தேவை ஒரு மீட்பர் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

"ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் (லூக். 2:11)

ஆண்டுகள் ஆயிரக் கணக்கிலே ஆவலாய் ஏங்கிய உலகிலே இறையுரை நிறைவுற்ற நாளிலே இறைமகன் திரு மீட்பர் பிறந்தாரே... 'ஆம்' அன்று நமக்கு மீட்பு கிடைத்தது... ஆனால், இன்று வேண்டும் மீண்டுமொரு மீட்பர். ஈராயிரம் ஆண்டுகள் முடிவுற்ற போதிலும், இழந்ததை மீட்கத் தேவை ஒரு மீட்பர். அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகை ஆள அணுகுண்டுப் பண்பாடு அவனியை அழிக்க போர்களும், வன்முறைகளும், போராட்டங்களும், அடக்குமுறைகளும், ஆழிப்பேரலைகளும் இயற்கைச் சீற்றங்களும் உலகைச் சீர்குலைக்கும் இக்காலகட்டத்தில் சிதைந்தவற்றைச் சீர்படுத்த யூதாவின் சிங்கமென தேவை ஒரு மீட்பர்.

பஞ்சம், பசி, பட்டினி... பார்க்கும் இடமெல்லாம் பாலைவனம் பதவிகளும், பணங்களும், பட்டங்களுமே முதலிடம் பரிதவிக்கும் பாமரர்கள்...
நாற்காலிகளுக்குப் போட்டிபோட்டு நீதி,நேர்மையைத் தொலைக்கும் தலைவர்கள்.
நடுநிலைமை தவறி நாட்டை நாசப்படுத்தும் நயவஞ்சகர்கள்.
இவர்கள் மத்தியில், நன்மையானதை மட்டும் செய்ய தாவீதின் வம்சமென தேவை ஒரு மீட்பர்.

சமத்துவமற்ற சமுதாயம். 
சதி. சமயம், இனம், குலம் என்ற பிரிவுகள் 
வேலையில்லாத் திண்டாட்டம் 
மூட நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்பு 
மானுடத்தைக் கொல்லுகின்ற நாசச் செயல்கள்.
அன்றாட உணவுக்கும்
அல்லாடுகின்ற அன்றாடங்காய்ச்சிகள்...
ஆயிரம் இருந்தும் அமைதியை இழந்து தவிக்கும் மக்கள்....
இந்தச் சமுதாயத்தில் அக அமைதியைத் தந்திட
அமைதியின் மன்னரென தேவை ஒரு மீட்பர்...

ஆணும், பெண்ணும் சமம் என்ற நிலை மறந்து. தான் என்ற ஆணவத்தால் பிரிந்து நிற்கும் குடும்பங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்த குழந்தைகள் கடமையை மறந்த பெற்றோர்கள் உரிமையை இழந்த பிள்ளைகள்... 
தெருக்குடும்பங்களாகக் காட்சியளிக்கும் குடும்பங்களில் உண்மை மகிழ்ச்சி நிலவ திருக்குடும்பத்தின் தவப்புதல்வரென தேவை ஒரு மீட்பர்.

அறிவுக்கண்களை அகலவிரித்த கல்வி
அறியாமை மேகத்தில் பௌர்ணமியாய்ப் பிரகாசித்த கல்வி பணம் காய்க்கும் மரமாய் நிற்கின்ற அவலம் குணம் காய்க்க மறந்து நிற்கும் பட்ட மரம் இக்கல்வி நிலையங்களுக்கு நீர்பாய்ச்சி அவசியமானதை மட்டும் விளையச் செய்ய எஸ்ஸேயின் தளிரென தேவை ஒரு மீட்பர்...

கொள்கையில்லா வாழ்வு....
இலக்கில்லாத பயணம்... 
தெளிவில்லாத சிந்தனை... 
ஒழுக்கமற்ற செயல்பாடுகள்... 
அர்த்தமற்ற நிலைப்பாடுகள் அழிவுக்கு இட்டுச்செல்லும் அநாகரீகச் செயல்கள்
இவற்றில் தொலைந்துபோன 
நம் இளைஞர்கள் மனதில் உயர்கனவுகளை விதைக்க... 
புதிய விடியலைக் காண... 
விடிவெள்ளியெனத் தேவை ஒரு மீட்பர்.

உலகம் ...
நம் நாடு...
 நாம் வாழும் சமுதாயம் 
நம் உறவு சார்ந்த குடும்பம்... 
மறையுடலாம் திருஅவை... 
நம் தலத்திரு அவை...
 நமது பணித்தளம்.. 
துறவற இல்லங்கள்... 
மீண்டுமொரு மீட்பருக்காக
ஏங்கிக்கொண்டிருக்கிறது.
அனைத்துமே...
நாம் அனைவரும், அன்று பெத்லகேமில் பிறந்த
மீட்பரின் நீட்சிகள்.
தேவைப்படும் இடங்களில் மீட்பராகச் செயல்படுவோம்.
 

Tamil Survey Popup Image