நன்மை செய்ய கிழமையும் சட்டமும் வேண்டுமா?! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 23 திங்கள்   
I: கொலோ: 1: 24 - 2: 3
II: திபா: 62: 5-6. 8
III: லூக்: 6: 6-11

"ஒன்றே செய். நன்றே செய்.  அதுவும் இன்றே செய்" என்று நம் முன்னோர் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இதன் பொருள் நாம் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும். அதையும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் என்பதுதான். நேரமும் காலமும் பார்த்து செய்யப்படுகின்ற  செயல் நல்ல செயலாயிருக்காது. அது நன்மையைக் கொடுத்தாலும் அதன் நோக்கம் சுயநலம் மிகுந்ததாகவே இருக்கும். 

இன்றைய நற்செய்தியில் இயேசு கைசூம்பிய மனிதரை இயேசு குணமாக்கும் நிகழ்வைக் காண்கிறோம். அக்கைசூம்பிய மனிதன் இத்தனை ஆண்டுகளாய் பட்ட துன்பத்தை இயேசு நீக்குகிறார். ஆனால் அது நடந்தது ஓய்வுநாளில் என்பதுதான் பரிசேயரின் வாதம். 

ஓய்வுநாள் என்பது கடவுளோடு ஒன்றித்திருக்க உண்டாக்கப்பட்ட நாள். அதை யாரும் உதாசினப்படுத்தக் கூடாது என்பதற்காகவே சட்டமாக்கப்பட்டது. எவனொருவன் கடவுளோடு ஒன்றித்திருக்கிறானோ அவன் நிச்சயமாக சகமனிதரின் துயர்துடைப்பவனாக இருப்பான். இயேசு அதை இந்நிகழ்வின் மூலம் எண்பித்தார். அவ்வாறெனில் இயேசுதான் உண்மையில் ஓய்வுநாளைக் கடைபிடித்திருக்கிறார். மாறாக செய்த நன்மையைக் குறை கூறிய  பரிசேயர் அல்ல. 

ஆம் அன்புக்குரியவர்களேகுறைக்காணும் மனநிலை   இறையாட்சி பணிக்கு எதிரான பண்பாகும். எதிலும் குறைக்காண்பவர்கள் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியாய் இருப்பது மிகவும் கடினம். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் குறைக்காணும் கூட்டமாக இருந்தனர். இயேசு செய்த எல்லா நல்ல செயல்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். சட்டத்தை தலையில் தூக்கி வைத்து அதை கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தினர்.  இயேசுவின் நன்மைத் தனங்களை பொருட்படுத்தாமல்,  ஓய்வுநாளில் நோயாளர்களை குணப்படுத்துவதா என்று கேள்வி எழுப்பி நன்மை செய்ய நாளும் கிழமையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.தானும் நன்மை செய்யாமல் அடுத்தவரையும் செய்ய விடாமல் தடுப்பவர் எவ்வளவுதான் சட்டங்களைக் கடைபிடித்தாலும் தீயவர்களே.

நம் அன்றாட வாழ்வில் நாள் நேரம் சட்டம் சடங்கு இவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு ஆபத்தில் இருப்பவர்கள், உதவி தேவைபடுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நன்மைகள் செய்வோம். அதற்கான இறையருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பு இறைவா உம்மைப்பின்பற்றி  துன்பப்படுவருக்கு உடனடியாக நன்மை செய்து உதவும் மனம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்