பற்றற்றவருக்கு சுற்றமென நின்றிருப்பான் இறைவன்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

30 ஜூலை 2025
பொதுக்காலம் 17ஆம் வாரம் –புதன்
விடுதலை பயணம 34: 29-35
யோவான் 13: 44-46
பற்றற்றவருக்கு சுற்றமென நின்றிருப்பான் இறைவன்!
முதல் வாசகம்.
முதல் வாசகம் மோசே ஆண்டவரின் மலையிலிருந்து இறங்குவதை விவரிக்கிறது. அவர் கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மோசே அதை அறியவில்லை.
ஆரோனும் இஸ்ரயேலரும் மோசேயின் முகத்தில் மாற்றத்தைக் கவனிக்கிறார்கள், அவரை நெருங்கிச் செல்ல அஞ்சுகிறார்ள. மோசேயின் முகத்தில் ஒளிரும் ஒளியின் காரணமாக மோசே தனது முகத்தை ஒரு முக்காட்டால் மூடுகிறார். ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுக்கிறார்.
மோசே கடவுளின் முன் செல்லும் ஒவ்வொரு முறையும், அவர் தனது முக்காட்டை நீக்கி, கடவுளால் மீண்டும் ஒளி (ஞானம்) பெறச் செய்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் இயேசு கூட்டத்தினருடன் விண்ணரச எடுத்துரைக்கப் பயன்படுத்தும் உவமைகளில் ஒன்றான ‘புதையல்’ மற்றும் ‘முத்து’ என்ற உவமையை அறிய வருகிறோம். கடவுளின் ஆட்சியின் ஒரு பகுதியாக இருப்பதன் மிகுந்த மதிப்பை இந்த உவமையில் கையாளப்படும் புதையல் மற்றும் முத்து ஆகிய இரண்டும் வலியுறுத்துகின்றன. இந்த உவமையில், புதையல் மற்றும் முத்து என்பன விண்ணரசுக்கு ஒப்பிடப்படுகின்ன்றன. இவை இரண்டும் விலைமதிப்பற்ற இயேசுவைக் குறிக்கிறன, அந்த நிலத்தை வாங்குவதும் முத்துவை தேடி அடைவதும் இயேசுவை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறன என்று பொருள்கொள்ளலாம்.
சிந்தனைக்கு.
புதையல் பற்றி சிந்திக்கும்போது, புதையலை எவரும் விலைகொடுத்து வாங்க முடியாது. ஆனால், புதையல் மறைந்திருக்கும் நிலத்தை விலைகொடுத்து வாங்க வாய்ப்புண்டு. அவ்வாறே விண்ணரசை யாராலும் விலை கொடுத்து வாங்க இயலாது. புதையலைப்போல விண்ணரசு நமது கணுகளுக்குப் புலப்படும் ஒன்றல்ல. ஆனால், விண்ணரசில் பங்குபெற, இயேசு எனும் நிலத்தைப் பற்றிக்கொண்டால், விண்ணரசு நம் வசமாகும். கடவுளின் ஆட்சியில் அதாதவது, விண்ணசில் குடிகொள்ள விரும்புவோர் தங்களிடம் உள்ள உலகப் பற்று அனைத்தையும் விற்க (விட்டுவிட) முன்வர வேண்டும். இங்கே, "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்பதற்கு வாய்ப்பே இல்லை. இயேசுவில் பற்றுறுதியா அல்லது உலகப் பற்றா நாம் முடிவு செய்யவேண்டும்.
நமது மீட்புக்காக தந்தை ஈந்த விலைமதிப்பற்ற புதையல் நிலம் அல்லது முத்துதான் இயேசு. எனவே நாம் அவரை நம் வாழ்வில் கண்டறிந்தால், நம் சொந்த குடும்பங்கள் உட்பட அனைத்தையும் கைவிட்டு, தொடக்கக்கால சீடர்கள் போல், அவருடைய சீடர்களாக அவரைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு உலகப்பற்றைத் துறந்து வாழ்வதில் சீடத்துவத்தின் சிறப்பு அடங்கியுள்ளது.
அடுத்து, கடவுளுடைய அரசை (புதையலை) கண்டறிய நமக்கு கடின உழைப்பு தேவை. புதையல் இருக்கும இடத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்தால் அது கைவசமாகாது. வியர்வை சிந்தி நாமாகவே தோண்டி எடுக்க வேண்டும். விலைமதிப்பற்ற முத்தை வெளிக்கொணரவும் ஆழ்கடலில் தேடி எடுக்கவும் நாம் நமது ஆன்மீக வாழ்க்கையில் மூழ்க வேண்டும். நம் இருதயங்கள் மலிவான பொழுதுபோக்குகளைத் தேடுவதில் அல்ல மாறாக, ஆண்டவரில் கொண்டுள்ள உறவில் நாளும் வளர வேண்டும்.
இந்த உலகத்தின் வெற்று வாக்குறுதிகளிலிருந்தும், காரியங்களிலிருந்தும் நாம் நம்மைப் பிரித்துக் கொண்டு, மனமாற்றம், மன்னிப்பு, நீதி மற்றும் அமைதி ஆகியவற்றின் நற்செய்தியைப் பின்பற்றும்போது, கடவுள் அருளும் ‘புதையல்’ இந்த பூமியில் நமக்கு கிட்டும். நாம் இறந்த பிறகுதான் அது கிடைக்கும் என்பதல்ல.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. இந்த பூமியில் உயிரைவிட்டுதான் இயேசு விண்ணக வாசலை நமக்குத் திறந்தார் என்பதை நினைவில் கொள்வோம்
இறைவேண்டல்.
ஆண்டவரே, உம்முடனான எனது உறவை விட, மற்றவர்களையும் பொருட்களையும் உயர்ந்த நிலையில் வைத்த காலங்களுக்காக மனம் வருந்துகிறேன் என்னை மன்னிப்பீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
