ஜகார்த்தாவில் FABC 12வது நிறைவிறுதிப் பேரவைக்காக ஆசியத் திருஅவைத் தலைவர்கள் வருகை! | FABC | Veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப்பேரவையில் பங்கேற்பதற்காக, ஆசியா முழுவதிலுமிருந்து கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் பிரதிநிதிகள் ஜூலை 20 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரை வந்தடைந்தனர். ஒரு வாரம் நடைபெறவுள்ள இப்பேரவைக்கான வரவேற்பு, போக்குவரத்து, பதிவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து மேற்கொண்டனர்.

அதிகாலை முதலே ஜகார்த்தாவின் சுகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கண்டத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த பிரதிநிதிகளை அவர்கள் அன்புடன் வரவேற்றனர். விமான வருகை நேர அட்டவணை, அடையாள அட்டைகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுடன் தயாராக இருந்த அவர்கள், விமானங்களின் வருகை நிலவரத்தை கண்காணித்து, பிரதிநிதிகளை மாநாட்டு நடைபெறும் இடத்திற்கும் ஜகார்த்தாவின் முலியா ஹோட்டலுக்கும் அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்தனர்.

விமான நிலையத்தில் வரவேற்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஹோட்டலில் மற்றொரு குழுவினர் பதிவு மையத்தைத் தயார் செய்தனர். அங்கு பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டைகள், மாநாட்டு ஆவணங்கள் மற்றும் பேரவை நிகழ்ச்சித் திட்டம் வழங்கப்பட்டது. மேலும், சர்வதேசப் பயணத்தை முடித்து வந்தவர்களுக்கு அறை ஒதுக்கீடு, பயணப்பெட்டிகள் மற்றும் தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

வரவேற்பு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளோடு மட்டுமல்லாமல், பேரவைக்கான மற்ற தயாரிப்புகளும் முழுவீச்சில் நடைபெற்றன. ஊடகப் பிரிவினர் நேரடி ஒளிபரப்பு வசதிகளைச் சோதித்தனர். திருப்பலி ஏற்பாட்டுக் குழு நற்கருணைக் கொண்டாட்டங்களுக்கான இறுதி ஏற்பாடுகளை நிறைவு செய்தது. தகவல் தொடர்பு, மருத்துவம், விருந்தோம்பல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களும் பேரவை தொடங்குவதற்கு முன்பாக இறுதி சோதனைகளை மேற்கொண்டன.

உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவின் செயலர் அருள்பணி பிரான்ஸ் கிறிஸ்தி ஆதி பிரசேத்யா அவர்கள், பிரதிநிதிகளின் வருகை என்பது நிகழ்வின் நிர்வாக ஏற்பாடுகளின் தொடக்கம் மட்டுமல்ல என்று குறிப்பிட்டார்.

ஆசியத் திருஅவை எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி ஒன்றாகச் சிந்திப்பதற்காக அவர்கள் கூட்டரங்கிற்குள் நுழைவதற்கு முன், அவர்கள் சகோதரர், சகோதரிகளாக வரவேற்கப்படுகிறார்கள் என்ற அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று அவர் கூறினார்.

இந்த வரவேற்பு, பேரவையின் அடிப்படையாக விளங்கும் கூட்டொருங்கியக்க (Synodal) ஆவியை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஏற்பாடும் வசதியை மட்டும் வழங்குவதற்காக அல்ல; ஒன்றாக நடக்கும் திருஅவையின் ஆவியை வெளிப்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

பிரதிநிதிகளின் வருகைக்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக நடைபெற்றன. திருஅவைத் தன்னார்வலர்கள், விமான நிலைய அதிகாரிகள், குடியேற்றத் துறை, போக்குவரத்து நிறுவனங்கள், ஹோட்டல் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. விமான நேர மாற்றங்கள், கூடுதல் பதிவுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கையாளப்பட்டன.

பேரவையின் வெற்றி ஒரே ஒரு குழுவின் முயற்சியால் அல்ல என்றும், “இறைமக்கள் அனைவரின் கூட்டு ஒத்துழைப்பினாலேயே இது சாத்தியமாகிறது. பொதுநிலையினர், துறவியர், அருள்பணியாளர்கள், ஆயர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசுத் துறை இணைப்பாளர்கள் தங்களுக்குரிய பொறுப்புகளை ஏற்று ஆசியத் திருஅவைக்குச் சேவை செய்வதில் ஒன்றிணைந்துள்ளனர்” என்றும் அருள்பணி பிரான்ஸ் அவர்கள் தெரிவித்தார்.

பேரவையில் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் தொடர்பு அதிகாரிகளில் (Liaison Officer) ஒருவரான ஹிலாரி அரிஸ்டோடெல் அவர்கள் இந்தப் பொறுப்பில் பணியாற்றுவது பெருமைக்குரியது என்று கூறினார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் தொடர்பு அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்குப் பெரும் பேறாகும்” என்று அவர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 150 பிரதிநிதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம், தகவல் தொடர்பு, மருத்துவம் மற்றும் விருந்தோம்பல் குழுக்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், பல்வேறு குழுக்கள் ஒரே நோக்கத்திற்காக இணைந்து செயல்பட்ட விதம், பேரவையை வெற்றிகரமாக நடத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த அனுபவம் உணர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாலைக்குள் பெரும்பாலான பிரதிநிதிகள் முலியா ஹோட்டலை வந்தடைந்து தங்களது அறைகளில் தங்கினர். இதற்கிடையில், ஏற்பாட்டுக் குழுவினர் மறுநாள் வரவிருந்த பிரதிநிதிகளின் பயண அட்டவணைகளை மீளாய்வு செய்து, தொடக்க அமர்வுகளுக்கான இறுதி ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இந்தோனேசிய கத்தோலிக்கத் திருஅவையின் ஏற்பாட்டில் நடைபெறும் FABC-யின் 12வது நிறைவிறுதிப்பேரவை, “ ஒன்றிணைந்த மனமாற்றமும், ஆசியாவில் பாலங்களை அமைக்கும் திருஅவையின் பணியும்” என்ற கருப்பொருளில், ஆசியா முழுவதிலுமிருந்து திருஅவைத் தலைவர்களை ஒன்றிணைத்து, இறைவேண்டல், கலந்துரையாடல் மற்றும் ஆன்மிகப் பகுத்தறிதலுக்கான ஒரு முக்கிய மேடையாக அமைகிறது.

Tamil Survey Popup Image