கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார் | ஆர்.கே. சாமி | VeritasTamil
1 மார்ச் 2024
தவக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி
தொடக்க நூல் 37: 3-4, 12-13a, 17b-28
மத்தேயு 21: 33-43, 45-46
முதல் வாசகம்:
பின்புலம்:
யாக்கோப்பின் பெயரை கடவுள் ‘இஸ்ரயேல்' என்று மாற்றுகிறார். “உன் பெயர் யாக்கோபு. இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்; உன் பெயர் ‘இஸ்ரயேல்’ எனப்படும்” (தொ. நூல் 35:10)
‘ஆபிரகாமின் பேரனான யாக்கோப்பு அவருடைய தாய்மாமன் லாபானின் மகள்களான லேயாவையும் ராகேலையும் மணந்து கொள்கிறார். (அதிகாரம் 29) பின்னர் லேயாவின் பணிப்பெண் சில்பாவையும், ராக்கேலின் பணிப்பெண் பில்காவையும் மனைவியாக்கிக் கொள்கிறார் (அதிகாரம் 30). இவ்வாறு லேயாவுக்கு ஆறு ஆண்களும் தீனா எனும் ஒரு பெண் பிள்ளையும், ராக்கேலுக்கு இரு ஆண்களும், சில்பாவுக்கு இரு ஆண்களும், பில்காவுக்கு இரு ஆண்களும் பிறக்கிறார்கள். இதன்படி, யாக்கோப்பிற்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர்.
தொடக்க நூலில் இருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகப் பகுதி இஸ்ரயேலின் (யாக்கோப்பின்) இளைய மகன் யோசேப்பு மற்றும் அவரது சகோதரர்களின் கதையைப் பற்றியது.
யாக்கோபு இளைய மகனான யோசேப்பை மற்ற மகன்களை விட அதிகமாக அன்பு செய்தார். யோசேப்பு கனவு காண்பதிலும் அவற்றுக்கு பொருள் கூறுவதிலும் சிறந்து விளங்கினார். ஒரு நாள் அவர் கனவில் கண்ட காட்சியை அவர்களுக்குக் கூறினார். “நான் கண்ட இந்தக் கனவைக் கேளுங்கள். “நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டும் பொழுது திடீரென எனது அரிக்கட்டு எழுந்து நிற்க, உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கின” ( தொநூ. 37:7) என்றார். இதைக் கேட்ட மற்றவர்கள் “நீ எங்கள் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்தப் போகிறாயோ?” என்று கோபம் கொண்டனர். யோசப்பின் சகோதரர்கள் அவரை மிகவும் வெறுத்தார்கள். அவர்களில் சிலர் அவரைக் கொன்றுவிடவும் திட்டமிட்டனர்.
ஒருநாள், அவர்கள் தங்கள் தந்தையின் ஆடுகளை வெகுதொலைவில் மேய்த்துக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் வந்த யோசேப்பை கொல்ல திட்டமிட்டனர்.
அவரைக் கொல்வதற்குப் பதிலாக, அவர்கள் யோசேப்பை அங்கிருந்து ஆழ்குழியில் தள்ளிவிட்டுக் கொடிய விலங்கு அவரைக் கொன்றுவிட்டதென்று தந்தையிடம் சொல்வோம் என்றனர். அவர்களின் திட்டத்திற்கு மூத்த சகோதரன் ரூபன் இணங்கவில்லை. ஆனால், மற்றொரு குழியில் தூக்கிப் போட்டனர். பின்னர், அவரைத் தூக்கி, அவ்வழியே வந்த எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த வணிகர்களிடம் 20 வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்கு ஓர் அடிமையாகக் கொண்டு சென்றனர்.
நற்செய்தி :
இன்றைய நற்செய்தி இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறிய ஓர் உவமையை வெளிப்படுத்துகிறது. ஓர் ஆழமான ஆன்மீகப் படிப்பினைய எடுத்துரைக்க இயேசு இக்கதையை (உவமையை) பயன்படுத்துகிறார். உவமையின் முக்கிய கூறுகளைக் காண்போம் :
1.நில உரிமையாளர்: இது கடவுளைக் குறிக்கிறார்.
2.திராட்சைத் தோட்டம்: இது இஸ்ரயேலைக் குறிக்கிறது.
3.வேலி, பிழிவுக் குழி, காவல் மாடம் : இவை கடவுளின் பாதுகாப்பு, இஸ்ரயேலரின் செழிப்பு மற்றும் கண்காணிப்பைக் குறிக்கின்றன
4.குத்தகைக்காரர்கள்: குத்தகைகாரர்கள் இஸ்ரயேலின் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் குறிக்கின்றது.
5.வேலைக்காரர்கள்: கடவுளின் திருவுளப்படி வாழ அவர்களை அழைத்த இறை ஊழியர்கள், இறைவாக்கினர்கள் ஆவர்.
6.மகன்: கடவுளின் இறுதி தூதுவரான அவரது ஒரே மகன் இயேசு.
7.மகனின் நிராகரிப்பு மற்றும் கொலை: இது மறைநூல் அறிஞர்களும் இதர யூதத் தலைர்களும் இயேசுவை நிராகரித்ததை பிரதிபலிக்கிறது. இது இயேசுவின் சிலுவையில் அறையப்படுவதை முன்னறிவிக்கிறது.
8.புதிய குத்தகையாளர்கள்: பழங்களை உற்பத்தி செய்யும் புதிய குத்தகையாளர்கள், இயேசுவைப் பின்பற்றுபவர்களையும், யூதர்கள் மற்றும் புறவினத்தாரையும் சேர்த்து, நம்பிக்கையாளர்களின் புதிய சமூகத்தை உருவாக்கும் திருஅவையைக் குறிக்கிறது.
9.நிராகரிக்கப்பட்ட கல் மூலைக்கல்லாக மாறியது: இது இயேசுவைக் குறிக்கிறது, அவர் நிராகரிக்கப்பட்ட போதிலும், கிறிஸ்துவின் விசுவாசிகளின் சமூகமான திருஅவையின் அடித்தளமாக அவர் மாறுகிறார்.
10.கடவுளின் அரசு பறிக்கப்பட்டது: கடவுளின் தூதர்கள் மற்றும் அவரது மகன் நிராகரிக்கப்பட்டதன் விளைவு, மறைநூல் அறிஞர்கள் மற்றும் குருக்களின் ஆதிக்கத்திலிருந்து கடவுளின் அரசு ஒரு புதிய சமூகத்திற்கு (திருஅவைக்கு) அருளப்படுகிறது.
நிறைவாக, தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சி விலகிச் சென்றனர்.
சிந்தனைக்கு:
முதல் வாசகத்தில், யோசேப்பு தன் தந்தையால் மிகவும் அன்பு செய்யப்பட்டவராக அறியும் வேளையில் நற்செய்தியில் இயேசு தம் தந்தையால் மிகவும் அன்புகூரப்பட்ட மகனாக உள்ளார். அடுத்து, யோசேப்புவை அவருடைய சகோதரர்கள் பொறாமையால் இகழ்ந்தனர். அவ்வாறே, இயேசுவும் எதிர்ப்பையும் நிராகரிப்பையும் சொந்த மக்களிடமிருந்து எதிர்கொண்டார்.
இருவருக்கும் கொல்லப்பட சதித்திட்டம் தீட்டப்படுகிறது. பின்னர் இருவரும் வெள்ளிக்காசுக்கு விற்கப்படுகிறார்கள். இவ்வாறு நாம் இருவருக்குமிடையிலான ஒற்றுமையை அடுக்கிக்கொண்டே போகலாம். யோசேப்பின் கதையிலும் கொடிய குத்தகைக்காரர் உவமையின் வாயிலாக நாம் அறியக் கூடிந்து என்ன?
நமது வாழ்வின் இருண்ட தருணங்களில் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்றும், அவர் மீதான நமது நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டால், மற்றவர்களுக்காகவும் நமக்காகவும் நம் மூலமாக வல்ல செயல்களை கடவுள் அனுமதிப்பார் என்பது திண்ணம்.
நம் துன்பக் காலங்களில் நம்மை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர் அல்ல நம் கடவுள். உடுக்கை இழந்தவன் கைபோல (உடுத்தியுள்ள வேட்டி அவிழ்ந்து விழும்போது) உதவிக்கு வருபவர் போல நம் கடவுள் இருப்பார் என்பதை ஏற்று அவரோடு ஒப்புரவாகி ஒன்றிப்போம். ஏனெனில் அவரே நமது அடைக்கலப் பாறை.
இறைவேண்டல் :
‘கடவுளிடமும் என்னிடமும் நம்பிக்கை கொள்’ என்று எனக்கு திடமளிக்கும் ஆண்டவரே, எல்லா சூழலிலும் நீரே எனக்கு அரணாக இருக்கிறீர் என்ற நம்பிக்கையில் நான் ஆழ்ந்திருக்க வரமருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452