உறவாய் வளர பணிவாய் வாழ்க! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும் (121)

பணிவோடு வாழ்தல் அழியாப் புகழ் நிலையைத் தரும். பணிவின்றி வாழ்தல் கொடிய பழி இருளில் தள்ளி விடும். உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரோடும் நாம் கொண்டுள்ள உறவைச் சிதைத்து விடக்கூடாது. நம் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அரணாக, குளத்தின் கரையாக அமைந்துள்ள நட்புறவை வளர்த்து வாழ வேண்டும். பிளவுகளை உருவாக்கிப் பிரிவினைகளை ஏற்படுத்தி மானுடத்தைப் பிரித்து மனித மாண்பை அழித்து விடக்கூடாது; மாந்தர் அனைவரும் கடவுளின் சாயல் என்பதை மறுத்து விடக்கூடாது. பிறர் உங்களை விட மதிப்புக்குரியவர் என எண்ணி, பணிவோடு வாழ மறந்து விடக்கூடாது.

எழில் கொஞ்சும் அந்த ஊரில் ஓர் ஆறு ஓடியது. ஆற்றின் தென்பகுதி ஊர்; வடபகுதி காடு. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் ஒரு பாலம் இருந்தது. ஒற்றையடிப் பாதை போன்று அது அமைந்திருந்தது. அவ்வூர் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் அவ்வழியே தஞ்சமாயிருந்தது.

அவ்வூரில் செல்லையா என்னும் ஒருவர் இருபது ஆடுகளை வளர்த்து வந்தார். ஒவ்வொரு நாளும் பாலத்தின் வழியே ஆடுகளை வழிநடத்தி காட்டில் மேய்த்து வந்தார். அன்று பாலத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கர் கருப்பு வண்ணத்தையும் வெள்ளை நிறத்தையும் கொண்டிருந்த ஆடுகள் அழகாக நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்து செல்லையாவிடம் ஆர்வத்தோடு, தான் பொன்னையா என்று அறிமுகம் செய்து பேசத் தொடங்கினார்.

'ஐயா இந்த ஆடுகளை எல்லாம் வாங்கினீங்க...? எப்போ

'நீங்க வெள்ளாடுகளைக் கேட்கிறீங்களா... கருப்பாடுகளைக் கேட்கிறீங்களா... வினவினார் செல்லையா.

ஏதோ வேறுபாடு இருக்கும் போலும் என்றெண்ணி, 'வெள்ளாடுகள்!?' என்றார்.

ம்...ஓராண்டுக்கு முன்னால்

அப்போ 'கருப்பாடுகள்!?...

ம்... ஓராண்டுக்கு முன்னால்...' என்று அதே விடையைச் சொன்னார்.

பொன்னையாவுக்கு அவர் சொன்னது வியப்பாயிருந்தது. இருப்பினும் கேள்வியைத் தொடர்ந்தார்:'ஒவ்வொரு நாளும் இந்த ஆடுகள எவ்வளவு தூரத்துக்கு கூட்டிட்டு போறீங்க?.

'நீங்க வெள்ளாடுகளைக் கேட்கிறீங்களா, கருப்பாடுகளக் கேட்கிறீங்களா?' - செல்லையா

பொன்னையா அதிர்ந்து போனார். 'வெள்ளாடுகள்'? என்று கேட்டார்.

'ஆங்... மூன்று மைல் தூரம் வரைக்கும்

'கருப்பாடுகள்...?'

'ஆங்... மூன்று மைல் தூரம் வரைக்கும்... என்று அதே விடையை மீண்டும் சொன்னார் செல்லையா.

பொன்னையாவுக்கு எரிச்சலோடு கூடிய வியப்பு... ஆயினும் அடுத்தக் கேள்வியைத் தொடுத்தார்: 'ஐயா இந்த ஆடுகள எத்தன மணிக்குத் திரும்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வருவீங்க'

எவ்வகை சலனமும் இன்றி அதே கேள்வியைக் கேட்டார். செல்லையா. நீங்க வெள்ளாடுகளக் கேட்கிறீங்களா... கருப்பாடுகளைக் கேட்கிறீங்களா...?

பொன்னையா கோவத்தோடு தொடர்ந்தார். 'வெள்ளாடுகள்?...'

'வெள்ளாடுகள ஆறு மணிக்கு...'

'அப்படின்னா கருப்பாடுகள்...?.

'கருப்பாடுகள... ஆறு மணிக்கு...'

பொன்னையா கடுஞ்சினத்தோடு... 'யோவ் என்னையா உமக்கு என்ன கிறுக்கா... ஆடுகளப் பத்தி நான் கேட்கிறேன்... நீரு, வெள்ளாடா... கருப்பாடான்னு கேட்டுட்டு ஒரே விடைய சொல்கிறீரே... என்னைப் பார்த்தா உமக்கு எப்படி இருக்கு...?'

'ஐயா... கோவப்படாதீங்க.. நாள் அப்படி சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு...'

'அப்படியா... என்ன காரணம்? - பொன்னையா,

'இந்த வெள்ளாடுகள் எல்லாம் இருக்கே... அவையெல்லாம் என்னுடையவை'... 'ஓஹோ... அப்படியா... அப்போ இந்த கருப்பாடுகள்...? - பொன்னையா,

செல்லையா அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்: 'கருப்பாடுகளும் என்னுடைய ஆடுகள் தாம்.

பொன்னையா தன் தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடியே போய்விட்டார்.

பாலத்தில் ஓரிரு ஆடுகள் மட்டும் நடந்து போய்க் கொண்டிருந்தன. அப்பொழுது, ஒரு வெள்ளாடு ஊரை நோக்கி பாலத்தில் வந்து கொண்டிருந்தது. ஒற்றையடிப் பாதை என்பதால்... பாலத்திலேயே ஓரிரு ஆடுகள் படுத்துக் கொண்டன... அவ்வெள்ளாடு தாண்டித் தாண்டி வந்து கொண்டிருந்தது.

கடைசியாக ஒரு கருப்பாடு... அந்தக் கருப்பாடு படுக்கவில்லை... வெள்ளாடும் படுக்கவில்லை... இரண்டும் முட்டி மோதிக் கொண்டன... செல்லையா சண்டையை நிறுத்தி ஆடுகளப் பாதுகாக்க ஓடினார்...ஓடினார்...

ஐயகோ... அதற்குள் அந்த இரண்டு ஆடுகளுமே ஆற்றில் விழுந்து விட்டன... கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

செல்லையா ஓ... வெனக் கதறி அழுதார். பயனேதுமின்றி... காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மிரண்டு போய் நின்றன. பணிந்து படுத்துக் கொண்டு தாண்டிச் செல்ல வழிவிட்ட ஆடுகள் பாதுகாப்பாய்ச் சென்றன. நீயா... நானா... என்று அடக்கமில்லாமல் செறுக்கோடு நடந்து கொண்ட இரண்டு ஆடுகளுமே அழிவைச் சந்தித்து விட்டன.

தலையான பாவங்களுள் முதன்மையானது ஆணவம். அது மாந்தரின் அழிவுக்கு அடித்தளம். பிரித்துப் பார்ப்பது ஒரு நோய்... அந் நோயினால் செல்லையா இழந்தார் இரண்டு ஆடுகளை.சாதிகளாய் மதங்களாய்ப் பிரித்துப் பார்த்து செருக்கு கொள்வதனால் உயிர்களையும் உறவுகளையும் இழக்கின்றோம்.

உறவை வளர்த்தெடுப்போம்! உறவோடு எல்லாரையும் வாழ வைப்போம். பணிவையே பாலமாக்குவோம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் 
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு; 
ஒற்றுமை ஓங்கிட மலரணும் பணிவு.

எழுத்து
அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன்