சீடத்துவம் நன்றியுணர்வும் தாராள மனதும் கொண்டது!| ஆர்.கே.சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 24-ம் வாரம்-வெள்ளி
18 செப்டம்பர் 2026
1 கொரி 15: 12-20
லூக்கா 8: 1-3
முதல் வாசகம்.
முதல் வாசகத்தல், புனித பவுல் அடிகள், கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையிட் அடிப்படை என்றும் மரித்தோருக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்றால், கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை என்பதே பொருள் என்கிறார்.
தொடர்ந்து, கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், நமது நம்பிக்கையும் அனைத்து போதனைகளும் வீண் என்றும அவரில் நம்பிக்கைக் கொள்ளும் நம்பிக்கையாளர்களுக்கும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்று இந்த திருமுகத்தில் விவரிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி பகுதியை, இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார் என்று லூக்கா தொடங்குகிறார். அவருடன் பன்னிரண்டு சீடர்களும், இயேசுவால் குணமாக்கப்பட்ட சில பெண்களும் சென்றனர்.
அவர்களில் பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்பெண்கள் தங்களுடைய பொருள்களைக் கொண்டு இயேசுவுக்கும் சீடர்களுக்கும் பணிவிடை செய்து ஆதரித்தனர் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிந்தனைக்கு.
நற்செய்தியை ஆழ்ந்து கவனித்தால், இயேசுவைப் பின்பற்றிய இந்த ஆரம்பகால சீடர்கள் குழுமமானது, இன்றும் நமக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலிருந்து வந்தவர்கள்: சிலர் பக்தியுள்ளவர்கள்; பாவ வாழ்க்கையில் இருந்தவர்கள். சிலர் செல்வந்தர்கள்; மற்றவர்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆண்களும் பெண்களும், உயர்ந்த நிலையிலிருந்தவர்களும் தாழ்ந்த நிலையிலிருந்தவர்களும் அவர்களுள் இருந்தனர் என்பதை லூக்கா சுட்டிக்காட்டுகிறார்.
அவர்கள் பல்வேறுபட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே நோக்கத்தில் ஒன்றுபட்டிருந்தனர்: இயேசுவைப் பின்பற்றுவதும், தங்களிடம் இருந்த அனைத்தையும் அர்ப்பணித்து கடவுளுடைய அரசுக்காக சேவை செய்வதுமே அவர்களின் நோக்கமாக இருந்தது என்பதை அறிகிறோம்.
மேலும், இயேசுவின் சீடர்களாக இருந்த இந்தப் பெண்கள் இயேசுவுக்கும் பன்னிரு சீடர்களுக்கும் தங்களுடைய சொந்த வளங்களிலிருந்து உதவி செய்தனர். அவர்களின் தாராள மனப்பான்மை வெறும் பொருளாதார உதவியாக மட்டும் இருக்கவில்லை; அது ஆன்மீகமான அர்ப்பணிப்பாகவும் இருந்தது என்பதை மறுக்க இயலாது.
அவர்களின் பொறுப்புணர்வும், தங்கள் வளங்களை இறைப்பணிக்காக அர்ப்பணித்த மனமும், கிறிஸ்துவின் பணியைத் தொடர்வதில் முக்கியப் பங்கு வகித்தன. தங்களிடம் இருந்ததை வழங்குவதன் மூலம், அவர்கள் அருளின் கருவிகளாக மாறினர். மேலும், திருஅவையில் எதிர்காலத்தில், குறிப்பாக இயேசுவிற்குப் பின், பொதுநிலையினரும் திருப்பணியாளர்களும், ஆண்களும் பெண்களும், செல்வந்தர்களும் ஏழைகளும் இணைந்து ஆற்றவிருக்கும் பணிக்கான முன்மாதிரியகவும் அவர்களின் செயல் அமைந்தது என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
இன்று. புனித பவுல் அடிகள் கூறுவதைப்போல், நாம் இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிந்தவர்கள், அவரது உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, நற்செய்தியில் கண்ட பெண்களைவிட நாம் மேலும் பேறுபெற்றவர்கள். இதனிமித்தம், திருஅவையில் நமது ஈடுபாடும அர்ப்பணிப்பும், நமது வளங்களைப் பகிர்வதில் ஆர்வமும் மிகுந்திருக்க வேண்டும்.
இப்புவியில் இறையரசைக் கட்டி எழுப்பும் பணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. அது சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். ஆனால், நமது ஈடுபாட்டையும் பங்கையும் தட்டி கழிக்க இயலாது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமக்கு அன்று பணிவிடை செய்த பெண்களைப் போல, எனக்கும் திருஅவையில் எனது நேரம், திறமை, வளம் ஆகியவற்றை பகிரும் மனதை தொடர்ந்து அருள்வீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
