அருட்சகோதரி அன்னி தேவாட்டிலின் துறவற அர்ப்பணிப்பின் பொன்விழா! | Veritas Tamil
கிழக்கு இந்தியாவில் உள்ள குர்தும்கர் புனித செபஸ்தியார் பங்கில், செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில், சுமார் 500 கத்தோலிக்க இறைமக்கள், 25 அருள்பணியாளர்கள் மற்றும் 25 அருட்சகோதரிகள் உட்பட ஒன்றுகூடி, சலேசிய அருட்சகோதரி அன்னி தேவாட்டில், FMA அவர்களின் துறவற அர்ப்பணிப்பின் பொன்விழாவைக் கொண்டாடினர்.
கட்டாக்-புவனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் இரவீந்திர குமார் ரணசிங் அவர்கள், அருட்சகோதரி அன்னியின் 50 ஆண்டுகால அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வு மற்றும் பணியை நினைவுகூரும் இக்கொண்டாட்டத்திற்குத் தலைமையேற்றார்.
தமது மறையுரையில், ஆயர் ரணசிங் அவர்கள், அருட்சகோதரி அன்னியின் ஐம்பது ஆண்டுகால துறவற வாழ்வு, இறைவனின் நம்பகத்தன்மைக்கும், இறைவனின் அழைப்பிற்கு அவர் அளித்த தாராளமான பதிலுக்கும் அழகிய சான்றாக உள்ளது என்று கூறினார்.
“அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வின் ஐம்பது ஆண்டுகள், இறைவனின் நம்பகத்தன்மைக்கும், அவரது அழைப்பிற்கு நீங்கள் அளித்த தாராளமான பதிலுக்கும் அழகிய சான்றாகும். செபம், தியாகம், சேவை மற்றும் விடாமுயற்சியின் வழியாக, நீங்கள் கிறிஸ்துவின் அன்புக்கு சாட்சியாகவும், பலருக்கு நம்பிக்கையின் ஊற்றாகவும் மாறியுள்ளீர்கள்” என்று அவர் கூறினார்.
“நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” (யோவான் 15:16) என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துரைத்த ஆயர், அருட்சகோதரி அன்னி அவர்கள் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை, துணிவு மற்றும் மகிழ்ச்சியுடன் தமது அழைத்தலைத் தொடர்ந்து வாழுமாறு ஊக்கப்படுத்தினார்.
1953ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் கேரளாவின் எர்ணாகுளத்தில் ஜான் மற்றும் அன்னம்மா தேயாட்டில் தம்பதியருக்கு அருட்சகோதரி அன்னி பிறந்தார். நான்கு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையான இவர், 1971ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புக் கல்வியை நிறைவு செய்தார். 1976ஆம் ஆண்டு தனது முதல் வார்த்தைபாட்டையும், 1986ஆம் ஆண்டு நிரந்தர வார்த்தைபாட்டையும், மேற்கொண்டார்.
பொதுவாக தொன் போஸ்கோவின் சலேசிய அருட்சகோதரிகள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை துறவற சபையைச் சேர்ந்த இவர், ஒடிசா மாநிலத்தின் பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் கந்தமால் மாவட்டத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அங்கு புதிய துறவற சமூகத்தை நிறுவுவதற்கும், பின்னர் ஒரு பள்ளியைத் தொடங்குவதற்கும் உதவிய அவர், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பங்குச் சமூகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார்.
தமது பொன்விழாவையொட்டி பேசிய அருட்சகோதரி அன்னி அவர்கள், “எனது அழைத்தல் என்ற கொடைக்காகவும், இந்த ஐம்பது ஆண்டுகளாக என்னுடன் பயணித்த அனைவருக்காகவும் இறைவனுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எண்ணற்ற மக்களின் நினைவுகளையும், செபங்களையும், அன்பையும் என்னுடன் சுமந்து செல்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளும் இறைவனுக்கும் மனிதகுலத்திற்கும் நான் செய்யும் பணிவான அர்ப்பணிப்பாகத் தொடரட்டும்” என்று கூறினார்.
பங்குத்தந்தை துஷ்மோந்த் நாயக் அவர்கள், இந்தப் பொன்விழா அவரது துறவற வாழ்வின் நீண்ட காலத்தை மட்டுமல்லாமல், சமூகத்தில் அவரது பணியின் தாக்கத்தையும் கொண்டாடுகிறது என்று தெரிவித்தார். “அவரது இருப்பு எங்கள் பங்கிற்கும், அவர் தொட்டுச் சென்ற எண்ணற்ற வாழ்வுகளுக்கும் ஒரு ஆசீர்வாதமாக இருந்துள்ளது” என்று அவர் கூறினார்.
இளைஞர்களும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பங்கு இளைஞரான சுனம் நாயக் அவர்கள், அருட்சகோதரி அன்னி இளைஞர்களுக்கு நம்பிக்கையிலும் சேவையிலும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்று கூறினார்.
“அவரது 50 ஆண்டுகால அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வு, நம்பிக்கை, பணிவு மற்றும் சேவைக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக உள்ளது. இளைஞர்களாகிய நாங்கள், அவரது வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் அன்பான உடனிருப்புக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
பங்குமக்கள் மற்றும் இளைஞர்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இக்கொண்டாட்டம், அனைவரும் இணைந்து உணவு அருந்தியதுடன் நிறைவடைந்தது.
குர்தும்கர் பங்குச் சமூகத்தைப் பொறுத்தவரை, அருட்சகோதரி அன்னியின் 50 ஆண்டுகால துறவற அர்ப்பணிப்பையும், கந்தமால் மக்களிடையே அவர் தொடர்ந்து ஆற்றிவரும் சேவையையும் நினைவுகூரும் முக்கிய நிகழ்வாக இப்பொன்விழா அமைந்தது.
