குறைகாணும் மனநிலையைக் களைவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 27 ஆம் வெள்ளி 
I: யோவேல்:  1: 13-15; 2: 1-2
II: திபா 9: 1-2. 5,15. 7b-8
III: லூக்: 11: 15-26

மற்றொருவரிடம் எதை குற்றமென்று  பார்க்கிறோமோ, அதுவே நம்முடைய வாழ்வில் ஏற்பட்டால் சோதனை என்று அழைக்கின்றோம் என்று எமர்சன் என்ற தத்துவ அறிஞர் கூறியுள்ளார். பல நேரங்களில் நம்முடைய அன்றாட வாழ்வில் பிறரைப் பற்றி குற்றம் காண்பது மிகவும் எளிது. ஆனால் நாம் தவறு செய்கின்ற பொழுதும் பிறர் நம்முடைய தவற்றை சுட்டிக்காட்டும் பொழுதும் அதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இருப்பதில்லை. இத்தகைய மனநிலை தான் நாம் வளர்வதற்கு தடையாக இருக்கின்றது. பிறரை எந்த அளவுக்கு விமர்சிக்க நினைக்கின்றோமோ, அதே அளவுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். மேலும் அந்த விமர்சனங்கள் நலமான மனநிலையை கொண்டிருக்க வேண்டும்.  செய்யாத தவற்றைச் செய்தாய் என்று பிறரை மனம் நோகச் செய்யும் பண்பு மிகவும் மோசமான பண்பாகும். பிடித்தவர்கள் தவறு செய்தால்  அதை நேர்மறையாகப் பாராட்டுவதும் பிடிக்காதவர்கள் நல்லது செய்தால் அதை எதிர்மறையாக விமர்சிப்பதும் இவ்வுலக எதார்த்தத்தில் அதிகமாக இருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் நம்முடைய சுயநலமும் ஆணவமும் தற்பெருமையுமே . இத்தகைய மனநிலையைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் அறிய வருகிறோம்.

இயேசு பேச்சிழந்தவனை பிடித்திருந்த பேயை விரட்டினார். இந்த ஆற்றலைக் கண்டு பலர் இயேசுவைப் பெருமையாகப் பேசினர். சிலர் பேய்களின் தலைவனாக இருப்பதால்தான் இத்தகைய பேய்களை இவனால் ஓட்ட முடிகிறது என்று கூறி விமர்சித்தனர். இயேசு உண்மையிலேயே இறைவன் பெயரால் தான் ஓட்டுகிறார் என்றால் வானிலிருந்து அறிகுறி வேண்டும் என்று கேட்டவரும் உண்டு. இத்தகைய மனநிலையைத் தான் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் தற்பெருமைவாதிகளாகத் திரிந்த  பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் கொண்டிருந்தனர். எதற்கெடுத்தாலும் இயேசுவின் நல்ல  போதனைகளையும் நல்ல செயல்களையும் விமர்சித்தனர். காரணம் இயேசுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வளர்ந்தது. இந்தச் சூழலை அந்த மூன்று கூட்டத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் இயேசுவை குற்றம் காணுபவர்களாக அவர்கள் இருந்தனர்.

தங்களைச் சார்ந்தவர்கள் பேய்களை ஓட்டிய பொழுது இறைவனின் வல்லமையால் ஒட்டினார்கள் என்றும் இயேசு பேய்களை ஒட்டிய பொழுது பேய்களின் தலைவனாய் இருப்பதால்தான் பேய்களை ஓட்டுகிறார் என்று குறை காணும் மனநிலை கொண்டவர்களாக இருந்தனர். இத்தகைய சுயநல விமர்சனத்திற்கு இயேசு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய நற்செய்தி  இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்விலும் பரிசேயர்களைப்  போன்றுதான் நாமும் இரட்டை மனநிலை கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம்.

இயேசு தன்னுடைய பணி வாழ்வில் சுயநலம் இல்லாமல் இருந்தார். எனவே அவருடைய போதனைகளும் மதிப்பீடுகளும் பணிகளும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புகழப்பட்டது. ஆனால் பரிசேயர்களின் வாழ்வானது சுயநலமுள்ளதாக இருந்தது. எனவே அவர்களுடைய போதனைகள் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
எனவே அவர்கள் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குறையத் தொடங்கி வந்தது. வெற்றி ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இயேசுவை விமர்சிக்கவும் ஒழிக்கவும் திட்டம் தீட்டினர்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் இத்தகைய சுயநல மனநிலையையும் குறை காணும் மனநிலையையும் நம்மிடமிருந்து முற்றிலும் அகற்ற முயற்சி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் மகிழ்ச்சியையும் முழுமையாகச் சுவைக்க முடியும். பிறர் மீது அதிகமான எதிர்மறை சிந்தனைகளை வளர்கின்ற பொழுது குறை காணும் மனநிலை அதிகமாகி விடுகின்றது.  எனவே அன்றாட வாழ்வில் அதிகமாக நிறைவானவற்றைப் பார்க்க முயற்சி செய்வோம். ஏனெனில் நிறைவானது அதிகம் வரும் பொழுது, குறைவானது தானாக மறைந்துவிடும். நிறைவான மனநிலை வேண்டுமென்றால் இயேசுவை நாம் பின்பற்றுவோம். குறைவான மனநிலை எப்படி இருக்கும் என்று நாம் அறிய விரும்பினால் பரிசேயர்களின்  வழியில் நடவாமல் இருப்போம். குறைகாணும்  மனநிலையை விட்டுவிட்டு நிறைவான வாழ்வை நோக்கிப் பயணம் செய்வோம்.  

இறைவேண்டல் :
அன்பான இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் பிறரிடம் குறைகாணும் மனநிலை விட்டுவிட்டு, நிறைவுள்ள மனநிலை உள்ளவர்களாக வாழ தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்