உண்மையை உரக்கக் கூறத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 28 வியாழன்
I: உரோ: 3: 21-30
II: திபா 130: 1-2. 3-4. 5-6
III: லூக்: 11: 47-54
பிரபலமான அரசியல் வாதி ஒருவரின் பையன் கல்லூரியிலே படித்து வந்தார். அம்மாணவன் சற்று சேட்டைகள் நிறைந்தவராய் இருந்தார். பேராசிரியர்களுக்கு கீழ்படிவதே இல்லை. ஆயினும் யாரும் அம்மாணவனைப் பற்றி புகார் அளிப்பதில்லை. அவனைக் கடிந்து கொள்வதும் இல்லை. காரணம் அவருடைய தந்தை அரசியல்வாதி என்பதால். அவன் மேல் நடவடிக்கை எடுத்தாலோ அல்லது கடிந்து கொண்டாலோ தங்களுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பாதிப்பு நடந்துவிடும் எனக் கருதி அவனை அப்படியே விட்டுவிட்டனர். அவனும் தொடர்ந்து தீமைகளையே செய்துவந்தான்.
அன்புக்குரியவர்களே, இது தான் இன்றைய பொதுவான நிலை. உண்மையை உரக்கச் சொல்லிடவும் , தவறை சுட்டிக்காட்டித் திருத்தவும் நம்மில் பலருக்குத் துணிச்சல் என்பதே இல்லாமல் போய்விட்டது. அவ்வாறு சுட்டிக்காட்டும் பலருக்கோ கிடைப்பது இடையூறுகளும் துன்புறுத்துதல்களுமே. அப்படி இருந்தும் ஒருசிலர் உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தியில் இயேசு இப்பணியை துணிச்சலுடன் செய்கிறார். அவர் எதிர் கொள்ளப்போகும் சவால்களை எண்ணி உண்மையை மறைக்கவில்லை. மாறாகத் பாரபட்சம் பார்க்காமல் தவற்றை சுட்டிக்காட்டுகிறார். உண்மையை முகத்திற்கு நேராய் சத்தமாகச் சொல்லுகிறார். இவ்வாறு உண்மையை உரக்கக் கூறி தன்னையும் ஒரு இறைவாக்கினராக, நீதித்தலைவராக வெளிப்படுத்துகிறார் நம் ஆண்டவர் இயேசு. உயிரைத் துச்சமென கருதி கடவுளின் வார்த்தையை உரக்கக் கூறிய இறைவாக்கினர்களைப் போல தனக்கெதிராகத் திட்டம் தீட்டிய பரிசேயர்கள் சதுசேயர்கள் மறைநூல் அறிஞர்கள் யாருக்கும் பயப்படாமல் துணிந்து பேசுகிறார் இயேசு.
அன்புக்குரியவர்களே இயேசுவின் மக்களாகிய நாமும் யாருக்கும் பயப்படாமல், உண்மையை சொல்லும் மக்களாக நாம் இருக்கவே இன்று இயேசு நம்மை அழைக்கிறார். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்று இயேசு கூறினார். உண்மையே நமக்கு விடுதலை தரும் என்பதை ஆழமாக உணர்ந்து இயேசுவைப் உண்மையை உரக்கச் சொல்லி சாட்சியுள்ளவர்களாய் வாழ முயற்சிப்போம்.
இறைவேண்டல்
உண்மையின் உறைவிடமே இறைவா! உம்மைப் போல உண்மையை உரக்கச் சொல்பவர்களாய் வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்