விடைத் தேடும் உலகம் | அருட்பணி நா பார்த்தசாரதி சே.ச, | Veritas Tamil

           விடைத் தேடும் உலகம்

“வாழ்க்கை இருளானதே என்று அச்சம் கொள்ளாதே,
இருளில் தான் பல கனவுகள் முளைக்கிறது”

இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு கேள்விக்கான விடையாக வருகிறதைப் பார்க்கிறேன். அந்த வினாவிற்கு அவர்களால் மட்டுமே விடையளிக்க முடியும். அவர்களால் அதை உணராதப் போது அவ்வினா தொடர் தேடலாகவே இருக்கிறது. விதைகள் முளைக்கிறது அல்லது மடிகிறது.

இரண்டுமே அதன் கையில் உள்ளது. மண்ணில் புதைக்கப்படுகிற போது முட்டி மோதி விருட்சமாக வேண்டும் என்ற தன்னம்பிக்கை, முளைத்தப் பின்பு தன் தோகையாகிய இலைகளை விரிக்கும் போது கொண்டாடுகிறது. பிறந்தக் குழந்தைத் தன் தாயின் மடியைவிட்டு தவழத் துவங்கும் போது தரையில் தன்னிலை உணர்ந்து எழ அல்லது விழக் கற்றுக் கொள்கிறது. விழும் அனைவரிடமும் இரண்டு வாய்ப்புகள் உள்ளது ஒன்று எழு அல்லது விழுந்தே கிட. விடை விழுந்துக் கிடப்பவரிடம் உள்ளது.


இன்றைய இளைஞர்களின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் கடல் அலைப் போல ஓயாமல் வருவதைப் பார்க்க முடிகிறது. அதனால் மூத்தோர்க்கு சவால்கள் இல்லை என்று பொருள் அல்ல. இன்றைய சவால்களை எதிர்க்கொள்ளும் பக்குவம் அல்லது மனநிலை மூத்தோரிடம் உள்ளது. இளைஞர்கள் தொடர்ந்து தடைகளைக் கண்டு ஒன்று தடம் மாறுகிறார்கள் அல்லது தடுமாறுகிறார்கள். இந்நிலை மாறிட தன்னிலை உணர்த்தல் மிகவும் முக்கியம்.


நான் எங்கே நிற்கிறேன் என்பதை உணர்ந்தவரே, நான் எங்கே செல்ல வேண்டும் என்ற பாதையைத் தேடுகிறார், தொடர்ந்து பயணிக்கிறார். நான் ஏன் பிறந்தேன் என்ற அடிப்படை வினாவிற்கு விடைத் தேடுபவர்கள் பிறப்பின் பொருளை உணர்ந்து அந்தப் பாதையில் நிறைவுக் காண முயல்கிறார்கள். ஒரு நாள் ஒரு இளம் பெண்ணிடம் கேட்டேன் உன் வாழ்வில் நீ சாதிக்க விரும்புவது என்ன? அதற்கு அவர் புன்னகையோடு ‘இதுவரை அதைப்பற்றி யோசிக்கவில்லை, வாழ்க்கைப் போகிற போக்கில் போக வேண்டியது தான்’ மிகவும் எதார்த்தமானப் பதில். இதுதான் பல ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களின் பதிலாக உள்ளது. இலக்கு தெளிவில்லாமல் இருப்பவர்கள் இருந்தும் எந்தப் பயனுமில்லை என நினைக்கிறேன். அதே சமயம் ஆடம்பரம், பேராசையோடு வாழ்ந்தால் தான் வாழ்க்கை என்பதையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆக வாழ்க்கை என்பது இருப்பதில் நிறைவுக் கண்டு, இல்லாதவருக்கு இருப்பதைப் பகிர்ந்து, விடைத் தேடும் உலகில் நம்மால் இயன்ற பதிலிருப்பை அளித்துச் செல்வதுதான் உண்மையான மனித வாழ்க்கையின் பொருளாக இருக்கும்.


பணம் இருப்பவரிடம் கொடுப்பதற்கான குணம் இல்லை, குணம் இருப்பவரிடம் கொடுப்பதற்கானப் பணம் இல்லை. இதுதான் இவ்வுலகம். தொடர்ந்து தேடுவோம். பணமும், குணமும் சங்கமிக்கும் தருணம் வாழ்வின் விடைக்காணும் தருணமாக இருக்கும். அது இந்தப் பேராசையான உலகில் அவ்வளவு எளிதல்ல என்றாலும் சாத்தியமான ஒன்றாகும்.
நம் தேடல்கள் தொடரட்டும் அதற்கு முன்பு நம் வினாக்கள் தெளிவாக இருக்கட்டும்!

அருட்பணி நா பார்த்தசாரதி சே.ச,

சென்னை