கற்றலும், கற்பித்தலும்...! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.03.2024

மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது...

எனில்...

படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும்..

எனில் ஆசிரியரின்( பெற்றோரின் ) வேலை தான் என்ன...?

பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல...

கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?

நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...?

தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...?

புரிதல் வேண்டும்...

பண்படுத்துவது என்பது- புண்படுத்துவது அல்ல என்ற புரிதல்

மாணவர்களுக்கு மட்டுமல்ல -* மற்றவர்களுக்கும் வேண்டும்...!

ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்...

குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...?

ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தருகிறாள்...

குழந்தையின் மீது செலுத்தப்படும் எவ்வளவு மோசமான வன்முறை இது... அவர்களுக்கான தண்டனை என்ன...?

குழந்தையின் நலன்கள் இரண்டு..

உடல் நலன்...

உள்ள நலன்...

உடல் நலனுக்காக இயங்கும் மருத்துவத்துறையின் கைகளை...

"ஊசி குழந்தைக்கு வலிக்கும், மருந்து குழந்தைக்கு கசக்கும், அறுவை சிகிச்சை அதை விட வலிக்கும்... எனவே எல்லாவற்றையும் தவிர்த்து

குழந்தைக்கு மனம் நோகாமல் அறிவுரை மட்டும் கூறி அனுப்புங்கள்" என்று சொல்வீர்களா...?

மருத்துவ துறையின் கைகள் கட்டப்பட்டால், உடல் நலன் ஒழிந்தது என்று அர்த்தம்...புரிதல் வேண்டும்...

அதே போல...

உள்ள நலனுக்கானது தான் - கல்விக்கூடங்கள்...

அது கூடாது, இது கூடாது என்று இங்கே கற்பிப்பவரின் கையும், சுய சிந்தனை உணர்வும் கட்டப்பட்டுவிட்டன...

விளைவு - நாம் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.

ஒரு கல்விக்கூடம் மூடப்பட்டால் - அது நூறு சிறைச்சாலைகள் திறப்பதற்கு சமம்.

மூடும் அளவிற்கு அதிக சிரமம் வேண்டாம்...

ஆசிரியரின் உடலும், உள்ளமும், கைகளும் கட்டப்பட்டாலே போதும்...

மாணவன் ஆசிரியரால் திருத்தப்படாவிட்டால்,

காவலர்களின் அடியால் திருந்த வேண்டும் அல்லது

சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும்.

 

சாமானியன்

ஞா சிங்கராயர் சாமி

கோவில்பட்டி

 

 

 

Comments

Mary Cecilia Roche.F (not verified), Mar 01 2024 - 9:52pm
Singarayar Saamy Ayya,Very Beautifully narrated in simple Words..அருமை...