இரக்கம் சுரக்கும் இதயம் நமதாகட்டும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

15 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 24ஆம் வாரம் –திங்கள்
1 திமொத்தேயு 3: 1-13
லூக்கா 7: 11-17
இரக்கம் சுரக்கும் இதயம் நமதாகட்டும்!
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்கள் பணி வாழ்வு என்றால் என்ன என்பதற்கான குறிப்பிட்ட அம்சங்களை முன்வைக்கின்றன. முதல் வாசகத்தில், எபேசு சமூகத்திற்குள் பணியாளர்கள் மற்றும் தலைவர்களாக இருக்க வேண்டியவர்களை எவ்வாறு தேர்ந்தெடுத்து அங்கீகரிப்பது என்பது குறித்து புனித பவுல் தனது தீமோத்தேயுவுக்கு அறிவுரை வழங்குகிறார்.
இந்தப் பகுதியில் மூன்று தனித்தனி அலுவலகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
1) ஆயர் அல்லது "மேற்பார்வையாளர்";
2) திருத்தொண்டர்கள்
3) பெண்கள் பணியார்கள்.
மேற்கண்ட மூன்று வகையான பணியாளர்கள் மத்தியில் சில ஒற்றுமைகள் உள்ளன. அவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பதுப்பணியாற்ற வேண்டும், கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ்வதற்காகவும், அனைத்து நடத்தைகளிலும் மிதமான தன்மையைக் கடைப்பிடிப்பதற்காகவும், திருமணமானவர்களாக இருந்தால் அன்பான குடும்ப தலைவர்களாகவும் இருக்கவும் வேண்டும் என புவல் அடிகள் குறிப்பிட்டு எழுதுகிறார்.
வலுவான மற்றும் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையைக் கொண்டிருக்கக்கூடிய நபர் மட்டுமே சமூகத்தில் ஒரு முக்கிய பொறுப்புக்கு நல்ல வேட்பாளராகக் கருதப்பட வேண்டும் என்கறார் பவுல்
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு கணவனை இழந்த ஒரு கைம்பெண்ணின் ஒரே மகனுக்கு உயிர் கொடுக்கிறார். இயேசு இரக்கத்தால் தூண்டப்பட்டு இந்த அற்புதத்தைச் செய்கிறார். மகன் இல்லாத கைம்பெண் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவளாகக் கருதப்படுவாள். தன் மகனின் மரணத்தால் அவள் படும் துயரத்தை மட்டுமல்ல, மற்றவர்களால் அவள் தாழ்வாக மதிக்கப்படுவாள் என்பதையும் இயேசு முன்வைத்து செயல்படுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைக் கூர்ந்து கவனித்தால் அவை அரப்பணிப்பு கொண்ட பணிவாழ்வின் தன்மைகளை மையமாகக்கொண்டுள்ளதை அறியலாம். ஒரு கைம்பெண் தனது அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவரான மகனை இழந்து தவிப்பதை இயேசு காண்கிறார். இயேசு அவளுடைய மனநிலயை, துன்பதை உணர்வதோடு மனமுருகி இறந்த மகனுக்கு உயிரளிக்கிறார். புனித பவுல் அடிகள் ‘மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள் (‘உரோ 12:15) என்று கூறுவதைப்போல் பிறர் துன்பத்தில் பங்கெடுப்பதன் அவசியத்தை இங்கு காண்கிறோம்.
தொடர்ந்து, கிறிஸ்தவ சமூகங்களுக்கு தலைவர்களாக இருக்க விரும்புபவர்கள், துன்புறுவோரின் கவலைகளில் துக்கத் துயரங்களில் பங்கேற்க வேண்டும் என்பது போதனையாக உள்ளது. ஆம், நமது அன்பியங்களில், அடிப்படைக் கிறிஸ்தவச் சமூகங்களில், நமது பாதுகாப்பில் உள்ளவர்களைக் கவனித்துக்கொள்வது நமது முதற்கடமையாகும்.
பேருக்கும், புகழுக்குமானது அல்ல கிறிஸ்தவ தலைமைத்துவம். பணி அல்லது சேவையை நீக்கிவிட்டால் ‘கிறிஸ்தவ தலைமைத்துவமானது, உப்பு அதன் சாரத்தை இழந்தது போலாகும்.
நயீன் ஊரைச் சேர்ந்த அந்த கைம்பெண்ணைப் போன்றோரைப் பற்றி நாம் நினைக்கும் போது, அவர்கள் மீது இரக்கம் கொள்வது எளிது. யாருக்கும் அவர்கள் மீது இரக்கம் ஏற்படும். ‘ஐயோ!’ பாவம் என்பார்கள். அவர்களின் இதயமும் எதிர்காலத்தை நினைத்து பயத்தால் நிறைந்திருக்கலாம். அவர்களுக்குத் தேவை வெறும் ஆறுதல் வார்த்தைகள் மட்டுமல்ல... வாழ்வாதாரத்திற்கான உதவி.
இந்த உண்மையான துக்கம் மற்றும் பயத்தின் பின்னணியில்தான் இயேசு அவளுடைய வாழ்க்கையில் நுழைகிறார். நம்பிக்கையையும் விடுதலையையும் அளிக்கிறார். அவள் இழந்ததை மீட்டுக்கொடுக்கிறார். அவள் இயேசுவை அறியாதவளாக இருந்திருக்கக்கூடும். அவளது மகனுக்கு உயிர் கொடுக்குமாறு நயீன் ஊரில் யாரும் இயேசுவைக் கேட்கவுமில்லை. ஆனாலும், இயேசு உதவுகிறார்.
இயைசுவின் உயிருள்ள சீடர்களாகிய நாம் உதவி செய்யக் காத்திருக்க வேண்டியதில்லை. கடவுளின் அருளை பிறரோடு பகிர நாம் தயங்கினால், ஒரு நேரத்தில் கடவுளிடம் நமக்கு வேண்டிய அருளைக் கேட்டு எங்ஙனம் மன்றாட முடியும்? இன்றைய உலகில் இரக்கம் என்றால் என்ன, அது எவ்வளவு விலை என்று கேட்கக் கூடிய அளவிற்கு மனித வாழ்வு மாறிவிட்டது என்பது கவலை தரும் ஒரு விடயமாக இருக்கிறது.
‘இறக்கத்தானே பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ என்ற அன்னை தெரேசாவின் அமுத மொழிகளை மனதில் கொண்டு, இரக்கம் சுரக்கும் இதயங்களாக வாழ்வோம்
இறைவேண்டல்.
மிகவும் இரக்கமுள்ள ஆண்டவரே, துன்புறும் அனைவர் மீதும் நீர் இரக்கம் காட்டுகிறீர். உம்மை போன்று நானும் என்னால் இயன்றளவு பிறர் மீது இரக்கச்சிந்தை கொண்டு வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
