இறையாட்சியின் அடையாளமாய் வாழத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 28 ஆம் திங்கள்  
I: உரோ:  1: 1-7
II: திபா 98: 1. 2-3. 3-4
III: லூக்: 11: 29-32

இன்றைய உலகில் நாம் எங்கு சென்றாலும் நமது பெயர், இடம், பணி போன்ற தகவல்கள் எல்லாம் உண்மையா என சோதித்தறிய பல ஆதாரங்கள் கேட்கப்படுகின்றன. இவ்வாதரங்கள் எல்லாம் நாம் யார் என்பதற்கான அடையாளங்கள் . பல சமயங்களில் நாம் பேசத் தேவையில்லை. இவ்வடையாளங்கள் பேசிவிடுகின்றன. அத்தோடு இந்த ஆதாரங்களையும் அடையாளத்தையும் பெறுவதற்கு நாம் பல முயற்சிகள் செய்ய வேண்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகி விடுகிறது.

இத்தகைய வெளிப்புற அடையாளங்கள் நம்மைப் பற்றிய சில தகவல்களை மட்டுமே தருகின்றன. ஆனால் நம்முடைய வாழ்க்கையே நாம் யார் என்பதை உலகிற்குக் காட்டுகிறது. ஒரு மனிதன் இறைநம்பிக்கை உடையவன் என்பதற்கு அவனுடைய பக்தி முயற்சிகள் அடையாம். ஒரு மனிதன் கொடை வள்ளல் என்பதற்கு அவனுடைய தான தர்மங்கள் அடையளம். ஒரு மனிதன் நல்லவர் என்பதற்கு அவருடைய நற்செயல்கள் அடையாளம். இவ்வாறாக ஒருவருடைய உண்மைத் தன்மையை உலகிற்கு அடையாளப்படுத்துவது அவருடைய வாழ்க்கைமுறையே. 

இன்றைய நற்செய்தியில் இயேசு அடையாளம் கேட்பதற்காக இத்தலைமுறையினர் வந்துள்ளனர் என்று தன்னைப் பின்தொடர்ந்த கூட்டத்தை சாடுகிறார். இயேசு இறைமகன் என்பதற்கு அவருடைய போதனைகள், வல்ல செயல்கள் அடையாளங்களாகத் திகழ்ந்த போதும் அம்மக்கள் இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கும் மனநிலையை இயேசு சாடுவதோடு, தானே உண்மையான அடையாளம் எனவும் கூறி தந்தைக் கடவுளையும் இறையாட்சியையும் தன்மூலம் அடையாளப்படுத்துகிறார் இயேசு.

இதன் மூலம் இயேசு நமக்குக் கூறும் செய்தி என்ன என ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும் போது " இறையாட்சியின் அடையாளங்களாய் நாம் திகழ வேண்டும் " என்ற அழைப்பு நமக்கு தரப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்தை பெயரளவில் மட்டும் வைத்துக் கொள்ளாமல் நம்முடைய வாழ்க்கையால் ஒவ்வொரு நொடியும் நாம் கிறிஸ்துவின்! அடையாளங்களாய் திகழ வேண்டும். நம்முடைய இருத்தலாலும், இயக்கத்தாலும் கடவுளின் அடையாளப்படுத்தும் முகங்களாக நாம் திகழ வேண்டும். அடையாளங்கள் கேட்பவர்க்கும் கூட்டத்தினராக நாம் இல்லாமல் நானே உயரிய அடையாளம் என்று கூறிய இயேசுவைப் போல நாம் மாற வேண்டும்.  இறையாட்சியின் அடையாளமாக வாழத் தயாரா?

இறைவேண்டல்
இயேசுவே கடவுளின் உன்னத அடையாளமே!  எம்மையும் இறையாட்சியின் அடையாளங்களாய் மாற்றும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்