தாழ்ச்சியே பாவ மன்னிப்புக்கு அடித்தளம்! | ஆர்.கே.சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 24-ம் வாரம் -வியாழன்
1 கொரி 15: 1-11
லூக்கா 7: 36-50
தாழ்ச்சியே பாவ மன்னிப்புக்கு அடித்தளம்!
முதல் வாசகம்
இன்றைய முதல் வாசகத்தில் பவுல் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய நற்செய்தியை அவர் தோற்றுவித்த கொரிந்திய திருஅவைக்கு நினைவுபடுத்துகிறார். அவரது செய்தியில், கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காக மறைநூலின் படி மரித்தார் என்றும், அவர் அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பதை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.
தொடர்ந்து, உயிர்த்தெழுந்த இயேசு முதலில் கேபாவுக்கும் (பேதுருவுக்கும்) பின்னர் பன்னிரண்டு சீடர்களுக்கும், அதன் பின் பல சீடர்களுக்கும் தோன்றினார் என்று விவரிக்கிறார். இறுதியில், தகுதியற்றவராக இருந்தாலும், பவுலாகிய அவருக்கும் தோன்றினார் என்று பவுல் தம்மைத் தாழ்த்தி கூறுகிறார்.
இவ்வாசகத்தில், பவுல், அவர் கடவுளின் அருளால்தான் திருத்தூதராகி, நற்செய்தியை அறிவித்ததாக சாட்சியமாக கொரிந்தியருக்கு எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
நற்செந்தியில், ஒரு பாவியான பெண் இயேசுவிடம் வந்து, கண்ணீரால் அவருடைய பாதங்களை நனைத்து, தன் தலைமுடியால் துடைத்து, அவருடைய பாதங்களில் முத்தமிட்டு, வாசனைத் தைலத்தைப் பூசுகிறாள்.
அதைப் பார்த்த பரிசேயர், “இவள் பாவியானவள் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தால், அவளைத் தம்மிடம் அனுமதித்திருக்க மாட்டார்” என்று நினைக்க, இயேசு ஒரு கடனாளிகளின் உவமையை கூறுகிறார். அதிகமாக மன்னிக்கப்பட்டவன் அதிகமாக அன்பு செலுத்துவான் என்று விளக்குகிறார். பின்னர் அந்தப் பெண்ணின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்று கூறுகிறார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில், சீமோன் (அப்படிதான் இயேசு அழைக்கிறார்) என்ற பரிசேயர் ஏன் இயேசுவைத் தன் வீட்டில் விருந்துண்ண அழைத்தார்? அழைப்புக்கான காரணத்தை நற்செய்தியில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. ஒருவேளை அவர் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தினால் அவரை அழைத்திருக்கலாம்; அல்லது இயேசுவைச் சோதித்து அவருடைய குற்றத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும் அழைத்திருக்கலாம்.
ஆயினும், ஒவ்வொரு மனிதருடைய இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் அறிந்த இயேசு, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஏனெனில், சீமோன் ஒரு பரிசேயராக இருப்பினும் அவரில் மனமாற்றத்திற்கும் மீட்புக்கும் வாய்ப்பு இருப்பதை இயேசு அறிந்திருந்திருக்கலாம்.
நற்செய்தியில் லூக்கா குறிப்பிடும் இந்நிகழ்வு ஓர் உவமையோ. கற்பனை கதையோ அல்ல. அப்பெண்னின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தாலும், இந்நிகழ்வு நம்மை ஆழமான ஆன்மீக சிந்தனைக்கு அழைக்கிறது. அவள் ஒரு பாவி என்று கூறப்பட்டாலும், அவள் நம் ஒவ்வொருவரையும் பிரதிநிதிப்பவராக உள்ளார். பல தருணங்களில் நமது சொல்லிலும் செயலிலும் ஒரு பரிசேயராக வாழ்கிறோம். பகட்டான வாழ்வான் நம்மை தாழ்த்துவதில் அஞ்சுகிறோம்.
பாவியான அப்பெண் இயேசுவிடம் வந்து, கண்ணீரால் அவருடைய பாதங்களை நனைத்து, தன் தலைமுடியால் துடைத்து, அவருடைய பாதங்களில் முத்தமிட்டு, வாசனைத் தைலத்தைப் பூசின வேளை இயேசு அவளைத் தடுக்கவில்லை. அவர் விலையுயர்ந்த வாசனைத் தைலத்தால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். பாதங்களைத் துடைப்பதில் அடிமையின் நிலை வெளிப்படுத்துகிறது. தன் பாவங்களை மறைத்து, மக்கள் மத்தியில் பெருமைக்குரியவளாக இருப்பதைவிட துக்கமும் அன்பும் நிறைந்த இருதயத்தின் அடையாளமாக, தன்னைத் தாழ்த்தி பாவ மன்னிப்புக்கு தன்னை அர்ப்பணிக்கிறாள்.
ஆம், தம்மிடம் வந்த பாவியாகிய பெண்ணை, ஏற்றுக்கொள்கிறார், அவளைப் பாதுகாக்கிறார், மேலும் அவளுடைய இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பக்கூடிய வார்த்தைகளை அவளிடம் பேசுகிறார்: “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றும் “உன் நம்பிக்கை உன்னை மீட்டது என்றும் அமைதியில் போ” என்றும் கூறுகிறார். முதல் வாசகத்தில். தகுதியற்றவராக இருந்தாலும், பவுலாகிய உயரித்த இயேசு ஆண்டவர் அவருக்கும் தோன்றினார் என்று பவுல் தம்மைத் தாழ்த்தி கூறுகிறார். ஆம், தன்னை தாழ்த்தி இயேசுவிடம் வருவோரை அவர் விலக்குவதில்லை என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நீர் பாவிகளை வெறுத்து ஒதுக்காமல் அன்புடன் வரவேற்கிறீர். பாவியான அந்தப் பெண் வெளிப்படுத்திய அதே ஆழமான மனவருத்தமும் அன்பும் என் இருதயத்திலும் நிறையச் செய்வீராக. அவளுடைய கண்ணீர் என்னுடைய கண்ணீராகவும், மன்னிப்பு கேட்பதில் அவள் காட்டிய துணிச்சல் என்னிலும் பெருக்கெடுக்கட்டும் ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலியக் கல்வி மையம்.
+6012 228 5452
