உயிரளிப்பவர் இறைவனே! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

இறந்த நம்பிக்கையாளர்கள் விழா 
I: எசே 37 37: 1,4-6, 12-14
II:திபா: 27: 1. 4.13-14 
III: 1பேதுரு 1:3-9
IV: லூக்7:11-17

நேற்றைய நாள் நாம் மகிழ்வுறும் திருஅவையாகிய புனிதர்களின் விழாவைக் கொண்டாடி ஆண்டவரை வணங்கினோம். இன்று நாம் துன்புறும் திருஅவையாகிய இறந்த நம்பிக்கையாளர்களுக்காக செபிக்கிறோம். 

தொடக்கத்திலே இறைவன் உயிரற்ற மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கினார். அவனுக்கு நல்லது எது கெட்டது எதுவென பகுத்தறிவை வழங்கினார். ஆயினும் பல வேளைகளில் தீமையை நாடிச் சென்று தன் தூய்மையை மனிதன் இழந்து கொண்டே இருக்கிறான். இறந்த பின் இந்த தூய்மையற்ற நிலையிலிருந்து நம்மைத் தூய்மையாக்க நாம் இருக்கின்ற இடம் "உத்தரிக்கும் தலம் "என்று நம் பாரம்பரியம் கூறுகிறது.  ஆம் தூய்மைப்படுத்துவது சில சமயம் வேதனையானதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டவே இறந்த நம்பிக்கையாளர்களை நாம் துன்புறும் திரு அவை என அழைக்கிறோம்.இத்துன்பங்கள் எதற்காக?  உயிரளிக்கும் இறைவன் அருளும் நிலைவாழ்வைப் பெறுவதற்காகவே. ஏனெனில் உயிரளிப்பவர் இறைவனே!

முதல்வாசகத்தில் உலர்ந்த எலும்புகளெல்லாம்  இறைவார்த்தையால்
சதையும் இரத்தமும் உயிர்மூச்சும் கொண்ட மனிதர்களாய் உயிர்பெறுவதை நாம் வாசிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் வார்த்தையின்  மனுஉருவாம் இயேசு நயிம் நகர கைம்பெண்ணின் மகனக்கு உயிரளிக்கும் நிகழ்வினைக் காண்கிறோம். ஆம் நம் கடவுள் மண்ணையும் மனுவாக்குவார். உயரற்றதையும் உயிர் பெறச் செய்வார். அவர் மனமிரங்கினால் எல்லாம் புத்துயிர்பெறும். இதை நமக்கெல்லாம் கற்பிப்பது இன்றைய நாள். 

கைம்பெண்ணானவள் தன் மகனை இழந்தபோது கேட்காமலேயே மனமிரங்கி உயிரளித்த இறைவன் இறந்த நம்பிக்கையாளர்களுக்காக நாம் செபிக்கும் போது மனமிரங்கி நிலைவாழ்வு அருளாமல் போவாரோ?   

இன்றைய நாளில் நாம் நம்மையே ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயமும்   உள்ளது.இறந்த நம்பிக்கையாளர்களுக்காக நாம் செபிக்கும் வேளையில் மண்ணிலே வாழ்கின்ற நாம் இறைவன் அளித்த உயிரைக்கொண்டு உயிரோட்டமான வாழ்வு வாழ்கிறோமா?  இல்லை பாவத்தில் வாழ்ந்து உலர்ந்த எலும்புகளின் நிலையிலும் உயிரற்ற சடலமாகவும் இருக்கிறோமா? ஆய்வு செய்வோம்.நாம் வாழ்வது சில காலம்தான்.  மண்ணக வாழ்வை விண்ணக வாழ்வின் முன்சுவையாக்குவது நம் கையிலேதான் உள்ளது. அதற்கு உயிரளிக்கும் இறைவனை நாடி உயிரோட்டம் உள்ளவர்களாக வாழ முயற்சிப்போம். இன்றைய நாளில் இறந்த நம்பிக்கையாளர்களுக்காக சிறப்பாக. வேண்டுவோம்.

இறைவேண்டல் 
உயிரளிக்கும் இறைவா! இறந்த நம்பிக்கையாளர்கள் மேலிறங்கி நிலைவாழ்வை வழங்குவீராக.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்