பிறர் தவறு செய்யத் தூண்டாதிருப்போமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம்,32 வாரம் திங்கள் 
I: சாஞா: 1: 1-7
II: திபா 139: 1-3. 3b-6. 7-8. 9-10
III: லூக்:  17: 1-6

சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தெருவிலே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது மாலை நேரம். அத்தெருவிலே சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்த ஒருவர், மாலை வேளையானதும் கடையை மூடிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் அக்கடையின் கதவில் இருந்த சிறுதுளையைக் கவனித்தான். மற்றசிறுவர்களிடம் அத்துளையின் வழியாகக் கையைவிட்டு மிட்டாய்களைத் திருடலாம் என யோசனை கூறினான். மற்றவர்களும் மிட்டாய் சாப்பிட ஆசைப்பட்டு ஒத்துக்கொண்டனர். ஆனால் அவர்களில் ஒருவரது கையும் அத்துளைவழியே நுழையவில்லை. அச்சமயம் ஆறு வயது நிரம்பிய சிறு பையன் விளையாட வீட்டை விட்டு வெளியே வந்தான். அச்சிறுவன் பொடியனாக இருந்ததால் நிச்சயமாக அவன் கை துளையினுள் நுழையும் என எண்ணிய மற்ற சிறுவர்கள் அச்சிறுவனை மிட்டாய் திருட ஆர்வமூட்டினர். உண்மையில் தான் செய்வது என்னவென்று உணராத அச்சிறுவன் துளையினுள் கையைவிட்டு மிட்டாய்களை எடுக்க ஆரம்பித்தான். தன்னுடைய வீட்டு சாவியை கடையிலேயே மறந்து வைத்துவிட்ட பெட்டிக்கடைக்காரர் தற்செயலாக கடைக்கு வந்தார். அதைக் கண்ட மற்ற சிறுவர்கள் தலைதெரிக்க ஓடினர். ஆனால் மாட்டிக் கொண்டதோ அந்த ஆறுவயது சிறுவன் . கடைக்காரர் அவனைப் பிடித்து அடித்து திருடன் என்ற பட்டமும் சுமத்தினார். விளையாட வந்த சிறுவன் மற்றவர்கள் செய்த வினையால் திருடன் எனப் பெயரெடுத்தான். 

அன்புக்குரியவர்களே தவறு செய்வது மனித இயல்பு என நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். நாமாகவே செய்த தவறு அது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்தாலும் அதற்காக நாம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் போது நிச்சயம் நாம் மன்னிப்புப் பெறுவோம்.
அதேவேளையில் பிறரை நாம் தவறு செய்யத் தூண்டினால் அது மிகப்பெரிய தவறாகும். அதற்கு கிடைக்கும் தண்டனை பெரியதாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு பாவத்திற்குக் காரணமாய் இருப்பவர்களை எந்திரக்கல் கட்டி ஆழ்கடலில் தூக்கி எறிய வேண்டுமென கூறுகிறார்.இன்றைய முதல் வாசகத்தில் நெறிகேடாக வாழ்பவர் பாவம் செய்து கடவுளை விட்டு விலகுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. எனில் பிறரைத் தவறு செய்யத் தூண்டும் போது நாமும் கடவுளைவிட்டு விலகி பிறரையும் விலகச் செய்கிறோம். இது நமது பாவத்தின் தன்மையை அதிகப்படுத்துகிறது அல்லவா. 

தனியாக வாழக்கூடியது அல்ல நமது வாழ்வு. நம்மோடு பலர் பயணிக்கின்றனர். நம்முடன் வயது முதியவர், இளையோர், சிறியோர், கற்றோர், கல்லாதோர் எனப் பலர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய எண்ணம், வாக்கு ,செயல் அனைத்தும் நல்வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டுமே தவிர ,பாவத்திற்கு தூண்டுதலாய் அமையக்கூடாது. அதே போல பிறருடைய வழி நம்மைத் தவறு செய்யத் தூண்டினால் நாம் கவனமுடன் அப்பாதையை விட்டு விலகவும் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே இன்றைய திருப்பாடலில் தாவீது வேண்டியதைப்போல என்றுமுள்ள வழியில் கடவுள் நம்மையும் நம்மோடு பயணிப்பவர்களையும் வழிநடத்த செபிப்போம்.

இறைவேண்டல்
அன்பு இறைவா!  நீதியான உண்மையான பாதையில் நாங்கள் நடக்கவும், பிறரை தீமை செய்ய தூண்டாமல் அவர்களுக்கு நல் வழிகாட்டிகளாய்த் திகழவும் வரமருளும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்