சுமைகளை இறக்க வேண்டுமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகைக் காலம் இரண்டாம்  புதன்
I: எசா: 40: 25-31
II:திபா 103: 1-2. 3-4. 8,10
III: மத்: 11: 28-30

”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என ஆண்டவர் இயேசு கூறுகிறார். திருவருகைக் காலத்தில் ஆண்டவரின் பிறப்பு பெருவிழாவை கொண்டாடுவதற்காகவும் ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகவும் நம்மையே ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நாம் இயேசுவின் உண்மையான இயல்பைப் புரிந்துகொண்டு அவரின் இரக்கத்தை பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் இதயம் இரக்கம் மிகுந்த இதயம் என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.  பெரும் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான மக்கள் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாமும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ நபர்கள் மனப்பாரத்தோடு கவலையிலும் கண்ணீரிலும் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தான் எதற்கு வாழ்கிறோம் என்று தங்களை கேள்வி கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களுடைய வாழ்க்கையையே வெறுமையாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். எதைக் கண்டாலும் பயத்துடனும் நடுக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்னவெனில் நம்முடைய சுமைகளை சுகங்களாக மாற்ற வல்ல இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளாததே ஆகும்.

தந்தையாம் கடவுள் தன் ஒரே மகனை இந்த உலகத்திற்கு அனுப்பியதன் நோக்கம் நம்மீது அவர் அன்பு கொண்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டடி நாம் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காகவே. மக்கள் அனைவரும் பாவம் என்ற சுமையை தூக்கி சுமந்து கொண்டிருந்த நேரத்தில் அனைவரும் அந்தச் சுமைகளில் இருந்து விடுபட்டு சுகமான விடுதலை வாழ்வை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைமகனாகிய இயேசு மனிதராகப் பிறந்தார். எனவே இந்த திருவருகைக் காலத்தில் பாலன் இயேசுவிடம் நம்முடைய சுமைகள் எல்லாம் நீக்க நம்முடைய உள்ளத்திலுள்ள பாவக் கறைகளை நீக்கி தூய வாழ்வு வாழ முயற்சி செய்வோம். நம்மையே அவருக்கு உகந்த வகையிலே ஆயத்தப்படுத்துவோம். அதேபோல பிறருடைய சுமைகளை நீக்க நாம் உதவி செய்யும் பொழுது நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற சுமைகளை இறைமகன் இயேசு நீக்குவார்.  நாம்  பிறருடைய சுமைகளை இறக்க  உதவி செய்யும் பொழுது, நிச்சயமாக  நம்முடைய சுமைகளை இறக்க நம் ஆண்டவர் இயேசு உதவி செய்வார். நாமும் அவர்களுக்கு கடவுளைப் போல தென்படுவோம். 

இரண்டு வருடத்திற்கு முன்பாக நான் பணி செய்த பங்குத்தளத்தில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வீடு சந்தித்து வந்தேன். அந்த வீட்டு சந்திப்பு  பல நபர்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஒருமுறை ஒரு குடும்பத்தை சந்தித்தேன். அந்த குடும்பத்தில் ஒரு தாய் மட்டும் இருந்தார். பிள்ளைகள் அனைவரும் வெளியூரிலே குடி பெயர்ந்து சென்று விட்டனர். எனவே தனிமை அவரை மென்மேலும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய உள்ளக் குமுறல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத மனநிலையில் அவர் இருந்தார். நான் அவருடைய வீட்டை சந்திக்க நேர்ந்தது. அவரோடு நான் சந்தித்து பேசியபோது தன்னுடைய சோகங்கள், மனதில் புதைந்திருந்த ஏக்கங்கள், அனுபவித்து வந்த துன்பங்கள் போன்றவற்றை கண்ணீரோடு என்னிடம் பகிர்ந்துகொண்டார். பகிர்ந்து கொண்ட பிறகு நான் அந்தத் தாயிடம் "யார் உங்களை கைவிட்டாலும் நம் ஆண்டவர் இயேசு உங்களைக் கைவிடமாட்டார். அவரிடம் தஞ்சம் புகும் பொழுது அவருடைய இரக்கம் உங்களுக்கு நிறைவான அமைதியை கொடுக்கும் " என்று கூறினேன்.  நான் அவ்வாறு சொன்ன பிறகு அந்த தாயின் முகத்தில் ஒரு விதமான மகிழ்ச்சி காணப்பட்டது. "கடவுள் நிச்சயம் என்னை காப்பாற்றுவார்" என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கின்றது என்பதை அந்த தாய் பகிர்ந்து கொண்டார். அன்று முதல் அந்தத் தாயின் முகத்தில் நான் சோகத்தை பார்க்கவில்லை. பார்க்கும் நேரமெல்லாம் மகிழ்ச்சியைத் தான் பார்த்தேன். இத்தகைய பணியைச் செய்யத் தான்  நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். நம் ஆண்டவர் இயேசு நம்முடைய சுமைகளை நீக்க தயாராக இருக்கிறார். எனவே அவருடைய பெயரால் திருமுழுக்குப் பெற்ற நாமும் அவரைப் போலவே பிறருடைய சுமைகளை நீக்கக்கூடியவர்களாக மாற அழைக்கப்பட்டுள்ளோம்.

இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கும் நாம் நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்களையும் மகிழ்ச்சியோடு வாழ வைக்க அழைக்கப்பட்டுள்ளோம். ஏனென்றால் கொரோனா என்ற தீநுண்மியால் பல்வேறு துன்பங்களுக்கும் சுமைகளுக்கும் உள்ளாகியுள்ள மக்கள் யாராவது தங்களுடைய சுமைகளை இறக்கி வைக்க மாட்டார்களா? என்று ஏக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்து அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண வைக்கும் பொழுது நாம் கொண்டாடவிருக்கும் அந்த கிறிஸ்து பிறப்பு விழா ஒரு முழு நிறைவை பெறும். இந்த கொரோனா காலத்தில் கடந்த ஏழு மாதங்களாக எண்ணற்ற மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் பொருளாதர சிக்கல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இத்தகைய சுமைகள் எல்லாம் நீங்க நாம் பிறருக்கு நம்மாலான உதவிகளை செய்ய முன்வருவோம். அதேபோல நம் சுமைகள் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பாதத்தில் வைப்போம். இயேசு நம்முடைய சுமைகளை நிச்சயமாக நீக்கி நமக்கு மகிழ்வான வாழ்வை வழங்குவார். ஏனென்றால் இயேசுவின் இயல்பே பிறரின் சுமைகளை நீக்குவது தான். அவருடைய இதயம் இரக்கமும் அன்பும் அருளும் நிறைந்தது. எனவேதான் அவரால்  'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்,  நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்'  (மத்தேயு 11:28) என சொல்ல முடிந்தது.  இயேசுதான் பணி செய்த மூன்று ஆண்டுகளிலும் பல்வேறு நோயினால் வருந்தி சுமையோடு வாழ்ந்த மக்களுக்கு  சுகம் அளித்தார். பாவம் என்ற சுமையோடு பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகிய மக்களுக்கு மன்னிப்பு என்ற அருளினால் விடுதலையுள்ள சுகமான வாழ்வை வழங்கினார். தீய சக்தியின் ஆட்கொள்ளுதலால் சுமையோடு வாழ்ந்த மக்களுக்கு அவற்றிலிருந்து விடுதலை அளித்து சுகமான வாழ்வை வழங்கினார். இறுதியில் இந்த உலக மக்கள் அனைவருமே மீட்புப் பெற்று விடுதலை  பெற வேண்டும் என்பதற்காக கொடூரமான சிலுவைச் சாவை ஏற்று இரத்தம் சிந்தினார். இவ்வாறாக இயேசுவின் இயல்பே பிறருடைய சுமைகளை நீக்கி சுகமான வாழ்வை வழங்குவதாகும். எனவே நம்முடைய சுமைகள் எல்லாம் ஆண்டவர்  இயேசுவின் பாதத்தில் மனமாற்ற மனநிலையோடு எடுத்து வைக்கின்ற பொழுது நிச்சயமாக அவருடைய மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்று முழு விடுதலையைப் பெறமுடியும். அதேபோல அந்த விடுதலையைப் பிறருக்கும் கொடுக்கும் கருவிகளாக நாம்  மாறவும் முடியும். எனவே நம்முடைய சுமைகளைச் சுகமாக்கும்  இயேசுவிடம் நம்மை ஒப்புக் கொடுக்கவும் அவர் தரும் சுகமான வாழ்வை பெற்று  பிறருடைய சுமைகளைத் தாங்கக்கூடிய கருவிகளாக மாறவும் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
இரக்கத்தின் தெய்வமே இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் சந்திக்கின்ற சுமைகளைச் சுகங்களாக மாற்றி  நாங்களும் பிறரும் உமது மீட்பின் கனிகளைச் சுவைத்து உமக்காக எங்கள் உள்ளத்தை முழுவதுமாக ஆயத்தப்படுத்தி முழு விடுதலையை பெற்றிட தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்