சாட்சிய வாழ்வுக்கே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
14 மார்ச் 2024
தவக்காலம் 4ஆம் வாரம் -வியாழன்
விடுதலைப் பயணம் 32: 7-14
யோவான் 5: 31-47
முதல் வாசகம் :
இன்றைய முதல் வாசகம், சீனாய் மலையில் இஸ்ரயேலர் சார்பாகக் கடவுளிடம் மோசே மன்றாடுவதை முன்வைக்கிறது. சீனாய் மலையடிவாரத்தில் பொற்கன்று செய்து, அந்த தெய்வம்தான் அவர்களை எகிப்திலிருந்து விடுவித்து வழிநடத்தி வந்தது என்று முழக்கமிட்டனர் இஸ்ரயேலர். இதனால், சினமுற்ற கடவுளிடம், அவர்களைத் தண்டிக்காமல், அவர்களின் பாவத்தை மன்னிக்கும் படியும் மோசே மன்றாடுகிறார்.
இத்தருணத்தில், ஆபிரகாமுக்குக் கடவுள் ‘நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்’ என்று கொடுத்த வாக்குறுதியை முன்னிட்டு, இஸ்ரயேலரை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் மன்றாடுகிறார். மோசேயின் மன்றாட்டை ஏற்று, கடவுளும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு இஸ்ரயேலருக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.
ஆகவே, மோசே. மக்களை அடிமைத்தனத்திலிருந்து வழிநடத்தியவர் மட்டுமல்ல, கடவுள் அவர்களின் துரோகத்திற்காக அவர்களைத் தண்டிக்க விரும்பியபோது அவர்களைப் பாதுகாத்தவராகவும் கருதப்பட்டார்.
நற்செய்தி :
இன்றைய நற்செய்தியில், இயேசு யூதர்களுடன் ஓர் உரையாடலில் ஈடுபடுகிறார். இயேசு தான் கடவுளின் மகன் என்பதை உறுதிப்படுத்தும் உரையாடல் அது. இயேசு தம்முடைய சார்பாக சாட்சியமளித்தால், அவருடைய சாட்சியம் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை ஒப்புக்கொள்வதோடு, திருமுழுக்கு யோவானின் சாட்சியத்தை முன்வைக்கிறார். ஆனாலும், யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று தந்தையாம் கடவுள் இயேசுவிடம் ஒப்படைத்துள்ள மீட்பிற்கான செயல்களை நிறைவேற்றி வருவது என்கிறார்.
இருப்பினும், யூதர்கள் கடவுளின் குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்லை. அவரது வார்த்தையும் அவர்களுள் நிலைக்கவில்லை என்பதால், இயேசு மீநு அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று தெளிவுப்படுத்துகிறார்.
நிறைவாக, இயேசு யூதர்களிடம், மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வசைப்பாடுகிறார்.
சிந்தனைக்கு :
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, அவர்தான் பல ஆண்டுகளாக யூதர்கள் எதிர்பார்த்த மெசியா என்பதை வெளிப்படுத்த சில சான்றுகளை முன்வைத்து விளக்குகின்றார். இயேசு இறைமகன் என்பதை நிரூபிக்கும் முதன்மையான சான்று, ஏறக்குறைய நானூறு ஆண்டு இடைவெளிக்குப்பின் திருமுழுக்கு யோவான் ஆண்டவர் இயேசுவைக் குறித்தச் சொன்ன சான்றுகள் ஆகும், “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி, ஆட்டுக்குட்டியாம் இவரே உலகில் பாவங்களைப் போக்குபவர்” என்று சொல்லி திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு சான்று பகர்வார் (யோவா 1: 29). அந்த சான்றையும் யூதர்கள் ஏற்கவில்லை.
தொடர்ந்து, இயேசு தான் இறை மகன் என்று சொல்வதற்கான மற்றொரு முக்கிய சான்றை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். அதுதான் அவர் ஆற்றும் தன்னை அனுப்பிய தந்தையாம் கடவுள் செய்யப் பணித்த செயல்கள் ஆகும். இயேசு தான் செய்த பல்வேறு வல்ல செயல்களின் வழியாகவும் குணமளிப்பு வழியாகவும் தன்னை யார் என்று தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.
ஆனாலும், யூதர்களால் அவற்றைக் கிரகிக்க இயலாமல், அவரைப் புறக்கணித்துக்கொண்டிருந்தார்கள். அவரை மிகவும் ஏளனப்படுத்தினார்கள். அத்தோடு நின்றுவிடாமல் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் போன்ற பொய் குற்றச்சாற்றையும் பரப்பினார்கள்.
முதல் வாசகத்தில், சீனாய் மலையில் இஸ்ரயேலர் தங்களை எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து மீட்டு வந்த மோசேயின் வார்த்தைக்குக் கீழப்படியாமல், எதிர்மாறாக நடந்துகொண்டனர். மோசே, தம் மக்களுக்காகப் பரிந்து பேசி கடவுளிடம் மன்றாடினார். அதே நிலையில் யூதர்களும் இயேசுவின் வார்த்தைக்கும் படிப்பினைகளுக்கும் செவிசாய்க்காமல் அவரைப் பகைத்தனர். இயேசுவோ, பலமுறை தம் மக்களுக்காக இறைவேண்டல் செய்தார்.
இயேசு தான் இறைமகன் என்ற உண்மைக்கு அதிக அழுத்தம் கொடுத்து கூறியது அவரின் வல்ல செயல்கள். அவையும் புறக்கணிக்கப்பட்டன.
இன்றும் நமக்கும் அன்றைய யூதர்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக இல்லை. நமது சொந்த விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக உண்மைகளை மறைத்து, வெளிவேடம் கொண்டு நாடகமாடுகிறோம். திருஅவையைக் கூட சுய நலத்திற்காகப் பயன்படுத்தத் துணிகிறோம். நமது சுயநலப்போக்கு திருஅவைக்கு ஒரு சவாலாக உள்ளது என்றால் மிகையாகாது.
இயேசுவுக்கான நமது சான்று நமது வாழ்வாக இருக்க வேண்டும். இயேசுவுக்கு அவரது சீடராக வாழ்ந்து காட்டும் சாட்சியங்கள் தான் இன்று தேவை. வெறும் இறைப்புகழ்ச்சியும், மேடை பேச்சுகளும் அல்லவே அல்ல. இயேசுவின் பெயரால் ஆங்காங்கே ‘சொத்து' சேர்க்கும் புது புது சபைகள் தோன்றுவதையும், பொய் சாட்சியங்களால் மக்களை ஏமாற்றித்திரியும் பேர்வழிகளையும் பார்க்கிறோம்.
சீடத்துவம் என்றாலே, சாட்சிய வாழ்வு. சாட்சிய வாழ்வு என்றாலே உண்மை சீடத்துவம். இதை ஏற்காவிட்டால், நாமும் ‘யூதர்கள்'தான்.
இறைவேண்டல் :
அன்பு இயேசுவே, நீர் இறைமகன் என்று ஏற்க மறுக்கும் மனக்குலத்தார் மத்தியில், உமக்கான சாட்சிய வாழ்வு வாழும் திடத்தை நான் பெற்றிட அருள்புரிவீராக. ஆமென்.
.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452