பிறர் மீது அக்கறை காட்டுவோமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - இரண்டாம் வியாழன்
I: எரே: 17: 5-10
II: திபா: 1: 1-2. 3. 4,6
III: லூக்: 16: 19-31
நாம் வாழும் இந்த உலகத்தில் கொடூரமான வியாதி கண்டுகொள்ளாமை. நம்மோடு வாழக்கூடியவர்களை அன்பு செய்து ஏற்றுக்கொள்வது முக்கிய பண்பாக இருக்கின்றது. ஆனால் பிறரை அன்பு செய்வதற்கு பதிலாக கண்டுகொள்ளாத சூழலும் இச்சமூகத்தில் வளர்ந்து வருகிறது.
ஒரு முறை சாலையிலேயே விபத்து ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் ஒரு மனிதர் கிடந்தார். ஆனால் யாரும் அவரை தூக்காமல் ஆம்புலன்ஸ் வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவரை தூக்கினால் சட்ட சிக்கல் வரும் என்று ஒதுங்கிக் கொண்டு நின்றனர். இறுதியில் தாமதமாக சென்ற காரணத்தினால்அந்த நபர் இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட அவலநிலை நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் வளர்ந்து வருகின்றன. ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்திலும் பார்க்க முடிகின்றது. யூதர்கள் செல்வத்தை கடவுளின் ஆசீர்வாதமாக கருதினர். ஏழ்மையை கடவுளின் சாபமாக கருதினர். ஆனால் உண்மையான ஆசிர்வாதம் என்பது செல்வத்தில் வளர்வது அல்ல ; எளிய உள்ளத்திலும் பகிர்தலிலும் தான் இருக்கின்றது என்ற ஆழமான சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகம் சிந்திக்க அழைப்பு விடுகின்றது. இன்றைய நற்செய்தியில் செல்வர் இலாசர் உவமையை தியானிக்கிறோம். அந்த செல்வரான அந்த நபர் அந்த ஏழை இலசருக்கு நேரடியாக எந்தத் துன்பமும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் செய்தது கண்டுகொள்ளாதது. தீமையை தவிர்ப்பது மட்டும் தூய வாழ்வு கிடையாது. நன்மை செய்ய வாய்ப்பு இருக்கிற இடத்தில் நன்மை செய்வதுதான் உண்மையான தூய்மைக்கு அழைத்துச் செல்லும். செல்வருக்கு நன்மை செய்ய பற்பல வாய்ப்புகள் இருந்தது. ஆனால் செல்வர் தன் வீட்டின் முன்னால் உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இல்லாமல் இருந்த அந்த நபருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
காரணம் அவரின் கண்டுகொள்ளா மனநிலையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். நம்மோடு வாழக்கூடியவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கொடூரமான பாவம் என்பதை இன்றைய நற்செய்தியில் அறிகின்றோம் . செல்வரின் கண்டுகொள்ளா மனநிலை அவருக்கு மோட்ச வாழ்வை இழக்கச் செய்தது. எனவே நம்முடைய வாழ்வில் துன்பப்படுபவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்ய முன்வருவோம். நன்மை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் இடத்தில் நன்மை செய்வோம். துன்பத்தில் அவதிப்படுபவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய பாவம் என்பதை உணர்வோம். எனவே பிறர் மீது அக்கறை காட்டக்கூடிய நல்ல மனநிலைக்காக இறைவேண்டல் செய்வோம்.
இறை வேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களோடு அன்றாட வாழ்வில் துன்பத்தில் வாழ்பவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்