அடுத்தவர் நலம் பேண், ஆன்மா வாழும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
6 அக்டோபர் 2025
பொதுக்காலம் 27ஆம் வாரம் – திங்கள்
யோனா 1: 1-17
லூக்கா 10: 25-37
அடுத்தவர் நலம் பேண், ஆன்மா வாழும்!
முதல் வாசகம்.
மனித வழிகளும் மனப்பான்மைகளும் எப்போதும் கடவுளின் வழிகளுடனும் இறை சித்தத்துடனும் ஒத்துப்போவதில்லை.
யோனா இறைவாக்கினரின் கதை நம்மில் பெரும்பாலோருக்கு நன்கு தெரிந்ததே. இஸ்ரயேல் (வட நாட்டுக்கு) வடக்கே ஒரு புறவினத்தாரின் நாடான அசீரியாவின் தலைநகரான நினிவே மக்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தியை அறிவிக்க யோனா கடவுளால் அழைக்கப்படுகிறார். நினிவே அக்காலத்தில் பெரும் பாவச் செயல்களுக்குப் பெயர்போன நகராக விளங்கியது.
யோனாவை நினிவேவுக்குச் செல்லும்படி கடவுள் அழைத்தார், ஆனால் அவர் அழைப்பை முதலில் ஏற்கவில்லை. அவர் "கடவுளின் பார்வையிலிருந்து தப்பி ஓட முயற்சிக்கிறார். இறை அழைப்புக்கும் மனித தயக்கம் இடையிலான பதற்றத்தை இவ்வாசகப் பகுதி விவரிக்கிறது.
கடவுளின் கட்டளைக்கு அனைத்தும் கீழ்ப்படிகின்றன என்பது இங்கே உணர்த்தப்படுகிறது. மீன் கூட இறை அதிகாரத்தின் கீழ் உள்ளது என்பதை அறிகிறோம். யோனா தப்பியோடினாலும் கடவுள் அவரை விடவில்லை. அவர் கப்பலில் பயணித்தப்போது, ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கப்பல் தள்ளாடிய வேளை, அதற்குக் காரணம் யோனா என்று அறிகிறார்கள்.
எனவே, உயிர் பிழைக்க “கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்ய வேண்டும்? “ என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள்’ என்று பதிலுரைக்கவே, யோனா கப்பலில் இருந்து கடலில் வீசப்படுகிறார். நிறைவாக, ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்தபடியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார் என அறிகிறோம்.
நற்செய்தி.
அக்காலத்தில், யூதர்களைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு அடுத்திருப்பவர் என்றால் தங்கள் இனத்தவர் என்றும் அதிலும் அவர்களது இனத்தில் உள்ள நேர்மையாளர்கள் மட்டுமே என்றும் எண்ணினர். பாவிகளை, பிற இனத்தாரை அவர்கள் அடுத்திருப்பவராக நினைக்கவில்லை. இந்நிலையில்தான் அவரிடம், “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேட்ட திருச்சட்ட அறிஞரிடம், இயேசு நல்ல சமாரியன் உவமை வாயிலாகத் தேவையில் யாவரும் அடுத்திருப்பவர்தான் என்று சொல்லி, நீரும் அடுத்திருப்பவராக இரும் என்கிறார்.
சிந்தனைக்கு.
சில நேரங்களில் கடவுள் நம்மை நாம் விரும்பாத இடத்திற்குச் செல்லும்படி கேட்கிறார். இன்றைய முதல் வசகமானது, கடவுளின அழைப்புக்கு நாம் கீழ்ப்படிகிறோமா அல்லது புறக்கணித்துத் தப்பி ஓடுகிறோமா ? என்பதைப் பற்றி சிந்திக்க அழைக்கிறது. இங்கே, நினிவே மக்கள் அசீரியர்கள். அவர்கள் முற்றிலும் அந்நியர்கள். ஆனாலும், அவர்கள் பாவத்தின் நிமித்தம் அழியக்கூடாது என்று அவர்களும் மனமாற ஒரு வாய்ப்புக்கொடுக்கிறார் கடவுள். ஆம், புற இன மக்களையும் கடவுள் தம் மக்களாகக் கொண்டுள்ளார் என்பதை யோனாவின் அழைப்பு காட்டுகிறது. கடவுள் ஒருபோதும் மக்களினங்களுக்ககிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதை இங்கே அறிகிறோம்.
நற்செய்தியில் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வருகின்ற திருச்சட்ட அறிஞர், “நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டதோடு, அவர் தன்னை நேர்மையாளர் என காட்டிக்கொள்ள விரும்பி, “யார் எனக்குக் அடுத்திருப்பவர்?” என்று கேட்கின்றார். இக்கேள்விக்கு இயேசு கூறும் விடைதான் நல்ல சமாரியன் உவமை. இவ்வுவமை வழியாக இயேசு கூறும் செய்தி எக்காலத்திற்கும் உரியது.
இயேசுவின் உவமையில் நல்ல சமாரியன் எப்படி வேற்றுமை பாராமல், அன்னியன் என்று எண்ணாமல், அடிபட்டுக் குற்றுயிராக கிடந்தவர்க்கு இரக்கம் காட்டினாரோ, அதுபோன்று திருச்சட்ட அறிஞரும், நாமும் தேவையில் இருப்பவர் எந்த இனத்தவராக, எந்த சமயத்தவராக, எந்த பண்பாட்டைக் கொண்டவராக இருந்தாலும் இரக்கம் காட்ட வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றார் ஆண்டவர். நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், பிளவுகள், சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், ‘தேவை’ அல்லது ‘உதவி’ அல்லது ‘ஆபத்து’ என்று வரும்போது நாம் கடவுளின் மக்களாக ஒன்றுபட வேண்டும்.
அந்த மறைநூல் அறிஞரின் இந்தக் கேள்வியை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது. நிலைவாழ்வு பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அனைவரும் முழு மனதுடன் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த பரபரப்பான அன்றாட வாழ்வில் நமது ஆன்மாவுக்கான விடயங்களில் நாம் பாரா முகமாக இருந்துவிடுகிறோம். தன்னலம் நம்மைத் தனிமைப்படுத்திவிடுகிறது. ‘நான் உண்டு, என் உலகம் உண்டு’ என வாழத் தொடங்கிவிட்டோம். அடுக்குமாடி வீடுகளில் வாழ்வோருக்கு அடுத்த வீட்டில் வாழ்பவர் யார் எவர் என்று தெரியாது.
மேலும், நற்செய்தியில், திறந்த மனதுடன் இயேசுவிடம் வருவதன் முக்கியத்துவத்தையும், வாழ்க்கைக்கான ஆழமான ஆன்மீக பதில்களை உண்மையாகத் தேடுவதன் முக்கியத்துவத்தையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஒருபோதும் இயேசுவைச் சோதிக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையுடன் நாம் தேடும் ஒவ்வொரு பதிலும் அவரிடம் இருப்பதாகவும் நாம் நம்ப வேண்டும்.
இன்று, நிலைவாழ்வைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?" என்று நமக்கு நாமே கேட்டறிதல் இன்றியமையாதது. யோனாவைப்போல் (இந்த கேள்வியிலிருந்து) நாம் தப்பி ஓட முடியாது. நன்மைகள் செய்யாத நாள், அடுத்திருப்பவர் அன்பு செய்யாத நாள், இறந்த நாளுக்குச் சமம் என்கிறார் ஓர் அறிஞர்.
இறைவேண்டல்.
என் ஆண்டவரே, தயைக்கூர்ந்து என் இதயத்தைத் திறக்கவும், அதனால் நான் மனத்தாழ்மையுடனும் நேர்மையுடனும் உங்களிடம் வரவும் எனக்கு அருள்புரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452