நற்செயல்களுக்குத் துணை செய்வோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 24 ஆம் வெள்ளி  
I: 1 திமொ: 6: 2-12
II: திபா 49: 5-6. 7-9. 16-17. 18-19
III: லூக்: 8: 1-3

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர் வகுப்புகள் முடிவடைந்ததும் கும்பலாக அமர்ந்து பேசிக்கொண்டு  இருப்பார்கள்.அடிக்கடி இவர்களை ஒன்றாகக் காணலாம். எனவே  நாளடைவில் இவர்களின் இந்த ஒன்றிப்பு அருகில் வசிப்பவர்களுக்கு எரிச்சலூட்டியது. ஒருமுறை இந்த மாணவர்கள் எல்லாருமாக சேர்ந்து  குடிசைகளில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு  கல்வி உபகரணங்கள் வழங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளை உற்சாகமூட்டி மகிழ்ந்து கொண்டிருந்த கல்லூரிமாணவர்களைப் பார்த்த பலர் ,இவர்கள் ஒன்றாக இருப்பது பொழுது போக்கிற்காக அல்ல நல்ல பணிகள் செய்வதற்காக என்பதை உணர்ந்து, தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். அக்கல்லூரி மாணவர்களைப் பாராட்டினர். 

அன்புக்குரியவர்களே குழுவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வெறும் பொழுது போக்கிற்காக சிலர் கூடுவர். வேலையின் நிமித்தம் குழுவாகச் சேர்வர். நல்ல செயல்திட்டங்கள் தீட்ட சிலர் குழுவாக அமர்வர். பிறரின் வாழ்வைக் கெடுக்கவும் பலர் ஒன்று கூடுவர். இப்படி பல காரணங்கள் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இப்படி ஒரு குழு கொடுக்கப்ட்டுள்ளது. இயேசு ஊரெங்கும் சென்று இறையரசைப் பற்றிய போதனைகளைப் பரப்பி வந்தார். வல்ல செயல்கள் செய்தார். நோய்நொடிகளைக் குணமாக்கினார்.  இவற்றையெல்லாம் செய்ய அவர் தனியாகச் செல்லவில்லை.  அவரோடு பன்னிரு தூததர்களும் ஒருசில பெண்களும் சென்றதாக நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.எல்லாம் வல்ல இறைவனின் மகன் இயேசு எதற்காக இவ்வாறு பலரை தன்னுடன் அழைத்துச் சென்றார் என்ற கேள்வி எழலாம். தன்னுடைய சீடர்களை தன்னுடைய பணியைத் தொடர தயாரிக்கவும் , யூத சமுதாயத்தில் இரண்டாம் தர மக்களாகக் கருதப்பட்ட பெண்களை  நற்செயல் புரிய துணை செய்பவர்களாகவும் பிறருக்குக் காட்டவே அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு குழுவாகச் செல்கிறார். இயேசுவோடு நற்காரியத்திற்காகச் சென்ற தூதர்களும் பெண்களும் இயேசுவைப்போல அருஞ்செயல்கள் புரிபவர்களாகும் இறையரசின் வித்துக்களாகவும் உருவெடுக்கத் தொடங்கினர்.

நாமும் பல்வேறு வகைகளில் நமது நண்பர்கள் ,உறவினர்களுடன் ஒன்று கூடுகிறோம். அவ்வேளைகளில் நாம் இணைந்து நல்ல காரியங்கள் புரிவதைப்பற்றி சிந்திக்கிறோமா? அல்லது யாராவது பிறரன்புப் பணிகள் செய்யச் செல்லும் போது அவர்களுக்குத் துணை புரிகிறோமா?  என சிந்திப்போம். பிறரன்புப் பணிகளைச் செய்ய ஒருவருக்கு ஒருவர் துணைநின்று இறையரசை உருவாக்குபவர்களாக மாற இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பு இயேசுவே! இறையாட்சிப் பணியில் உமக்குத் துணைசெய்த திருத்தூததர்களையும் பெண்களையும் போல நாங்களும் ஒருருக்கொருவர் துணைநின்று இறையரசைக் கட்டி எழுப்ப வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்