வெளிப்புற பக்தி அல்ல, உள்ளார்ந்த அன்பு! | ஆர்.கே.சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 24-ம் ஞாயிறு-புதன்
16 செப்டம்பர் 2026
1 கொரி 12: 31- 13: 13
லூக்கா 7: 31-35
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் “அன்பே எல்லாவற்றிலும் சிறந்த வழி” எனும் படிப்பினையை வலியுறுத்துகிறார். தூய ஆவியாரின் வரங்களை நாடுவதோடு, அவற்றைவிடச் சிறந்த அன்பின் வழியை பின்பற்ற வேண்டும் என்று பவுல் கூறுகிறார். மேலும், எவ்வளவு பெரிய ஆன்மீக வரங்கள், அறிவு, நம்பிக்கை அல்லது தியாகங்கள் இருந்தாலும் அன்பு இல்லையெனில் அவை பயனற்றவை என்று விளக்குகிறார்.
தொடர்ந்து,பவுல் அடிகள் உண்மையான அன்பின் பண்புகளை எடுத்துக்காட்டுகிறார்: அன்பு பொறுமையுடையது, இரக்கமுள்ளது; பொறாமைப்படாது, பெருமை கொள்ளாது, சுயநலமாக நடக்காது; தீமையை நினைவில் வைத்துக்கொள்ளாது; உண்மையில் மகிழ்கிறது; அனைத்தையும் தாங்கி, நம்பி, எதிர்பார்த்து, சகித்துக்கொள்கிறது என்றும். மற்ற ஆன்மீக வரங்களும் அறிவும் காலப்போக்கில் முடிவடையும்; ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது என்று கூறுகிறார்.
நிறைவாக, எதிர்நோக்கு, நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றும் நிலைத்திருக்கின்றன; அவற்றில் அன்பே மிகப் பெரியது என்று முடிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில்,இயேசு, தன் காலத்து மக்களின் பிடிவாதமான மனநிலையை ஒரு உவமையின் மூலம் விளக்கியதை லூக்கா குறிப்பிடுகிறார். இயேசு அந்த மக்களை சந்தையில் விளையாடும் குழந்தைகளுக்கு ஒப்பிடுகிறார். அவர்கள் மற்றவர்களை அழைத்தாலும், அவர்கள் விரும்பியபடி யாரும் நடக்கவில்லை என்றும், திருமுழுக்கு யோவான் கடுமையான வாழ்க்கை வாழ்ந்தபோது, மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை; அவருக்கு “பேய் பிடித்திருக்கிறது” என்று கூறினர்.
மானிட மகன் சாதாரணமாக மக்களோடு உணவு உண்டு பழகியபோது, அவரையும் “பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிவசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்று குற்றம் சாட்டினர் என்று மக்கள் கொண்டிருந்உ வெவ்வேறு மனநிலையைச் சுட்டிக்காட்டி போதித்தார்.
இதன் மூலம், சிலருக்கு எப்படிப்பட்ட நல்ல வழி காட்டப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் குறை கூறுகிறார்கள் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார்.
சிந்தனைக்கு.
இயேசு இந்தப் போதனையில் பயன்படுத்தும் உவமை—“நாங்கள் உங்களுக்காகக் குழல் ஊதினோம்; ஆனால் நீங்கள் நடனமாடவில்லை. நாங்கள் புலம்பல் பாடினோம்; ஆனால் நீங்கள் அழவில்லை”—என்பது, ஆவிக்குரிய விதத்தில் உணர்வற்றவர்களாகவும், கடவுளுடைய அருளின் மகிழ்ச்சியான மற்றும் துயரமான இரு அழைப்புகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகவும் இருக்கும் ஒரு தலைமுறையைச் சித்தரிப்பதாக பொருள் கொள்ளலாம்.
1. குழந்தைகள் விளையாடும்போது ஒருவரை ஒருவர் அழைக்கிறார்கள். அவர்கள் திருமண விழாவைப் போல மகிழ்ச்சியாக விளையாடலாம்; அல்லது ஒருவரின் இறுதிச்சடங்கைப் போல துயரமாக விளையாடலாம். ஆனால் சிலரோ எப்படி விளையாட்டிலும் கலந்து கொள்ள விரும்புவதில்லை.
2.
இயேசு இந்த உவமையின் மூலம் தம்முடைய காலத்து மக்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறார். திருமுழுக்கு யோவான் தவம், மனமாற்றம், கட்டுப்பாடு ஆகியவற்றை அறிவித்தார். ஆனால் மக்கள், “அவர் பேய் பிடித்தவர்” என்றார்கள். இயேசு மக்களோடு உண்டு, குடித்து, இறைவனுடைய இரக்கத்தையும் மகிழ்ச்சியையும் அறிவித்தார். அப்போதும், “இவர் பெருந்தீனிக்காரர், குடிகாரர், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பர்” என்று குற்றம் சாட்டினார்கள்.
சில நேரங்களில் நாம் கடவுளிடம், “ஆண்டவரே, இன்னும் தெளிவாகப் பேசுங்கள்” என்று கேட்கிறோம். ஆனால் அவர் ஏற்கனவே நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்வதில்ல. அவர் நம்மோடு,
o நற்செய்தியின் மூலம் பேசுகிறார்.
o திருப்பலியின் மூலம் பேசுகிறார்.
o நம்முடைய குடும்பத்தின் மூலம் பேசுகிறார்.
o ஏழைகள் மற்றும் துன்பப்படுவோரின் மூலம் பேசுகிறார்.
o சில நேரங்களில் நம்முடைய தோல்விகளின் மூலமும் பேசுகிறார்.
o நம் மனச்சாட்சியின் குரலின் மூலமும் பேசுகிறார்.
ஆனால், இவற்றை நாம் பொருட்படுத்துவதில்லை. நமக்கு பிடித்த, மகிழ்ச்சியான, சூழல்களை அல்லது விடயங்களை மட்டும் ஏற்றுக்கொள்ள விழைகிறோம். நாம் ஏற்றிருக்கும் இந்த கிறிஸ்தவ வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இடமுண்டு. இயேசு நம்மை மகிழ்ச்சிக்குள் அழைக்கிறார். அதே வேளையில், மனமாற்றத்தின் கண்ணீருக்குள்ளும் அழைக்கிறார். சில நேரங்களில் நாம் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்றபோது மகிழ்ச்சியுடன் அவரைத் தேடுகிறோம். ஆனால் துன்பம் வந்துவிட்டால், “கடவுள் என்னை ஏன் கைவிட்டார்?” என்று கேட்கிறோம். நாமும் பச்சோந்தியாகிறோம். இத்தருணத்தில் ஒரு சினிமா படிலின் இரு வரிகள் நினைவுக்கு வருகின்றது, ஆம் ‘ நாளொரு மேனி பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல’ நம்மில் ‘நடிப்பே’ வாழ்வாகிவிடக்கூடாது.
முதல் வாசகத்தில், புனித பவுல், “நான் மனிதருடையவும் வானதூதருடையவும் மொழிகளில் பேசினாலும் அன்பு எனக்கு இல்லையென்றால், நான் ஒலிக்கும் வெண்கலம் போலவும், முழங்கும் தாளம் போலவும் இருப்பேன்” என்கிறார், நம்மில் எவ்வளவு பெரிய ஆன்மீகப் கொடை இருந்தாலும், அன்பு இல்லையென்றால் அது பயனற்றது.
நாம் கோபப்படும்போது பொறுமையாக இருப்பது அன்பு.
நம்மை காயப்படுத்தியவரை மன்னிப்பது அன்பு.
நம்மைப் புரிந்துகொள்ளாதவரைப் புரிந்துகொள்ள முயல்வது அன்பு.
நமக்கு பிரதிபலனாக எதுவும் திரும்பக் கிடைக்காதபோதும் நன்மை செய்வது அன்பு.
இன்றைய நற்செய்தியைக் கூர்ந்து வாசித்தால், அது நம்மை ஒரு கண்ணாடி முன் நிறுத்துதை உணரலாம்.
“நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் நடனமாடவில்லை. நாங்கள் புலம்பல் பாடினோம்; நீங்கள் அழவில்லை” என்பது,
கடவுளின் ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டே இருப்பது காலத்தை விரையம் ஆக்குவதாகும்.
இறைவனுடைய அழைப்புக்கு நம் இதயம் பதிலளிக்க வேண்டும்; அந்தப் பதில் அன்பாக வெளிப்பட வேண்டும்.
இயேசு இன்று நமக்காகக் குழல் ஊதுகிறார் — மகிழ்ச்சியின் அழைப்பு. அவர் இன்று புலம்பல் பாடுகிறார் — மனமாற்றத்தின் அழைப்பு. இதற்கான பதில் நம் கையில் உள்ளது.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, நீர் விடுக்கும் அழைப்பையும் உண்மையையும் என் விருப்பத்திற்கேற்ப மதிப்பிடாமல், தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு, என் வாழ்க்கையில் நல்ல செயல்களால் அதை வெளிப்படுத்த அருள்புரியும் ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலியக் கல்வி மையம்.
+6012 228 5452
