உழைப்பால் உயர்வோம்! வெற்றியை நமதாக்குவோம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நம் அனைவருக்குமே வாழ்க்கையில் வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. வெற்றியை பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல. நாம் வியர்வைதுளிகளை சிந்தி கடினப்பட்டு உழைத்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். நாம் வெறுமனே சும்மா இருந்து கொண்டு வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தோம் என்றால் நம்மை அறிவாளிகள் என்று யார் சொல்வார்கள். இன்று நம்மில் பலர் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சொகுசாக வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் எதுவும் சேர்த்து வைக்காமல் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்ததை நமது சொத்தாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்மில் சிலர் வியர்வை துளிகளை சிந்துவதைவிட வீணாண பேச்சுகளுக்கு இடம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்வது தவறு என்றுகூட நம்மில் பலர் உணர்வதில்லை. வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்தால் மட்டுமே இன்பத்தை நிலையானதாக ஆக்கிக் கொள்ள முடியும். எனவே வாழ்க்கையில் வரும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நமதாக்குவோம். 

வாழ்க்கையில் நீண்ட பயணத்தில் பெறுகிற வெற்றிகளெல்லாம் போராட்டத்தால் கிடைத்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு முறையும் போராடி வெற்றி பெறுகிறபோதுதான் மனவலிமை மிக்கவர்களாக மாறுகிறோம். உழைப்பு என்றும் வீண்போகாது. உழைப்புக்கு தகுந்த பலன் ஒரு நாள் கிடைக்கும் என்று நெப்போலியன் ஹில் கூறுகிறார். இன்று விவசாயிகள் தங்கள் வியர்வையை சிந்தி கடினப்பட்டு உழைப்பதால்தான் நம்மால் உண்ணவும், உயிர் வாழவும் முடிகிறது. எனவே நாமும் கடினப்பட்டு உழைப்போம். பல சமயங்களில் நாம் துன்பப்பட்டாலும்  பரவாயில்லை நமது குழந்தைகள் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்க கூடாது என்று அவர்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலை தொடர்ந்தால் நமது குழந்தைகள் சுறுசுறுப்பு என்ற பண்பை கற்றுக் கொள்ள மறந்துவிடுவார்கள். எனவே நமது குழந்தைகள் தங்களுக்குரியதை தாங்களே கடினப்பட்டு உழைத்து சம்பாதிக்க அவர்களை பயிற்றுவிப்போம். அதுவே அவர்களை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்லும்.  உழைப்பில்லா ஊதியத்தை எதிர்பார்த்தோம் என்றால் அந்த ஊதியம் நிச்சயம் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்பில்லை. உடலுழைப்பு இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற கருத்தையும் நமதாக்கி கொள்வோம்.  உழைப்பால் உயர்வோம். நல்லதை வெல்வோம்.

 

எழுத்து 

அருட்சகோதரி ஜான்சி FBS

 

Daily Program

Livesteam thumbnail