விழித்திருங்கள்!" நம்மில் எப்போதும் எதிரொலிக்கட்டும்! | | ஆர்கே. சாமி | Veritas Tamil

28 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 21ஆம் வாரம் – வியாழன்

1 தெசலோனிக்கர்  3: 7-13
மத்தேயு   24: 42-51

"விழித்திருங்கள்!" நம்மில் எப்போதும் எதிரொலிக்கட்டும்! 
 
 முதல் வாசகம்.

இன்றைய வாசகங்கள் கிறிஸ்தவ சமூகத்தில் ஒருவராக இருப்பதன் பொறுப்புகளில் கவனம் செலுத்த வலியுறுத்துகின்றன. புனித பவுல் தெசலோனிகாவில் உள்ள விசுவாசிகளிடம் பேசுகிறார், அவர்களிடம் திரும்பி வர நேரம் கிடைக்கும் வரை அல்லது ஆண்டவராகிய இயேசு திரும்பி வரும் வரை தங்கள் நம்பிக்கை வாழ்வில்   விடாமுயற்சியுடன் இருக்குமாறு அவர்களை வலியுறுத்துகிறார்.

தெசலோனிக்கேயர்கள் காட்டிய நம்பிக்கை உறுதிக்காக  பவுல் கடவுளுக்கு நன்றி கூறுகிறார், ஆனால் அவர்கள் அந்த நம்பிக்கையை முழுமையாக வாழாமல் போகலாம் என்றும் அவர் கவலைப்படுகிறார். தெசலோனிக்கேக்கு அவர் மேற்கொண்ட முதல் வருகை மூன்று வாரங்கள் மட்டுமே (திப 17:2),  ஆதலால், முதல் வருகை குறுகியதாக இருந்ததன் காரணமாக பவுல் இவ்வாறு கருதுகிறார்.      

பவுல் தெசலோனிக்க மக்கள் முன்னிட்டு இறைவனிடம் மூன்று சிறப்பு காரணங்களை முன்வைத்து மன்றாடுகின்றார். 
I.    ஒன்று, நம்பிக்கையில் அவர்கள் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
II.    அன்பு அவர்களிடம் பெருக வேண்டும்.
III.    தூய்மையாக அவர்கள் நிலைக்க வேண்டும்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களை விழித்திருந்து, தம் வருகைக்காகத் தயாராக இருக்கப் பணிக்கிறார்.  இந்த வேண்டுகோளானது, இயேசுவின் மண்ணக வாழ்வையொட்டியது மட்டுமல்ல, மாறாக,  காலத்தின் முடிவில் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் இறைமக்களுக்குமான செய்தியாக உள்ளது. ஆரம்ப கால திருஅவையினர் இயேசுவின் இரண்டாம் வருகை மிக அருகில் நிகழவிருப்பதாக எண்ணி எதிர்ப்பார்த்திருந்தனர்.


இயேசு இரண்டாம் முறையாக வரும் வேளை  அவருடைய திருப்பெயரைச் சொல்லி அழைப்பவர்கள் அனைவரும் மீடபுப்பெற  தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.  


சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசு இரண்டு விடயங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஒன்று, மானிட மகனுடைய வருகை. இன்னொன்று நம்பிக்கைக்குரியவராய் இருப்பது. இறைமக்க்ளுக்கு இரண்டுமே இன்றியமையாதவை. அதிலும், அவருடைய இரண்டாம் வருகையானது, ஒரு திருடனின் வருகைப் போன்று இருக்கும் என்று குறிப்பிடுக்கின்றார். இதனை மேலும் விவரித்துக் கூற, இயேசு, பயன்படுத்தும் உவமைதான் வீட்டு உரிமையாளர் உவமை. 

இறைமக்களாக அழைக்கப்ப்ட்டுள்ள நம் ஒவ்வொருவருக்கும்  சில பொறுப்புகள் உள்ளன்.  அவற்றை நாம் கருத்தோடு நிறைவேற்ற வேண்டும் எனபதே ஆண்டவரின் எதிர்ப்பார்ப்பு. கவனமும் அக்கறையும் இன்றி, காலத்தைக் கழிப்போமானல், நமக்கான அழைப்புப் பயனற்றதாகிவிடும். கடமையை நிறைவேற்றாதவருக்கு திருஅவையில் உரிமைக்கு போராட வாய்ப்பில்லை. 

அடுத்து, ஒரு கத்தோலிக்கர் என்ற வகையில் நாம், அதில் நம்பிக்கைக்குரியவர்களாகவும்  இருக்கவேண்டும். நம்பிக்கையாக பணி ஏற்போருக்கு ஆண்டவரின் வெகுமதி நிச்சயம் உண்டு என்பதை நினைவில் கொள்வோம். 


விழித்திருக்க வேண்டும் என்ற அழைப்பையும் தூங்குபவர்களையும் நம் ஆண்டவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். தெளிவாக, "விழித்திருங்கள்!" என்று மிக அழுத்தமாகக் கூறுவதன் மூலம், ஆன்மீக ரீதியில் பேசுகையில், தூங்குவது எளிது என்றும் இயேசு நமக்குச் சொல்கிறார்.

அப்படியானால் நாம் அடிக்கடி விழித்திருந்து அவருடைய உடனிருப்பை உணர்கிறோமா? அல்லது நாம் பெரும்பாலும் தூங்கிக்கொண்டிருப்பதால் அவருடைய உடனிருப்பை அறியாமல் இருக்கிறோமா? சிந்திக்க வேண்டும். நாம் இவ்வுலகில் வாழ்வது நமது விருப்பத்திற்கு உட்பட்டதல்ல.  

எனவே, நாம் இந்த மண்ணுலகில் இருந்து பிரியும்போது, ஆண்டவரின் தீர்ப்பில் அவரைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாக இயேசுவின் இந்த  உவமையை உணர்ச்சிமிக்க அறிவுரையாகவும் எச்சரிக்கையாகவும்  நாம் பார்க்க வேண்டும். கடவுள் நம்மை எப்போதும் வழிநடத்த விரும்புகிறார். ஒவ்வொரு நாளும் தமது அருளால் நம்மை ஊக்குவிக்க விரும்புகிறார். நம் நாளை ஆக்கிரமித்துள்ள விடயங்களின் மீது ஒரு கண்ணும், மற்றொன்று அவர் மீதும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் விருப்பம் நம்மில் நிறைவேற நாம் விழிப்பாக இருப்பதைவிட வேறு வழியில்லை. 

"விழித்திருங்கள்!" அந்த வார்த்தைகள் நமக்குள் எதிரொலிக்கொண்டே இருக்கட்டும். 


இறைவேண்டல்.

ஆண்டவரே, நான் என் வாழ்வில், ஒவ்வொரு நாளும், உம்மிடம் தொடர்ந்து கவனம் செலுத்தும் விதத்தில் வாழ வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்கள். உமது விருப்பத்தை நிறைவேற்றும் மனவுறுதியை எனகளிப்பீராக. ஆமென்.
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452