இடைவிடாது செபிப்போமா! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil
பொதுக்காலம், வாரம் 32 சனி மறையுரை 15.11.2025
மு.வா: சாஞா: 18: 14-16; 19: 6-9
ப.பா: திபா 105: 2-3. 36-37. 42-43
ந.வா: லூக்: 18: 1-8
இடைவிடாது செபிப்போமா!
ஒரு ஊரில் ஒரு தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அந்த குடும்பம் ஒரு வசதியான குடும்பம். இவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று பலர் விமர்சனம் செய்தனர். இருந்தபோதிலும் அவர்கள் மனம் தளரவில்லை. ஆழமான நம்பிக்கை கொண்டு இடைவிடாமல் இறைவனிடம் இறைவேண்டல் செய்தனர். அதேபோல தேவையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்தனர். இறுதியில் மருத்துவரே வியக்கும் அளவுக்கு அந்த தம்பதியினருக்கு அற்புதமாக ஆண் குழந்தை பிறந்தது. இது அந்த தம்பதியினர் வைத்திருந்த இறைநம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசே அக்குழந்தை.
நம்முடைய வாழ்க்கையிலும் இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருக்கின்ற பொழுது நம் வாழ்வில் அனைத்தையும் பெற முடியும். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மனம் தளராமல் நம்பிக்கையோடு இறைவனை மன்றாட அழைப்பு விடுகிறார்.கடவுளுக்கு அஞ்சாத, மக்களையும் மதிக்காத நடுவரிடத்தில் ஒரு ஏழை கைம்பெண் நீதி கேட்கிறார். நடுவர் நீதி வழங்காமல் காலம் தாழ்த்தினார். ஆனால் அந்த ஏழைக் கைம்பெண் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், அவர் அவரின் தொல்லையின் பொருட்டு நீதி வழங்கினார். இது நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால் அன்றாட வாழ்வில் கடவுளிடம் வேண்டும் பொழுது, நம்முடைய விண்ணப்பம் உடனே கேட்கப்படாமல் இருக்கலாம். ஆனால் கடவுள் நிச்சயம் நமக்கு விடுதலை அளிப்பார் என்ற நம்பிக்கையோடு நம் வாழ்விலே பயணிக்கும் பொழுது கடவுள் தரும் வெற்றி என்ற ஆசீர்வாதத்தை நாம் நிறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
480 ஆண்டுகளாக எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ராயேல் மக்கள் கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு கூக்குரலிட்டனர். இறுதியாக மோசேயின் வழியாக கடவுள் அவர்களுக்கு விடுதலை அளித்தார். அமலேக்கியரோடு இஸ்ராயேல் மக்கள் போர் புரிந்த பொழுது, மோசே வானத்தை நோக்கி கரம் விரித்து இடைவிடாமல் ஜெபித்த போதெல்லாம் கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு வெற்றியைக் கொடுத்தார். ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பல்வேறு நோய்களாலும் பிணிகளாலும் வருந்தியவர்கள் நிச்சயம் இயேசு காப்பாற்றுவார் என்று நம்பினர். இடைவிடாமல் அவர் தங்களை நோக்கி வர வேண்டுமென்று துடித்தனர். இறுதியில் நலம் பெற்றனர். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் நாம் எதாவது ஒன்றுக்காக இடைவிடாமல் நம்பிக்கையோடு பயணிக்கும் பொழுது கடவுளின் ஆசீரையும் வல்லமையையும் நிறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
நாம் வாழும் இந்த உலகத்தில் கடவுளை நம்முடைய அன்றாட வாழ்வில் அனுபவிக்க வேண்டும் என்றால், கடவுள் மீது ஆழமான நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையோடு வாழ்வில் உழைக்கவேண்டும். நம் வாழ்வில் வரும் துன்பங்கள், இடையூறுகள், அச்சம், கவலைகள், தடைகள் போன்றவற்றைக் கண்டு மனம் தளராமல் துணிவோடு பயணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் மீது ஆழமான நம்பிக்கையை யோபுவைப் போல வைத்து வாழ்வில் பயணிக்கின்ற பொழுது, நிச்சயம் கடவுள் நமக்கு நிறைவான ஆசீரைக் கொடுப்பார். எனவே இடைவிடாமல் இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்வில் வெற்றியின் கனியை சுவைப்போம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள ஆண்டவரே! எமது வாழ்க்கையில் இடைவிடாத தன்னம்பிக்கையோடும் இறை நம்பிக்கையுடனும் வாழ்ந்து உமது ஆசீரையும் மனித வாழ்வில் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருளைத் தாரும்.ஆமென்.