்த்துக் கூறி வெற்றித் திலகமிட்டு அனுப்பினர்.

பொழுது சாய்ந்தது. இருள் கவ்வியது. இளைஞன் காக்கை ஆந்தை வரும் வழியில் முனகல் ஒலியோடு குற்றுயிராய்க் கிடந்தது. 'ஆந்தையாரே, நீங்கள் கவனமாகச் செல்லுங்கள். உங்களுக்கு வலை விரித்துள்ளனர். இதை ஆந்தையாரிடம் சொல்லப் போகிறேன் என்று நான் சொன்னதும் எல்லாக் காக்கைகளும் என்னைக் கொத்திக் குதறிவிட்டன' என்றது இளைஞன் காக்கை.

அக்காக்கையின் மீது ஆந்தைக்கு இரக்கம் ஏற்பட்டது. முதலுதவி செய்து விட்டுத் தன் வீட்டுக்கு (பாழடைந்த மண்டபம்) அழைத்துச் சென்றது. தன் மனைவி, பிள்ளைகளிடம் நடந்ததைச் சொன்னது. அவ் இளைஞன் காக்கை ஆந்தைக் குடும்பத்துக்கு விருந்தாளியானது.

இரவில் காக்கை தூங்கியது. பகலில் ஆந்தைகள் தூங்கின. காக்கை வலிமையாகக் கரைந்தும் கூட எழுந்திருக்கவில்லை. ஓரிரு நாள்கள் ஆய்வு செய்தது.

மூன்றாம் நாள் பகலில்... ஆந்தைகள் தூங்கியவுடன் வெளியே வந்த காக்கா விரைந்தது. காக்கா நண்பர் யாராவது தென்படுவாரா என்று கரைந்தது. கண்டுபிடித்தது. செய்தியைச் சொன்னது. அடுத்த நாள் பகல் வேளையில் காக்கை வரச் சொன்னது. தாக்குதல் இளைஞர்களையெல்லாம் நடத்தத் திட்டமிடப்பட்டது. மீண்டும் ஆந்தைக் குடும்பத்தில் மாலைக்குள் போய்ச் சேர்ந்தது. அடுத்த நாள்...

ஆந்தைகள் நல்ல தூக்கம், ஆந்தையின் வீட்டைச் சுற்றிலும் காக்கைகள்; இளைஞன் காக்கையின் அழைப்பு ஊதல் (விசில்) ஒலி வந்ததும், இளைஞர் காக்கைப் படை உள்ளே நுழைந்தது. தாக்குதல் நடத்தியது. குற்றுயிராக்கியது. இனியும் காக்கைகளைத் தொந்தரவு செய்தால், பகல் பொழுது உங்களுக்கு ஓய்வுப் பொழுதாய் இராது. வாழ்வின் இறுதிப் பொழுதாய்த்தான் இருக்கும்' என்று காக்கைத் தலைவர்கள் குரல் உயர்த்திச் சொன்னார்கள்.

'எங்களைக் கொன்னுடாதீங்க... உங்களை இனித் தொந்தரவு என்று ஆந்தையின் மனைவி மிகவும் செய்ய மாட்டோம் பணிவாய் வேண்டிக் கொண்டார்.

வெற்றிக் களிப்போடு காக்கை இளைஞனுக்கு மாலை சூடி பவனியாகப் பறந்து தத்தம் கூடுகளுக்குக் கா... கா... வெனக் கரைந்துகொண்டே சென்றன.

காலத்தைச் சரியாகக் கணித்தது காக்கா, வலிமையான ஆந்தையும் தோற்றுப் போனது. காலம் பொன் போன்றது! கடமை கண் போன்றது. காலத்தை அறிந்து வாழ்வோர் கலக்கம் கொள்ள மாட்டார். சோதனைகளும் எதிர்ப்புகளும் தீமைகளும் ஆகிய ஆந்தைகள் எத்தனை வந்தாலும் காக்கையைப் போல் காலம் அறிந்து செயல்படுகையில் அத்தனையும் பறந்தோடி விடும். கருங்காக்கைகளாவோம்! ஆம் அருங்காக்கைகளாவோம்!