ஒதுங்கி போவது பயந்து போவதாகாது! | ஆர்கே. சாமி | Veritas Tamil

1 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 22ஆம் வாரம் – திங்கள்
 
1 தெசலோனிக்கர் 4: 13-17
லூக்கா 4: 16-30


ஒதுங்கி போவது பயந்து போவதாகாது!
 

முதல் வாசகம்.

புனித பவுல் முதன்முதலில் தெசலோனிகாவுக்குச் சென்று சில வாரங்கள் மட்டுமே தங்கி போதித்தப்போது,  அவர் கிறிஸ்தவ சமூகத்தினரிடம், இயேசுவின் இரண்டாம் வருகை அண்மையில் உள்ளதாகவும், அவரை எதிர்கொள்ள  தயாராக வேண்டும் என்று கூறியிருந்தார்.  பவுல் சென்றதிலிருந்து, விசுவாசிகளில் சிலர் இறந்துவிட்டதால், தெசலோனிக்கேயர்கள் பலர் வருத்தப்பட்டனர். எனவே, நம்பிக்கையற்ற நிலையில்,  பவுல் சொன்னதை அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்கள்.

மேலும் நிலைவாழ்வில் நம்பிக்கையற்றவர்களைப்  போல அழுது புலம்பினர்.  கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து இறக்கும் விசுவாசிகள் நிலைவாழ்வை நிச்சயம் அனுபவிப்பார்கள் என  பவுல் தெசலோனிக்கேயருக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் வார்த்தைகளை எழுதுகிறார். இயேசு முதலில் நினைத்த அளவுக்கு விரைவாகத் திரும்பாததாலும், திருமுழுக்குப் பெற்ற  நம்பிக்கையாளர்கள் சிலர் இறந்து கொண்டிருந்ததாலும்,   ஆண்டவராகிய இயேசுவின்  மறுவருகை பற்றிய தனது கருத்தை பவுல் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. 

அவர், நிலைவாழ்வில் நம்பிக்கையற்றவர்களைப் போல துக்கப்படாமல், இயேசுவின் மறுவருகையை எதிர்ப்பாரத்திருக்க  வேண்டும் என்று  அனைத்து இறைமக்களையும் வலியுறுத்துகிறார்,  உலக வாழ்க்கை மரணத்தோடு    முடிவடைவதில்லை என்று விவரித்துத் திடப்படுத்துகிறார்.

நற்செய்தி.

இன்று நாம் லூக்கா நற்செய்தியிலிருந்து வாசகங்க்ளைத் தொடங்குகிறோம்.  இன்றைய பகுதியில், இயேசு தனது முதல் பொது ஊழியத்திலிருந்து திரும்புகிறார். அவர் கலிலேயாவின் பிற பகுதிகளில் கற்பித்து, குணப்படுத்தி, நல்ல செய்தியை அறிவித்து வருகிறார். அவரது அற்புதங்கள் மற்றும் மறையுரை பற்றிய செய்திகள் வரது ஊரான நாசரேத்தை எட்டியிருந்தது. உள்ளூர் மக்கள் அனைவரும் அவர் பேசுவதைக் கேட்க கூடிவருகையில், இயேசு நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்தில்  நுழைகிறார். 

அப்போது, ஏசாயாவின் மறைநூல் பகுதியைப் படித்த பிறகு, கடவுளின் ஆவி ஒரு தனிநபரின் மீது வருவார், அவர் வலிமையான அடையாளங்களைச் செய்வார் என்ற ஏசாயாவின் வாக்குறுதி நிறைவேறியுள்ளதாக அவர் அறிவிக்கிறார். 

நாசரேத்து மக்களோ, அவர் மற்ற  இடங்களில் செய்த  அதே அற்புதங்களை நாசரேத்திலும்  அவர்கள் முன்னிலையில்  செய்ய வேண்டும் என்று    எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், இயேசு மற்ற இடங்களில் செய்ததைச் செய்ய முடியாது என்று கூறுகிறார், ஏனென்றால் மக்கள் அவரை உண்மையில் யார் என்பதற்காக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவரை தங்கள் சொந்த சக குடிமக்களில் ஒருவராக மட்டுமே பார்க்கிறார்கள். கோபமடைந்த மக்கள், நகரம் கட்டப்பட்ட பாறைகளின் விளிம்பிலிருந்து அவரைத் தூக்கி எறிய விழைக்கிறார்கள்.

சிந்தனைக்கு. 


லூக்கா 4:16-30-ன் முக்கிய செய்தியைக் கருத்தூண்றிக் கவனித்தால், மீட்பராகிய இயேசு, சொந்த  யூத சமூகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் நற்செய்தி, விடுதலை மற்றும் குணப்படுத்துதலைக் கொண்டுவர கடவுளின் இறைவாக்குத் திட்டத்தை நிறைவேற்ற வந்தார் என்பதை சுட்டிக்காட்டி,  கூட்டத்தினருக்கு எடுத்துரைக்கிறார். 

இயேசு, கடவுளின் இறைவாக்கினர்கள் எலியாவும் எலிசாவும் இஸ்ரவேலுக்கு அல்ல, மாறாக அந்நியர்களிடம் அனுப்பப்பட்டதை நினைவுப்படுத்தி அவர் விளக்கினார்: எலியா சீதோனில் ஒரு விதவைக்கும், எலிசா சிரியனான நாகமானுக்கும் அனுப்பப்பட்டார் என்பதை மேலும் விவரித்து தமது நிலையை எடுத்துரைக்கிறார். 

இதைக் கேட்டதும்ப், தொழுகைக் கூட்டத்தினர்  கோபமடைந்து, இயேசுவை ஊருக்கு வெளியே துரத்தி, ஒரு செங்குத்தான மலையிலிருந்து அவரைத் தள்ளிவிட முயன்றனர். ஆனாலும் அவர் காயமடையாமல் அவர்களைக் கடந்து சென்றுவிட்டார். இங்கே என்னை கவர்ந்த பகுதி யாதெனில், எதிர்ப்பானது  சொந்த ஊரிலேயே இருப்பதை அறிந்தும், இயேசு உறுதியாக இருந்து, தம்முடைய பாதையில் தடுமாறாமல் தொடர்கிறார்.

கிறிஸ்தவச் சமூகத்திலும் குறைகூறுவோர், புறம்பேசுவோர் இருக்கிறார்கள். இவர்கள் பலருடைய நற்பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள். இத்தகையோரால், பலர் ஏற்றப்பணிகளை தூக்கி எறிந்துவிட்டு காணாமால் போய்விடுவர்.  நற்செய்தியில் இயேசு, உறுதியாக இருந்து, தம்முடைய பாதையில் தடுமாறாமல் தொடர்ந்ததுபோல நம்முடைய நேர்மையை துணையாகக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். 

முதல் வாசகத்தில் இயேசுவின மறுவருகைக்கு முன்பதாக திருமுழுக்குப் பெற்ற  நம்பிக்கையாளர்கள் சிலர் இறந்து கொண்டிருந்ததால் தெசலோனிக்க சமூகத்தினர் பெரும் கவலையுற்ற வேளையில், பவுல் அவர்களுக்கு நம்பிக்கை ஒளி ஊட்டுகிறார். 

எது நேர்ந்தாலும் இயேசுவில் நம்பிக்கை இழப்பது கோழைத்தனம்.  பிரச்சனைகள், பலத்த எதிர்ப்பு சூழ்ந்த வேளையில் இயேசு நழுவிச் சென்றார். அது அவருடைய விவேகம். நாமும் விவேகத்தோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இது கூழைக்கும்பிடு என்றோ சந்தர்ப்பவாதி என்றோ  பொருள்படாது. உண்மையை நெஞ்சில் சுமந்துகொண்டு, ஏற்ற நேரம்வரை காத்திருப்பதே விவேகம். கிறிஸ்தவருக்கு இது இன்றியமையாதது. 

தம்முடைய சொந்த ஊரில் உள்ளவர்களை அவர்கள் அனுபவித்து வந்த அலட்சியத்திலிருந்து விடுவிக்க இயேசு முயன்றதைப் போலவே நாமும் அவரைப் பின்பற்றும் வகையில், துணிவு, இரக்கம், தெளிவு மற்றும் அன்புக்காக இறைவேண்டல் செய்ய வேண்டும். 


இறைவேண்டல்.

சவால்களை ஏற்ற ஆண்டவரே,   உமது உறுதிமிகு வார்த்தையை என் சமூகத்தில்   பகிர்ந்து கொள்ள என்னைத் திடப்படுத்துவீராக.  இயேசுவே, நான் உம்மில் பற்றுறுதி கொண்டுள்ளேன். ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452