பிறர் குற்றமல்ல, நம் குற்றம் நாம் அறிவோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

12 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 23ஆம் வாரம் – வெள்ளி
1 திமொத்தேயு 1: 1-2, 12-14
லூக்கா 6: 39-42
பிறர் குற்றமல்ல, நம் குற்றம் நாம் அறிவோம்!
முதல் வாசகம்.
புனித பவுல் தனது உண்மையுள்ள சீடரான தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில், பவுல் அடிகள், தனக்கு (பவுலுக்கு) தவறான தகவல் கிடைத்ததாகவும், அந்தத் தவறான தகவலின்படிதான் தான் ஆரம்பகால கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களைத் துன்புறுத்தியதாகவும் ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், கடவுள் அவருடைய பாவ வழிகளைத் தெளிவாகக் காண அவருக்கு உதவினார் என்றும், இயேசு கிறிஸ்துவின் நறசெய்தியை மற்றவர்களுக்குக் கொண்டு வர அவரை நியமித்தார் என்றும் எடுத்துரைக்கிறார்.
மேலும், புனித பவுல் தனது "நம்பிக்கையில் உண்மையான பிள்ளை" மற்றும் சக ஊழியரான புனித தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். அவர் ஒரு நீதிமான் ஆக வேண்டும் என்ற ஆசையில், இயேசுவின் உண்மை நெறியைப் பின்பற்றினவர்களை துன்புறுத்தினார். கடவுளின் அருளால், இயேசுவே பவுலுக்கு தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் தோன்றியதால், பவுல் தனது வழிகளின் குருட்டுத்தன்மையைக் காண வாய்ப்பு வழங்கப்பட்டது. இயேசுவோடான சந்திப்புக்குபிறகு, சவுல் என்ற பவுல் உண்மை நெறிக்குத் திரும்பியது மட்டுமல்லாமல், நற்செய்தியைக் குறிப்பாக புறவினத்தாருக்கு அறிவிக்க நியமிக்கப்பட்டார் என்று திமொத்தேயுவுக்கு குறிப்பிட்டு எழுதுகிறார்.
நற்செய்தி.
ஒரு பார்வையற்ற நபர் மற்றொரு பார்வையற்றவரை வழிநடத்துவது போன்ற அற்புதமான விவரிப்புடன் இயேசு தொடங்குகிறார் - இருவரும் குழியில் விழும் அபாயம் உள்ளது. இது நுண்ணறிவு இல்லாத தலைவர்களைப் பின்பற்றுவதை எச்சரிக்கிறது.
அடுத்து, குருவுக்கும் சீடருக்கும் இடையிலான சிறந்த உறவு பற்றிய விளக்கத்தை இயேசு முன்வைக்கிறார். சீடன் குருவைவிட உயர்ந்தவன் அல்ல. முழுமையாகப் பயிற்சி பெற்றால் மட்டுமே சீடன் குருவாக ஆக முடியும். உண்மையான சீடத்துவம் என்பது கிறிஸ்துவின் வழிகாட்டுதலின் கீழ் பணிவு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை உள்ளடக்கியது.
அடுத்து, தீர்ப்புக்கு முன் சுய விழிப்புணர்வு பற்றி ஆண்டவர் பேசுகிறார். இதில் மரக் கட்டை மற்றும் துரும்பு ஆகிய இரு பொருள்களை உவமையாகப் பயன்படுத்துகிறார் ஒருவரின் சொந்த பெரிய தவறுகளைப் புறக்கணித்து மற்றவர்களின் சிறு சிறு குற்றங்களைப் பெரிதுப்படுத்தி குற்றம் கூறுவதை இயேசு விவிக்கிறாரர். மற்றவர்களின் சிறிய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு முன்பு உண்மையான சுய குற்றங்களை, தவறுகளைக் கண்டறிவதற்கு இயேசு அழைக்கிறார்.
சிந்தனைக்கு.
ஆன்மீக வளர்ச்சி என்பது ஒருவரின் சொந்த குறைபாடுகளை ஒப்புக்கொண்டு அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் தொடங்குகிறது. நமது பார்வை தெளிவாகிவிட்டால் நாம் மற்றவர்களுக்கு இரக்கத்துடனும் தெளிவுடனும் சிறப்பாக உதவ முடியும்.
நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களை அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது என்று எச்சரிக்கிறார். அவர்கள் மற்றவர்களை விட மேலானவர்களாகவோ அல்லது உயர்ந்தவர்களாகவோ காட்டிக்கள்ளக்கூடாது என்பது றியேசுவின் வெளிப்படை போதனையாக உள்ளது. சீடர்களும் கடவுளின் மன்னிப்பை அனுபவித்த பாவமுள்ள நபர்கள். எனவே, பிறர் கடவுளிடம் நெருங்கி வருவதற்கு மற்றவர்களுக்கு உதவ வேண்டுமேயொழிய, மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு தடைக் கற்களாக இருப்பது கூடாது என்கிறார்.
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? என்ற கேள்வியை இயேசு முன்வைக்கிறார்.
சீடர்கள் அவர்களின் தவறான கருத்துக்களில் பிடிவாதமாக நீடித்திருந்தால், அவர்களும் பார்வையற்றவர்களாக பிறரை வழிநடத்த இயலாதவர்களாக இருப்பர். எனவே, சீடர்கள் தன்னிலை உணர வேண்டும். அவர்கள் முதலில் தெளிவாகப் பார்ப்பதைத் தடுக்கும் எதையும் சரிசெய்ய வேண்டும் என்கிறார் ஆண்டவர். ஊருக்குதான் உபதேசம் என்பது சீடத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்பது திண்ணம்.
ஒருவர் முதலில் தன்னிலை ஆய்ந்தறியுமுபோது, அதுதான் ஒருவரில் மனத்தாழ்மையை அல்லது தாழ்ச்சி உணர்வை உருவாக்கும். சுய விளம்பரத்தால் உயர்ந்தவர் வாழ்வும் நிலையும் நிரந்தரம் ஆகாது. சுய விளம்பரம் என்பது ஒரு மாயை. இத்தகைய சுய விளம்பரத்திற்கு சீடத்துவம் ஏற்றதல்ல.
நம்மை நாரே அறிந்துணர சிறந்த வழி இயேசுவை உற்று நோக்குவதாகும். அவர் நாள் முழுவதும் நமது கவனத்தின் மையமாக மாறும்போது, நாம் அவரை அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், நம்மை நாம் நேர்மைபடுத்திக்கொள்ளலாம். தூரத்தில் இருக்கும் துரும்பு தெளிவாகத் தெரியும்போது கண்முன்னே உள்ள யானை தெரியவில்லை என்பது பித்தலாட்டம்.
முதல் வாசகத்தில் அறியாமையில் இருந்தபோது, பவுல் அடிகள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார் என்றும், பின்னர் இயேசுவை அறிந்துக்கொண்ட நாள்முதல் கிறிஸ்தவரகளின் தோழனாக மாறினார் என்றும் சாட்சியம் பகர்கிறார். அவர் அவரது அறியாமையை ஏற்றுக்கொண்டார், உத்தமர்போல் பாசாங்கு செய்யவில்லை. தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவன் ஆகிறான். ஆம். நமக்கு நாமே மகுடம் சூட்டிக்கொள்ள நினைப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை, அழிவுதான் விழையும்.
பவுல் அடிகள், ‘நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன்’ (கலா 6:14) என்கிறார். இவரது இப்படிப்பினையை மனதில்கொண்டு வாழ முற்படுவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, என் பார்வையில் அடுத்திருப்பவர் மட்டில் நான் கொண்டுள்ள எல்லா குற்றப் பார்வைகளையும் நீக்கி, நீர் அவர்களை அறிந்திருப்பது போலவும், அவர்களை நான் அன்பு செய்ய எனக்கு உதவியருளும். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
