மனிதர்களா? அல்லது மரங்களா நாம்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 6 புதன்
I: தொநூ: 8: 6-13, 20-22
II: திபா: 116: 12-13. 14-15. 18-19
III: மாற்: 8: 22-26
உயிர் இருந்தால் மட்டும் மனிதர்கள் மனிதர்களாக மாறி விட முடியாது. மாறாக தெளிவான பார்வையும் ஒரு மனிதனை முழுமையான ஞானமுள்ள உயிர்த்துடிப்புள்ள மனிதனாக மாற்றும் என்பதைத் தான் இன்றைய நநற்செய்தி வாசகம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பார்வையற்ற ஒரு மனிதருக்கு பார்வை அளித்து அருஞ்செயல் புரிகிறார். அம்மனிதனைத் தனியாக அழைத்து தன் உமிழ்நீரைப் பூசி பார்வை அளிக்கிறார். முதலில் தெளிவான பார்வை பெறாத அவர் மனிதர்களைப் பார்க்கிறேன் அவர்கள் மரங்களைப் போலத் தெரிகிறார்கள் என பதில் கூறுவதை நாம் காண்கிறோம். இவ்வார்த்தைகளை சற்று ஆழமாக சிந்திக்க நாம் கடமைப் பட்டுள்ளோம்.
தெளிவற்ற பார்வையாலேயே மனிதர்கள் மரங்களைப் போலக் காணப்பட்டார்கள். தெளிவற்ற பார்வை நம்மையும் மரங்களைப் போல உயிரோட்டமில்லாதவர்களாய் மாற்றுவதோடு பிறரையும் மனிதர்களாய் மதிக்காமல் மரங்கள் போல அதாவது உயிரற்ற உணர்வற்ற பொருட்களைப் போல நினைப்பவர்களாய் நம்மை மாற்றுகிறது. ஆம் தெளிவான பார்வை கொண்ட யாரும் தம்மையோ பிறரையோ மனிதர்களாய் கருதாமல் மரங்களாய்க் கருதுவதில்லை.
ஏனெனில் தெளிவான பார்வை ஒருவரை தன்னுடைய மற்றும் பிறருடைய மனநிலையை, நிறைவுகளை, உணர்வுகளை ,நற்செயல்களை,உறவுகளை க் காணத் தூண்டுகிறது.
தெளிவற்ற பார்வையோ தன்னிடமும் பிறரிடமும் உள்ள குறைகளை ,தவறுகளை, தீயவற்றை மட்டுமே காணும் படி பார்வையை மழுங்கடித்து விடுகிறது. இதனால் மனிதர்களை மனிதர்களாக அல்ல மரங்களாக அதாவது ஏதோ உயிரோட்டமின்றி வாழும் பொருட்களாக க் கருதும் நிலை உருவாகிறது. இன்று நம்முடைய பார்வையை நாம் ஆய்வு செய்வோம். தெளிவற்ற பார்வை இருப்பின் இயேசுவிடம் செல்வோம். அவர் நம் பார்வையைத் தெளிவு படுத்தி மரங்கள் போல உள்ள நம்மை உயிர்துடிப்புள்ள மனிதர்களாக மாற்றுவார்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே எங்கள் பார்வையைத் தெளிவுபடுத்தி எம்மை உயிரோட்டமுள்ள மனிதர்களாக மாற்றியருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்