சுய விளம்பரம், சாயம் வெளுக்கும்! | | ஆர் கே. சாமி | Veritas Tamil

26 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 21ஆம் வாரம் – செவ்வாய்
1 தெசலோனிக்கர் 2: 1-8
மத்தேயு 23: 23-26
சுய விளம்பரம், சாயம் வெளுக்கும்!
முதல் வாசகம்.
தெசலோனிகாவில் உள்ள விசுவாசிகளிடம், கடவுள் தன்னிடம் நடந்து கொண்டது போலவே, கடவுளின் சொந்தக் குழந்தைகளைப் பராமரிக்கும் ஓர் அன்பான பெற்றோராக, தானும் தெசலோன்னிக்கருடன் நடந்து கொண்டதாகப் பவுல் விவரிக்கிறார்.
பவுல் அடிகள் தெசலோனிக்கேயர் மீது உயர்ந்த எண்ணத்தைக் கொண்டிருந்தார் என்பது இவ்வாசகத்தில் தெளிவாகிறது. இவ்வாசகப் பகுதியில், பவுல் மேலும், “மனிதர்களுக்கு அல்ல, இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்கப் பார்க்கின்றோம்” என்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், வாழ்நாள் முழுவதும் மனிதர்களுக்கு அடிபணிந்து காலத்தைக் கழிப்பதைவிட, படைத்துப் பராமரிக்கும் கடவுளுக்கு அடிபணிவதே மேலான வாழ்வு என்று விவரிக்கிறார்.
மேலும், தெசலோனிக்க இறைமக்கள், கடவுளின் நற்செய்தியை உள்ளபடி ஏற்றுக்கொண்டதோடு, நன்கொடைகளையும் தாராள மனதுடன் வாழங்கியதைத் தொட்டு பாராட்டி பேசுகிறார்.
நற்செய்தி.
அக்காலத்தில் மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயக் கூட்டம், மோசேயின் சட்டத்தில் உள்ளபடி. விளந்த தானியங்களில் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகக் கடவுளுக்கு ஒதுக்கினார்கள். (இச 14: 22; லேவி 27: 30). இதில் அவர்களின் வெளிவேடம் மறைந்திருந்தது. இவ்வாறு, சாமன்ய மக்களுக்கு முன் தங்களை பக்திமான்களாகக் காட்டிக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை போன்றவற்றைக் கடைப்பிடித்து வாழவில்லை. ஏழைகளை ஒடுக்கினதை இயேசு சுட்டிக்காட்டி அவர்களின் வெளிவேடத்திற்கு ‘ஐயோ கேடு’ என்று விமர்சிக்கிறார்.
சிந்தனைக்கு
நாம் ஒவ்வொருவரும் பண்பாடு மற்றும் சமய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது, மதிப்புமிக்கது - ஆனால் அவை ஒருபோதும் நற்செய்தியின் மையக்கருவான நீதி, இரக்கம் மற்றும் நம்பிக்கையை குறைத்துவிடக்கூடாது. மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தில் சமூகத்தில் அவர்களை முன்னிறுத்தி, கடவுளின் திருப்பெயரை இரண்டாம் நிலையில் வைத்தனர்.
நற்செய்தியில். "கிண்ணத்தின் உட்புறத்தைச் சுத்தம் செய்" என்ற இயேசுவின் அழைப்பு நம்மை சுயபரிசோதனைக்கு அழைக்கிறது. நாம் எதற்கு முக்கியத்தவம் அளிக்கிறோம்? சிந்திக்க வேண்டி ஒன்று. பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்று வாழ்வதற்கு நாம் திருமுழுக்குப் பெறவில்லை.
ஞாயிறு தோறும் ஆலயத்திற்கு நாம் வந்து போவதால் நமது அண்டை அயலாருக்கு நாம் பக்திமான்களாகத் தோன்றலாம். ஆனால், தான தர்ம செயல்களில், மனிதநேயப் பணிகளில் நம்மை அவர்கள் மிஞ்சியிருந்தால், நாமும் வெளிவேடக்காரர்களே. சகோதர அன்பில்லாத கிறிஸ்தவக் குடும்பம் பொட்டில்லாத பூவையரைப் போன்றது. அங்கே கிறிஸ்தவ பண்பும் அழகும் மிளிராது.
நிறைவாக, வெளிவேடம் கொள்ளும் கிறிஸ்தவக் குடும்பம் நம்பிக்கை மோசடி குடும்பமாகும். படிப்பது இராமயனம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல, நாம் கற்றுக்கொள்வதோ நற்செய்தி படிப்பினைகள். ஆனால், கடைப்படிப்பதோ புறவின கொள்கைகள். இப்படி வாழ்வதோ வெளிவேடம்.
பவுல் அடிகள் போற்றிய தெசலோனிக்க கிறிஸ்தவர்கள் போல் நம் வாழ்வு அமைய வேண்டும். நமது கிறிஸ்தவ வாழ்வு ஊர் மெச்சும் வாழ்வாக இருக்க வேண்டும். முயற்சித்தால் கிறிஸ்தவ சாட்சிய வாழ்வு மணம் கமழும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகியியேசுவே, அன்பை என்னுடைய வாழ்வின் ஆணிவேராகவும் அடித்தளமாகவும் கொண்டு, வெளிவேடமில்லா வாழ்க்கை வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
