தூய ஆவியாரால் இயக்கப்படும் சீடராவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

29 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 5ஆம் வாரம் - திங்கள்

தி. பணிகள்  14: 5-18                                            

யோவான் 14: 21-26

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், பவுல் அடிகளும்   பர்னபாவும்  இணைந்து ஆசியா மைனர் வழியாக தங்கள் பயணத்தை மேற்கொள்ளும்போது எதிர்ப்புகள் பல சந்திக்கின்றனர்.  எனவே, லிக்கவோனியாவில் உள்ள  லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள்.

லிஸ்திராவில் யூதர்களின் தொழுகைக்கூடம் ஓன்றும் காணப்படாததால் பவுலும் பரனபாவும்  இங்கே மக்கள்  கூடும் பொது இடங்களில் நற்செய்தியைப்  போதித்தனர். கூட்டத்தில், கால் வழங்காத ஒருவர் இருந்தார் (பிறவி முடவர்). அவர் பவுல் அடிகளின் போதனையைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வேளையில் தூய ஆவியாரின் தூண்டுதலால் அவரது முகத்தில் நம்பிக்கை மலர்ந்தது.  அதைக் கண்ணுற்ற பவுல் அடிகள், அவரை ஊற்று நோக்கி, உரத்த குரலில் ‘எழுந்து நட’ என்று கூறினார்.  சுற்றியிருந்த கூட்டம் பார்க்க, கால் வழங்காத அவர் எழுந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். 

இதைக் கண்ட கூட்டத்தில் ஒருவர் உணர்ச்சிப் பொங்க,  தெய்வங்கள் (சேயும், எர்மெசு) மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பினர். அவர்கள் பவுலை அவர்களின் தெய்வம் சேயுவாகவும், பர்னபாவை மற்றொரு தெய்வம் எர்மெசுவாகவும் கற்பனை செய்து கொண்டனர். எனவே, நகரின் சேயு ஆலய அர்ச்சகர்கள் காளைகளையும்  பூச்சரங்களையுப் கொண்டு வந்து  பவலுக்கும் பர்னபாவுக்கும் அர்ச்சனை பலி செலுத்த முடிவெடுத்தனர். 

இதைக் கண்ட இருவரும்   தங்களது ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, மக்களிடையே, அவர்களின் வழிபாட்டிற்கும் அர்ச்சனைக்கும் நாங்கள் தகுதியற்றவர்கள், “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்  தெய்வங்கள் இல்லை என்று உண்மையுரைத்து விலகிச் சென்றனர். 

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், இயேசு இறப்பதற்கு முந்தைய இரவில் தம் சீடர்களிடம் தொடர்ந்து பேசுகிறார். அவர்கள் உண்மையிலேயே சீடர்களாக இருக்க விரும்பினால், அவர் சொன்ன அனைத்தையும், குறிப்பாக ஒருவரையொருவர் அன்பு  செய்ய வேண்டும் என்ற கட்டளையை  அவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று இயேசு அவர்களைப் பணிக்கறார். அவர்கள் இதைச் செய்தால், இயேசுவும் தந்தையும்  அவர்களில் குடிகொள்வார்கள் என்று  வாக்குறுதி அளிக்கிறார்.  

நிறைவாக, இயேசுவின் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் அவர்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார் என்றும் உறுதிபட கூறுகிறார்.


சிந்தனைக்கு.

இயேசுவின்  அழைப்பை ஏற்று,  மூன்று வருடங்கள் இயேசுவோடு தங்கி, அவரது படிப்பினையைக் கேட்டார்கள், அவரது  பல  வல்ல செயல்களைக்  கண்டார்கள்,  இயேசுவின் மகிமையில் உருமாறுவதைக் தோற்றமாற்றத்தைக் நேரில் கண்டார்கள் திருத்தூதர்கள். அத்தோடு, இயேசுவே மெசியா, கடவுளின் மகன், உலக மீட்பர் என்ற நம்பிக்கையில்  வளர்ந்தார்கள். ஆனாலும், இந்த சீடர்கள் விரைவில் தம் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.

ஆதலால், அவர்களைத் தொடர்ந்துத் திடப்படுத்த ‘என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” என்று அவர்களுக்கு ஆதரவாக தூய ஆவியார் இருப்பார் என்று உறுதியளிக்கிறார். 

கடவுள் நமக்குள் இருந்து நம் மூலமாக அவரது மீட்புப் பணியைத் தொடர விரும்புகிறார். அதற்காகவே நம்மை  தேர்ந்தெடுத்துள்ளார். எனவே, நற்செய்தியைப் பிறருக்கு சொல்லாலும் செயலாலும் எடுத்துரைப்பதே நமது தலையாயப் பணி. கடவுளிடமிருந்து கிடைத்தக் கொடையாக நமக்கான அழைப்பைப் பார்க்க வேண்டும்.   கடவுள் நம்மிடம் பேசும்போது, அவருடைய ஆற்றல், அறிவுரை, மன்னிப்பு மற்றும் மற்ற எல்லா வகையான அருளையும் அளித்து, அவருடைய உடனிருப்பை நமக்கு உணர்த்தும்போது  நாம் ஆன்மீக ரீதியில் ஆறுதலடைகிறோம். ஆனால் தொடர்ந்து பிரச்சனை வரும்போது, நம்பிக்கையில் தளர்ச்சியடைகிறோம்.

முதல் வாசகத்தில் பவுல் அடிகளும் பர்னபாவும் நற்செய்திக்காகச் சொல்லொன்னா துன்பத்தை எதிர்கொண்டு விரட்டியடிக்கப்படுகிறார்கள். அப்பொழுதும், துணிவோடு அடுத்த ஊருக்குச் சென்று போதிக்கிறார்கள். தூய ஆவியார் அவர்களைத் திடப்படுத்தி அவர்களோடு இணைந்திருந்தார். நாமோ பின்வாங்குகிறோம். 

தம் சீடர்கள் தனக்குப் பின் நம்பிக்கையோடும் திடத்தோடும் பணிகளை மேற்கொள்ள தூய ஆவியாரின்  உதவி தேவை என்பதை இயேசு அறிந்தது போலவே, தூய ஆவியாரின்  உதவியும் வழிகாட்டுதலும் நமக்கும் தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். 

எனவே, பெந்தெகொஸ்து பெருவிழாவின் மாட்சிமிகு  கொண்டாட்டத்தை நோக்கி நாம் நெருங்கிச் செல்லும் இக்காலக்கட்டத்தில், தூய ஆவியாரின் வல்லமைக்காக மன்றாடுவோம்.  பல காரியங்கள் நமது சொந்த வல்லமையால் இயலாதவை. தூய ஆவியாரின் ஆற்றல் துணைகொண்டே நம்மால் நமது சீடத்துவ வாழ்வை வெற்றகரமாக வாழ முடியும். 

ஒரு காலத்தில் தூய ஆவியை கத்தோலிக்கத் திருஅவையில் மறக்கப்பட்ட கடவுளாகத்தான் இருந்தார். ஆனாலும், அவர் உறங்கவில்லை.  உலகைப் புதுப்பிக்கும் பணி தூய ஆவியாரின் செயல்பாடாக இருந்து வருவதை நாம் மனதில் கொண்டு அவரைப் போற்றி வழிபடுவதோடு, அவரில் இணைந்து வாழ நம்மை கையளிப்போம்.


இறைவேண்டல்.

அன்பு இயேசுவே, உமது தூய ஆவியாரால் நான் இயக்கப்படும் சீடராக என்றும் வாழ்ந்திட அருள்புரிவீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452