நாமும் தேர்வுப் பெற்றவரே, மத்தியாவைப் போல்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

14 மே 2024  

பாஸ்கா 7ஆம் வாரம் -  செவ்வாய்

புனித மத்தியா - திருத்தூதர்-விழா

தி.பணிகள் 1: 15-17, 20-26

யோவான்  15: 9-17

முதல் வாசகம்.

திருஅவையானது  இன்று திருத்தூதரும் மறைசாட்சியுமான புனித மத்தியாசின் விழாவைக் கொண்டாடுகிறது.  இன்றைய முதல்  வாசகத்தில் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றத்தைத் தொடர்ந்து சீடர்கள் எருசலேமில் கூடியிருந்த நிகழ்வுகளை விவரிக்கிறது. இதில் "ஏறக்குறைய நூற்றி இருபது" என்று குறிப்பிடப்பட்ட எண் குழுவின் அளவைக் குறிக்கிறது.

சீடர்களில் ஒருவரான பேதுரு எழுந்து,  பன்னிரண்டு சீடர்களில் ஒருவராக இருந்த யூதாசு இஸ்காரியோத்து  இயேசுவைக் காட்டிக் கொடுத்ததைக் குறிப்பிட்டு, குழுவிடம் உரையாற்றுகிறார். யூதாசு  துரோகம் செய்து இயேசுவைக் காட்டிக்கொடுத்தது  மறைநூலில் முன்னுரைக்கப்பட்டதுபடி   நிறைவேற அவசிமானது என்று பேதுரு விளக்குகிறார்.  

ஆனால், யூதாசு இஸ்காரியோத்து இறந்துவிட்ட காரணத்தால்,  பன்னிரண்டு திருத்தூதர்களிடையே  ஒரு காலியிடம் உள்ளது  என்று பேதுரு எடுத்துரைக்கிறார். 

யூதாஸ் விட்டுச் சென்ற காலியிடத்தை நிரப்ப யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேதுரு பரிந்துரைக்கவே,  குழு இரு வேட்பாளர்களை முன்னனிருத்துகிறது.  அவர்கள், ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா, மற்றவர் மத்தியா. வெற்றிடத்தை நிரப்ப சரியான நபரைத் தேர்வு செய்ய இறைவனிடமிருந்து வழிகாட்டுதலை வேண்டி இறைவேண்டல்  செய்கிறார்கள்.   பிறகு, இறுதி முடிவை எடுக்க அவர்கள் சீட்டு போட்டனர் இறுதியாக,  யூதாசுக்குப் பதிலாக மத்தியா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 
நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில் இயேசு  அன்பு, நட்பு, கீழ்ப்படிதல் மற்றும் தமக்கும் தம் சீடர்களுக்கும், தந்தையாகிய கடவுளுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றிய முக்கியமான போதனைகளை இயேசு தம் சீடர்களிடம் எடுத்துரைக்கிறார்.

அவை:

அன்பும் கீழ்ப்படிதலும்: 

இயேசு தனக்கும் தம் சீடர்களுக்கும் இடையே உள்ள அன்பை வலியுறுத்தி  அதை அவருக்கும் தந்தையாகிய கடவுளுக்கும் இடையே உள்ள அன்போடு ஒப்பிடுகிறார். தந்தையின்  கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருடைய அன்பில் இயேசு நிலைத்திருப்பது போல, இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவருடைய அன்பில் நிலைத்திருக்கும்படி தம் சீடர்களைத்  தூண்டுகிறார்.

மகிழ்ச்சி: 

இயேசு அவருடைய  மகிழ்ச்சியானது அவரது  சீடர்களுக்குளும்  இருக்க வேண்டும் என்று  விரும்புகிறார்.  இந்த மகிழ்ச்சி நிறைவேறுவதற்கு ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும் என்ற அவருடைய கட்டளையைப் பின்பற்றுவது முக்கியம் என்று  வலியுறுத்துகிறார்.

மிகப் பெரிய அன்பு: 

நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு இல்லை என்று இயேசு கூறுகிறார். இது மனிதகுலத்தின் மீட்பிற்காக சிலுவையில் அவரது சொந்த தியாக மரணத்தை முன்னறிவிக்கிறது.

இயேசுவோடு நட்பு: 

இயேசு தம்முடைய சீடர்களை வெறும் பணியாளர்களாகப் பாராமல், அவர்களை நண்பர்கள் என்று அழைத்தார்.  

கனி கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்: 

தம் சீடர்களைப் பார்த்து, “ நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”  என்று  அறிவுறுத்துகின்றார்.  


சிந்தனைக்கு.


மேலே குறிப்பிட்டது போல, இன்று திருஅவையானது   திருத்தூதரும் மறைசாட்சியுமான புனித  மத்தியாசின் விழாவைக் கொண்டாடுகிறது. இவர் கடவுளின் உதவியோடு திருதுதூதர்களால் மற்றொரு திருத்தூதராகத் தேர்வுச் செய்யப்பட்டவர். சீட்டு குழுக்குப் போட்டு தேர்வுச் செய்வது என்பது அக்காலத்தில் யூதர்கள் மத்தியில் நிலவிய ஒரு வழிமுறை. இதற்கு நல்ல உதாரணமாக, யோசுவா  கானான் நாட்டை கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் திருவுளச்சீட்டுப்  போட்டுதான் பிரித்துக்கொடுத்தார் (யோசுவா 18:4-)  மேலும், தீநிமொழிகள் நூலில் ‘மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே’(16:33) என்று குறிப்பிடப்படுள்ளது திருவுளச்சீட்டின் மூலம் தேர்வுச் செய்வது கடவுள் விருப்பத்தை ஏற்பதாக நம்பினர். அதே படிப்பினையை திருத்தூதர்களும் கையாண்டு மத்தியாவைத் தேர்வுச் செய்தனர்.


இங்கே நாம் மற்றொரு உண்மையை அறிந்திருக்க வேண்டும். சீட்டுப் போட்டு தேர்வுச் செய்வது அதிருஷ்டக் குழுக்குப் போன்றதல்ல. அதிர்ஷ்டக் குழுக்கு என்பது ஒருவகையில் ஏமாற்று வேலை. அதுசூதாட்டத்திற்கு ஒப்பாகும்.
உணம்மையில், இன்றைய விழாவின் கதாநாயகர் புனித மத்தியாவைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இவரைப் பற்றிய குறிப்புகள்  புதிய ஏற்பாட்டு நூல்களில் எங்கும் காணப்படவில்லை.  ஆனால், இவர் இயேசுவோடு அவருடைய விண்ணேற்றம் வரை இருந்ததாக இன்றைய முதல் வாசகத்தல் (திருத்தூதர் பணிகள் நூலில்) லூக்கா ஒப்புக்கொள்கிறார்.  


மத்தியாவைத் திருத்தூதர்களில் ஒருவராக கடவுள் தேர்வுச் செய்தார். ஒவ்வொருவரையும் தம் பணிக்குத் தேர்வுச் செய்யும் உரிமையைக் கடவுள் கொண்டுள்ளார் என்பது உறுதியாகிறது.  நம்மை இயக்குபவர் தூய ஆவியார். நம்மை தேர்ந்துகொண்டவர் ஆண்டவர். மத்தியாவின் தேர்வைப் போலவே நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரால் தேர்வுச் செய்யப்பட்டு தூய ஆவியாரால் இயக்கப்படுகிறோம் என்பதை இன்று ஆழ்ந்துணர வேண்டும். 


கடவுளிடைய திருப்பணியில்  பங்குகொள்ள  நம்மை   கடவுள்  எப்படி அழைக்கிறார் என்பது கடவுளைப் பொறுத்தது. ஆனால் அவர் நம்மை அழைக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.  இது சீடத்துவத்திற்கான ஒரு சிறந்த நினைவூட்டல்.  நிறைவாக, மத்தியாவின் விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நாம் வாசிக்கும் நற்செய்தியில் இயேசு, “நான் என் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்கவேண்டும் என்பதே என் கட்டளை. தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்று வலியுறுத்திக் கூறுகிறார். எனவே, என்றும் அவரது அன்பில் நிலைத்திருந்து, அவரது கட்டளைகளைக் கடைபிடித்து வாழ முற்பட்டால்தான், நமது சீடத்துமும் சிறக்கும். 

இறைவேண்டல்.
பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக மத்தியாவைத் தேர்வுச் செய்தவரே, என் ஆண்டவரே, என்னையும் தேர்ந்துகொண்டதற்காக உமக்கு நன்றி நவில்கிறேன். ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452