நம்மை மீட்பது இயேசுவின் அன்பே | Veritas Tamil

“டிஜிட்டல் உலகம் புதிய மறைப்பணி தளமாகிறது” – ஆசிய டிஜிட்டல் மறைப்பணியாளர்களிடம் பிலிப்பைன்ஸ் தகவல் தொடர்புத் தலைவர்

வேகமாக மாறிவரும் டிஜிட்டல் சூழலில், தெளிந்த சிந்தனை, பகுத்தறிவு மற்றும் வலுவான சமூக உணர்வுடன் நற்செய்தியை எடுத்துச் செல்ல வேண்டிய புதிய மறைப்பணி தளமாக டிஜிட்டல் உலகம் மாறியுள்ளது என்று பிலிப்பைன்ஸ் பேராயர் ரெக்ஸ் ஆண்ட்ரூ அலார்கோன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 12 அன்று க்யூசான் நகரில் உள்ள திருத்தந்தை இரண்டாம் ஐான் பால்  அரங்கில் நடைபெற்ற திருப்பலியின்போது பேராயர் அலார்கோன் இவ்வாறு தெரிவித்தார். இது முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையின் இரண்டாவது நாள் நிகழ்வாகும்.

செப்டம்பர் 10 முதல் 13 வரை நடைபெறும் இந்தச் சந்திப்பில், ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் ஒன்று கூடி, டிஜிட்டல் கலாச்சாரம் அதிகரித்து வரும் சூழலில் திருஅவையின் பணியைப் பற்றி சிந்தித்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புக்கான ஆயர் ஆணையத்தின் தலைவரான பேராயர் அலார்கோன், “Disruption” – அதாவது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு செயல்முறையில் ஏற்படும் பெரிய மாற்றம் அல்லது இடையூறு குறித்து விளக்கினார்.

வரலாற்றில் பல்வேறு முக்கிய முன்னேற்றங்கள் ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 16ஆம் நூற்றாண்டின் கடற்பயணங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளுடனான சந்திப்புகள், உலகைப் பற்றிய புதிய புரிதல்களின் தோற்றம் ஆகியவற்றை அவர் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார்.

“அது ஒரு பெரிய மாற்றம். அது உலகளவில் பலவற்றை மாற்றியது,” என்று பேராயர் அலார்கோன் கூறினார்.

இன்றைய காலத்தில் புதிய மறைப்பணி தளம் கடல்களோ, வான்வெளியோ அல்ல; டிஜிட்டல் உலகமே புதிய மறைப்பணி தளம் என்று அவர் வலியுறுத்தினார்.

“புதிய மறைப்பணி தளம் கடல்களும் அல்ல, வான்வெளியும் அல்ல; டிஜிட்டல் உலகமே. இது நமக்கு இணையான ஒரு தனி உலகம் அல்ல; நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமே. நாம் ஏற்கனவே அதில் இருக்கிறோம்.”

திருஅவையைப் பொறுத்தவரை, டிஜிட்டல் தளங்களை அன்றாட மனித வாழ்க்கையிலிருந்து தனியான ஒன்றாகக் கருத முடியாது என்று அவர் கூறினார். மக்கள் தங்களது கருத்துகளை உருவாக்கும் இடமாகவும், உறவுகளை வளர்க்கும் இடமாகவும், தகவல்களைச் சந்திக்கும் இடமாகவும், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் இடமாகவும் டிஜிட்டல் உலகம் மாறியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு குறித்த எச்சரிக்கை

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய நெறிமுறை, தத்துவம், கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த கேள்விகளை உருவாக்கி வருவதாகவும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இது முக்கியமான சவாலாக இருப்பதாகவும் பேராயர் அலார்கோன் எச்சரித்தார்.

தொழில்நுட்பத்திடம் மனித சிந்தனையை முழுமையாக ஒப்படைத்துவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

“நாம் இப்போது நமது அறிவாற்றலை இயந்திரங்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறிய அவர், “நமது சிந்தனையை இயந்திரங்களிடம் விட்டுவிடக் கூடாது” என்று டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அவர் “Critical Feeling” – உணர்வுகளை விமர்சன ரீதியாகப் புரிந்துகொள்ளும் திறன் என்ற கருத்தையும் முன்வைத்தார். அதாவது, நம்முள் எழும் உணர்வுகளை அடையாளம் கண்டு அவற்றை ஆராய்வதோடு, நமது பதில்களைச் சிந்தனை மற்றும் தெளிந்த பகுத்தறிவின் அடிப்படையில் அமைத்துக்கொள்வதாகும்.

சமூக ஊடகங்கள் மிக விரைவாக கோபம், பயம், அதிர்ச்சி, பாராட்டு, பொறாமை அல்லது கேளிக்கை போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடும் என்று அவர் கூறினார்.

எனவே, கிறிஸ்தவ டிஜிட்டல் சாட்சிகள் தங்களது உள்ளடக்கம் வெறுமனே உணர்ச்சியைத் தூண்டுகிறதா அல்லது மக்களை உண்மை, இரக்கம் மற்றும் உரையாடலின் பாதைக்கு அழைத்துச் செல்கிறதா என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

டிஜிட்டல் மறைப்பணியின் அடிப்படை – சாட்சி

பேராயர் அலார்கோனின் பார்வையில், டிஜிட்டல் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு கிறிஸ்தவர்களின் பதில் இறுதியாக கிறிஸ்துவின் சாட்சியாக இருக்க வேண்டும்.

இந்தப் பேரவையின் கருப்பொருள் திருத்தூதர் பணிகள் 4ஆம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்ட “நாங்கள் பேசாமல் இருக்க முடியாது” என்பதாகும்.

இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி அறிவிப்பதை நிறுத்துமாறு கட்டளையிடப்பட்டபோதிலும், பேதுருவும் யோவானும் தொடர்ந்து அதை அறிவித்த நிகழ்வை இந்த வசனம் எடுத்துரைக்கிறது.

இதே ஆவிதான் இன்றைய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்களையும் வழிநடத்த வேண்டும் என்று பேராயர் கூறினார்.

செல்வாக்கு மட்டுமல்ல – சமூகத்தை உருவாக்குதல்

டிஜிட்டல் மறைப்பணி என்பது சமூக ஊடகங்களில் அதிக செல்வாக்கைப் பெறுவது மட்டுமல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

“மற்றவர்களைச் செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்ல; சமூகங்களையும் உருவாக்குவது நமக்கான அழைப்பு. நாம் திருஅவையாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்,” என்று பேராயர் கூறினார்.

டிஜிட்டல் மறைப்பணியாளர்களும் தகவல் தொடர்பாளர்களும் தங்களது பணியை ஒரு தனிப்பட்ட திட்டமாக கருதாமல், கிறிஸ்துவின் பெயரிலும் திருஅவையின் பெயரிலும் மேற்கொள்ளப்படும் பணியாக நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்களின் டிஜிட்டல் இருப்பு மற்றும் பணியின் வழியாக கிறிஸ்து இன்னும் அதிகமாக வெளிப்பட வேண்டும் என்பதே இறுதி நோக்கம் என்று அவர் கூறினார்.

“அவர் உயர வேண்டும்; நான் குறைய வேண்டும்” என்ற கிறிஸ்தவ பணிவின் அழைப்பையும் பேராயர் நினைவூட்டினார்.

“நம்பிக்கையைத் தருபவர் இயேசுவே. நம்மை மீட்பது இயேசுவின் அன்பே; நமது வார்த்தைகளோ, நமது உள்ளடக்கங்களோ அல்ல.”

ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு முன் நிற்கும் சவால், டிஜிட்டல் உலகில் வெறுமனே இருப்பது அல்ல. அதை ஒரு மறைப்பணி தளமாக அடையாளம் கண்டு, கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருப்பதும், உண்மையை வளர்ப்பதும், சமூகத்தை உருவாக்குவதும், வேகமாக மாறிவரும் உலகில் மக்களுடன் இணைந்து பயணிப்பதுமே அவர்களின் அழைப்பு என்று பேராயர் அலார்கோன் வலியுறுத்தினார்.

Tamil Survey Popup Image