சீடத்துவம் நன்றியுணர்வும் தாராள மனதும் கொண்டது!| ஆர்.கே.சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 24-ம் வாரம்-சனி
19 செப்டம்பர் 2026
1 கொரி 15: 35-37, 42-49
லூக்கா 8: 4-15
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசக்தில் நேற்றைய உயிர்த்தெழுதல் குறித்து மேலும் பேசுகையில், பவுல் அடிகள் உயிர்த்தெழுதல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைத் தெளிவுப்படு்த்துகிறார். அவரது இந்த படிப்பினையில் மரணத்திற்குப் பிறகு பெறும் உயிர்த்தெழுந்த உடல், இப்போது உள்ள உடலைப் போன்றிருக்காது என்றும், அது மாட்சியும் அழிவற்ற தன்மையும் கொண்டதாக இருக்கும் என்கிறார்.
இதற்கு, சிறந்த எடுத்துக்காடாக நிலத்தில் புதைக்கப்படும் விதையை உவமையாகக் கையாள்கிறார். ஒரு விதை நிலத்தில் விதைக்கப்படும்போது அது அழிந்து போவது போலத் தோன்றினாலும், அதிலிருந்து புதிய செடி முளைத்தெழுவதுபோல், மரணத்தில் புதைக்கப்படும் உடலும் உயிர்த்தெழுதலில் புதிய மாட்சிக்குரிய உடலாக எழும் என்கினார். இப்போது உள்ள உடல் அழிவுக்குட்பட்டது, பலவீனமானது, இயற்கையானது; ஆனால் உயிர்த்தெழுதலில் அது அழிவில்லாதது, வல்லமையானது, ஆவிக்குரியதானதாக மாற்றம் பெறும் என்கிறார்.
இது குறித்து மேலும் விவலிக்கையில், ஆதாமிடமிருந்து நாம் இயற்கையான மனித உடலைப் பெற்றோம். ஆனால் கிறிஸ்துவில் உயிர்பெற்று எழும்போது, நாம் விண்ணகத்திற்குரிய புதிய வாழ்க்கையை பெறுகிறோமெ என்கிறார். ஆகவேதான் , இம்மையில் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இறுதியில் கிறிஸ்துவில் புதிய படைப்பாக அவரது சாயலை ஏற்றிருப்போம் என்கிறார் பவுல்.
நற்செய்தி.
இன்று, இயேசு விதைப்பவன் உவமையைக் போதிக்கிறார். இந்த உவமையின் பொருள் அறியாது சீடர்கள் இயேசுவிடம் விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு இயேசு, விதை என்பது கடவுளின் வார்த்தை. விதைக்கப்படும் விதையானது பல்வேறு நிலங்களில் விழுவது போல, கடவுளின் வார்த்தையை மனிதர்கள் வெவ்வேறு விதமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவற்றுள் :
• வழியோரத்தில் விழுந்த விதை – வார்த்தையைக் கேட்கிறார்கள்; ஆனால் அதை சாத்தான் ( அலகை) எடுத்துக்கொள்கிறான்.
• கற்பாறையில் விழுந்த விதை – வார்த்தையை சிலர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால் ஆழமான வேர் இல்லாததால் சோதனை நிகழும் வேளையில் வார்த்தையில் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.
• முள்ளுக்குள் விழுந்த விதை – வார்த்தையைக் கேட்கிறார்கள்; ஆனால் வாழ்க்கையின் கவலைகள், செல்வம், இன்பங்கள் அதை நெருக்கி, பயனற்றதாக ஆக்குகின்றன.
• நல்ல நிலத்தில் விழுந்த விதை – நல்ல இருதயத்துடன் வார்த்தையைக் கேட்டு, அதை காத்து, பொறுமையுடன் பலன் கொடுக்கிறவர்கள் என்று பதில் விளக்கம் தருகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களில் “விதை” என்ற அழகான உருவகம் நமக்குத் தரப்படுகிறது. இந்த ஈரெழுத்து சொல் நமக்குப் புலப்படுத்தும் உண்மை மகத்தானது. இயேசு இந்த உண்மை அறிந்தே அனைவருக்கும் நன்கு தெரிந்த பொருளான விதையைப் பயன்படுத்துகிறார்.
புனித பவுல், “விதைக்கப்படும் உடல் அழிவுக்குரியது; எழுப்பப்படும் உடல் அழியாதது” என்று கூறுகிறார். நாம் நிலத்தில் ஒரு விதையை விதைக்கும்போது, அது முதலில் பார்ப்பதற்கு சிறியதாகவும் உயிரற்றதாகவும் தோன்றுகிறது. ஆனால் அதற்குள் ஒரு புதிய வாழ்வின் சக்தி மறைந்திருக்கிறது. அதுபோல, நமது இன்றைய வாழ்க்கையும் இறுதியல்ல. கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைக்கும் போது, மரணத்திற்குப் பின்னர் கடவுள் நமக்கு அழியாத நிலை வாழ்வை அளிக்கிறார் என்று பவுல் அடிகள் விவரிக்கிறார். பவுல் ஒரு பரிசேயர். அவரும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே விதையைக் கொண்டு, இயேசு விதைப்பவரின் உவமையை கூறுகிறார். ஒரே விதை வெவ்வேறு நிலங்களில் விழுகிறது. பாதையோரம் விழுந்த விதை, பாறையில் விழுந்த விதை, முட்களுக்குள் விழுந்த விதை, நல்ல நிலத்தில் விழுந்த விதை என்பன அவை.
இங்கே விதை என்பது கடவுளின் வார்த்தை. கடவுள் மனிதரிடையே வேற்றுமை பாராட்டாமல், விதையை எல்லா இடங்களிலும் விதைக்கிறார். ஆனால் அதன் பலன், அந்த விதை விழும் நிலத்தைப் பொறுத்தது. இங்கே நிலம் நமது இதயமாக சித்தரிக்கப்படுகிறது.
சில நேரங்களில், கடவுளுடைய வார்த்தையைக் கேட்கிறோம்; ஆனால் அது நம் இதயத்தில் வேரூன்றுவதற்கு முன்பே மறந்துவிடுகிறோம். சில நேரங்களில் சோதனைகள் வந்தால் நமது நம்பிக்கை மிகப் பெரிய கேள்விக்குறியாகிறது. கவலைகள், ஆசைகள் ஆகியவை நம் உள்ளத்தில் கடவுளின் வார்த்தையை நெருக்கிவிடுகின்றன.
ஆனால் இயேசு நம்மை “நல்ல நிலமாக” இருக்க அழைக்கிறார். நல்ல நிலம் என்பது கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, அதை உள்ளத்தில் ஏற்று, பொறுமையுடன் வாழ்ந்து, பலன் தரும் இதயம் ஆகும். ஒரு விதை உடனடியாக மரமாக மாறுவதில்லை. அதற்கு நேரமும், பொறுமையும் தேவை. அதுபோல நமது இறை சீடத்துவ வாழ்வில் உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காமல், கடவுளின் வார்த்தையை தினமும் நம் வாழ்வில் விதைக்க வேண்டும்.
இந்த உவமையை நாம் பல முறை கேட்டிருப்போம். சிறு வயதில் மறைக்கல்வி வகுப்பிலும் அறிந்திருப்போம். இன்று, இந்த உவமை நமது இதயத்தின் நிலையை ஆராய்ந்து பார்க்க நமக்கு மீண்டும் சவாலாக நம் செவிகளில் விழுகிறது. பாதையைப் போல நமது இதயங்களும் கடினமாகிவிட்டனவா? பாறை நிலத்தைப் போல மனச்சிதறல்களால் நிரம்பியிருக்கிறோமா? அல்லது முட்கள் நிறைந்த நிலத்தைப் போல உலகக் கவலைகளால் நெருக்கப்பட்டிருக்கிறோமா? அல்லது உழுது பண்படுத்தப்பட்ட நல்ல நிலம்போல, திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ளும் உள்ளத்துடனும், நம்முள் கிறிஸ்துவின் வாழ்வு வளர்ந்து அது பலன் தருவதற்கு தயாராக இருக்கிறோமா?
நாம் இன்று கேட்கும் கடவுளுடைய வார்த்தை நம் இதயத்தில் விழுந்து, அங்கே வேரூன்றி, நல்ல செயல்களாகவும் அன்பாகவும் மன்னிப்பாகவும் நம்பிக்கையாகவும் மாறட்டும்.
விதைக்கப்படும் விதை சிறியதாக இருந்தாலும், கடவுளின் கையில் அது புதிய வாழ்வையும் நிறைவான பலனையும் தரும் என்பதில் நிலைத்திருப்போம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது உவமையின் பொருளை ஏற்றுக்கொள்ளும் வளமான மண்ணாக எனது இதயம் மாற வேண்டும் என்று நீர் ஆவலுடன் விரும்புகிறீர். உமது வார்த்தை என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி, ஏராளமான கனிகளைத் தருவதற்குத் தேவையான அருளால் என்னை நிறைவுச் செய்வீராக ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
