நல்லதைத் துணிந்து செய்வோம் துணிவோடு செய்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

9 செப்டம்பர்  2024 
பொதுக்காலம் 23 ஆம் வாரம் -திங்கள் 
1 கொரி  5: 1-8
லூக்கா 6: 6-11

 
நல்லதைத் துணிந்து செய்வோம் துணிவோடு செய்வோம்!


முதல் வாசகம்.


இன்றைய இரு வாசகங்களும் கடவுள் மனிதர்களின் உள்ளத்தையும்  மனிதரின் செயல்பாட்டையும் காண்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.  தீமையை நாடுபவர்கள் பெரும்பாலும் உண்மையைத் திரித்துவிடுகிறார்கள்.  பவுல் அடிகள் கொரிந்து மக்களிடம்  அவர்கள் தீய மற்றும் நன்னெறிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனும் குற்றச்சாட்டை தமது இக்கடித்தத்தில் முன் வைக்கிறார். 

பவுல் அவர்கைள விட்டு தொலைவில் இருந்தாலும், தனது தந்தையின் மறு மனைவியுடன் உறவு வைத்திருக்கும் ஒரு மனிதனின் தீய செயலைக்  கேள்விப்பட்டு கண்டிக்கிறார்.  கிறிஸ்தவர் அல்லாதவர்களிடையே கூட   அத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று பவுல் கூறுகிறார்.  கொரிந்தியர்கள் இந்த பாவச் செயலைக்  அறிந்தும் தொடர்ந்து இறுமாப்புடன் இருப்பது எப்படி? என்ற கேள்வியை எழுப்பி  பவுல் மிகவும் வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. 

அவர் மேலும் கருத்துரைக்கையல், சிறிதளவு புளிப்பு மாவை எப்படி முழு மாவையும் புளிப்பேறச் செய்யுமோ அவ்வாறே, சில தீயவர்களின் செயல்பாடுகள் கிறிஸ்தவச் சமூகம் முழுவதையும் பாதிக்கும் என்கிறார். எனவே, தனது தந்தையின் மறு மனைவியுடன் உறவு வைத்தவனை அவர்கள்  நடுவிலிருந்து தள்ளிவைத்திருக்க வேண்டும் என்று அறிவூட்டுகிறார்.    

கிறிஸ்தவச் சமூகத்தில் நிலவும் ஒழுக்கச் சீர்கேடுகளைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதற்கு உறுதுணையாக அவர்களோடு பவுல் இருப்பார் என்றும் உறுதி கூறுகிறார்.   நிறைவாக, தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் (கிறிஸ்துவை) கொண்டாடுவோம் என்று முடிக்கிறார். 


 நற்செய்தி.


நற்செய்தியில் இயேசு, பரிசேயர்களுடனும் மறைநூல் அறிஞர்களுடனும் மோதும் மற்றொரு நிகழ்வை அறிய வருகிறோம். அன்று யூதர்கள் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள். இயேசு தொழுகைக் கூடத்திற்குச் சென்று, அங்கு போதிக்கலானார்.  தொழுகைக் கூடத்தில்   கைசூம்பிய   ஒருவர் காணப்பட்டார். அவரைக் கண்டு இயேசு மனமிரங்கி, அவரைக் குணப்படுத்தினார். 

அன்று ஓய்வு நாளாக இருந்ததால் இயேசுவின் குணப்படுத்தும் செயல் ஒரு தொழிலாகப் பிசேயர்களாளும்   மறைநூல் அறிஞர்களாளும்  கருதப்பட்டது.  எனவே, அவர்கள் ஓய்வுநாளில் இயேசு எப்படி குணப்படுத்தலாம் என்று முணுமுணுக்கத் தொடங்கினார்.  ஆண்டவர் இயேசுவோ, ஓய்வுநாளில் நல்ல காரியங்கள் செய்வது ஒருபோதும் தவறாகாது என்று மறுமொழியாகக்கூறி அவர்களின் வாயை அடைக்கின்றார்.


சிந்தனைக்கு.


வழக்கமாக, நோயுற்றவர்கள், உடல் ஊனம் கொண்டவர்கள் இயேசுவிடம் ஓடிவந்து, அவரைக் கூவி அழைத்து,  நலம்பெற , விடுதலைப் பெற வேண்டுவர். இயேசு அவர்களின் தேவையை அறிந்து உதவுவார். இன்றைய நற்செய்தியில் கை சூம்பியவரை நோக்கி,  “எழுந்து நடுவே நில்லும்!' என்று அவராகவே அழைத்துக் குணப்படுத்துகிறார். ஒவ்வொரு உள்ளத்தையும் அறியும் தெய்வீகத் திறன் அவருக்கு இருந்ததைக் காண்கிறோம்.

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் அறியாமையை இயேசு உணர்ந்தபோது, அவர்களுக்கு அறிவுப்புகட்ட துணிகிறார். அவர்களோ,   இயேசு மீது குற்றம் சாட்ட  இந்த நிகழ்வை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டனர்.  அவர்களுக்கு ‘ஓய்வுநாள்’ ஒரு காரணியாக இருந்தது. 

இதே, காரணியை இயேசு தமக்குச்  சாதகமாகப் பயன்படுத்தி,  “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று கேட்கலானார். முள்ளை முள்ளால் எடுப்பது போல் இருந்தது அவரது கேள்வி. 

நமது உள் நோக்கங்கள் மற்றும் எண்ணங்கள் அனைத்தும் கடவுளால் அறியக்கூடும்.     ‘படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன’ (எபி 4:13) என்றுதான் நமக்கு  அறிவுறுத்தப்படுகிறது. மாறாக, முதல் வாசகத்தில் பவுல் அடிகள் கூறுவதைப்போல் நம்மில் இறுமாப்பு இருத்தல் கூடாது. இறுமாப்பால் அறிவுக்கெட்டு அழிந்துபோனார் ஆயிரமாயிரம். 

‘ஆண்டவராகிய நானே
இதயச் சிந்தனைகளை ஆய்பவர்;
உள்ளுணர்வுகளைச்
சோதித்து அறிபவர்.
ஒவ்வொருவரின் வழிகளுக்கும்
செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு
நடத்துபவர்’ (எரே 17:10) என்பதை நினைவில் கொள்வோம். 

மேலும், நற்செய்தியில் இயேசுவின் மீது குற்றம் காணும் நோக்கம்தான் பரிசேயர்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் மலிந்திருந்ததை அறிந்தோம். நாம் நன்மைகள் செய்யும் போது பல விதமான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவற்றைக் கண்டு அஞ்சி ஒதுங்கினால்,  பல நற்பணிகளை நம்மால் தொடர இயலாது. ‘காய்த்த மரமே கல்லடி படும்!  என்பார்கள். நல்லது செய்வோருக்குச் சமூகத்தில்  குறைகூறல்கள் இருக்கத்தான் செய்யும். 

முதல் வாசகத்தில், பவுல் அடிகள் கொரிந்து கிறிஸ்தவச் சமூகத்தில்  ஒருவன் தவறு செய்தது   தெரிந்தும் அவனைக் கண்டிக்காமல் இருந்த சபை  பொறுப்பாளர்களைக்ப் பவுல் வெகுவாகக் கண்டித்து எழுதினார். அது பவுல் அடிகளின் துணிவையும் கடமையுணர்வையும் காட்டுகிறது. 

நாம், நமக்கேன் ‘ஊர் வம்பு’ என்று தவறுகளைக் கண்டும் காணாமல் இருந்து நல்ல பேர் வாங்குவதையே முன்நிலைப்படுத்துகிறோம்.   இப்படி வாழ்வதால் நாம் நல்ல கிறிஸ்தவர்களாகவோ, சீடரகளாகவோ ஆகிவிட முடியாது. 


இறைவேண்டல்.


சமூகத்தில் கைசூம்பிய ஒருவரை நடுவில் நிறுத்தி வாழ்வு வழங்கிய ஆண்டவரே, பிறரின் துன்பத்தையும்  தேவையும் ஆயந்துணர்ந்து உதவி செய்யம் நன்மனதை எனக்கு அருள்வீராக. ஆமென்.
 

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452